கொங்கு நாடும் தமிழும்!

திருமூலர், தம் காலத்தில் நிலவிய தமிழ் நாட்டின் பகுதிகளைத் "தமிழ் மண்டலம் ஐந்து' எனக் குறித்துள்ளார். எனவே, அவர் காலத்தில் தமிழகம் ஐந்து மண்டலமாகப் பகுக்கப்பட்டு ஆளப்பட்டதெனத் தெரிகிறது.
கொங்கு நாடும் தமிழும்!

திருமூலர், தம் காலத்தில் நிலவிய தமிழ் நாட்டின் பகுதிகளைத் "தமிழ் மண்டலம் ஐந்து' எனக் குறித்துள்ளார். எனவே, அவர் காலத்தில் தமிழகம் ஐந்து மண்டலமாகப் பகுக்கப்பட்டு ஆளப்பட்டதெனத் தெரிகிறது.

தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்தில் தமிழகம் சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களது ஆட்சிக்கு உட்பட்டதாய், மூன்று தனி நாடுகளாய் விளங்கியதென்பது, "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு' என்று குறிப்பிடுவார். இவை மூன்றும் குடபுலம், குணபுலம், தென்புலம் எனவும் வழங்கப்பட்டன.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் சேர வேந்தர்க்குரிய குடபுலம், "மகநாடு, கொங்கு நாடு' என இருந்ததாகவும்; சோழ வேந்தர்க்குரிய குணபுலம் "சோழ நாடு, தொண்டை நாடு' என இரு பகுதிகளாகவும் பிரிந்து தனித்தனி நாடுகளாயின. இவ்வாறு தமிழ்நாடு சேரமண்டலம்,  தொண்டை மண்டலம், பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம் என ஐந்து மண்டலங்களாயின. இவ்வாறு பிரிந்து நின்றது கடைச் சங்கத்திற்குப் பின்பு என்பார் பேராசிரியர் க.வெள்ளைவாரணர்.

இது மூன்றாம் நூற்றாண்டை ஒட்டியது என்பர். இவ்வாறு ஐந்து மண்டலங்களாகப் பிரிந்திருந்த செய்தியைத் திருமூலர் தாம் அருளிச்செய்த திருமந்திரத்தில் குறிப்பிடுவதால், அந்நூல் தோன்றிய காலம் கி.பி 3-ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்பது பேராசிரியர் முடிவாகும்.

"கொங்கு நாடு' சேர வேந்தரது ஆட்சியிலிருந்து விலகி, தனியுரிமை பெற்ற நாளில் அந்நாட்டை அடுத்துள்ள புறநாடுகளிலிருந்த முடியரசர்களும், தமிழரல்லாத அயலவர் பலர் குடியேறத் தொடங்கிய செய்தியை மயிலை சீனி.வேங்கடசாமி  கொங்கு நாட்டு வரலாற்றில் பதிவு செய்துள்ளார்.

அப்பதிவில், பாண்டிக்கொடுமுடி "பசும்பூன் பாண்டியன்' என்று சங்க நூல் குறிக்கும், பாண்டியன் வெற்றியைக் குறிக்கும் சொல்லாட்சி என்றும்; அதியமான் எழினி என்ற பெயர் கொண்டவர்கள், அதிகை வீரட்டானம் என்று பெயர் பெற்றனர் என்றும் கூறிய ஆய்வில், திருமூலரும் திருமுறையும் கூறிய கொங்கு மண்டலத் தமிழ்ப் பாடலை நினைவுகூர வாய்ப்பில்லை மயிலையார்க்கு.

நாட்டில் அரசியலாட்சிக்கு உட்படாத அறைமோகுடிகளும், வழிப்போவாரைத் துன்புறுத்திப் பொருள் கவரும், ஆறலைக் கள்வர்களும் ஆங்காங்கே கொங்கு நாட்டில் இடம்பெற்றனர். அதனால், அந்நாட்டில் மக்கள் அமைதியாகப் போக்கு-வரவு புரிவதற்குரிய பாதுகாப்பு இல்லாது போயிற்று. வழிப்போவார் தங்கள் கையிலுள்ள பொருள்களோடு, தாம் உடுத்தியிருந்த ஆடையினையும் பறிகொடுக்க வேண்டிய அவல நிலைக்கு உள்ளாயினர். இங்ஙனம் ஆறலைப்போர் பல்கி வாழும் கொங்கு நாட்டில் புதியராய்ச் சென்றோர், பாதுகாப்பற்ற நிலையில் பெரிதும் வருத்தமுற்ற செய்தியை, 

"ஆர்வமுடையவர் காண்பர் அரன்தனை
ஈரமுடையவர் காண்பார் இணையடி
பாரமுடையவர் காண்பர் பவந்தன்னைக்
கோர நெறியொடு கொங்கு புக்காரே' 

என வரும் திருமந்திரப் பாடல் எடுத்துக் காட்டியுள்ளது. கி.பி.5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் முன்றுறையரையனார் என்பார், தம் "பழமொழி நானூறு' எனும் நூலில், "ஏமரார் கொங்கேகினார்' என்று இதனை ஒரு பழமொழியாக எடுத்தாண்டிருப்பது ஒப்பு நோக்கி உணரத்தக்கது.

இத்துயர நிலை சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலம் வரையிலும் தொடர்ந்திருந்தது என்பது, "கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப் பாரிலை' என வரும் தேவாரத் தொடர் கொங்கு நாட்டின் இயல்பை வெளிப்படுத்தும் தமிழாகும்.

சுந்தரரே, திருமுருகன்பூண்டியில் சேரமான் கொடுத்த பொருள்களை சிவபெருமான் உத்தரவுப்படி பூதகணங்கள் வேடராகக் கவர்ந்து, பின் அப்பொருள்களைப் பெற்ற வரலாறு கொங்கு நாட்டின் 7-ஆம் நூற்றாண்டு வரை இச்சம்பவங்கள் நடந்து வந்துள்ளதை, (சுந்தரர் வரலாறு மூலம்) அவரது தமிழ் மூலம் அறியலாம்.

மயிலை சீனி.வேங்கடசாமி எழுதிய கொங்கு நாட்டு வரலாற்றில் சேர, சோழ, பாண்டியர் கொங்கு நாட்டில் போர் செய்த சம்பவங்களில் திருமூலர், பழமொழி நானூறு, தேவாரம் தொடர்பாக எடுத்துக்காட்டத் தவறினாலும், பேராசிரியர் க.வெள்ளைவாரணர் திருமூலர் கால ஆய்வில் கொங்கு நாட்டுத் தமிழ்த் தொடரை நினைவுகூர்ந்தது போற்றத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com