தந்தையர் ஒன்பதின்மர்!

குருபாததாசர் என்ற புலவர் இயற்றிய "திருப்புல்வயல் குமரேச சதகம்' என்ற நூலில்,  நமது வாழ்க்கையில் கொள்ளுவன, தள்ளுவன, அறிவன என்ற முறையில் நல்ல நல்ல நீதிகள் சொல்லப்பட்டுள்ளன. 
தந்தையர் ஒன்பதின்மர்!

குருபாததாசர் என்ற புலவர் இயற்றிய "திருப்புல்வயல் குமரேச சதகம்' என்ற நூலில்,  நமது வாழ்க்கையில் கொள்ளுவன, தள்ளுவன, அறிவன என்ற முறையில் நல்ல நல்ல நீதிகள் சொல்லப்பட்டுள்ளன. 

"தந்தை' என்றாலே நம்மைப் பெற்றவர் மட்டும்தான்  நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், நம்மைப் பெற்றெடுத்த தந்தையைத் தவிர மேலும் எட்டு பேரை தந்தை நிலையில் வைத்து எண்ண வேண்டும்; போற்ற வேண்டும் என்கிறார் குருபாததாசர். 

"தந்தைகள்' என்ற தலைப்பில் சொல்லப்பட்ட செய்யுள் "தந்தை'  என்ற நிலையில் விளங்கும் உத்தமர்கள் ஒன்பது பேரை அறியத் தருகிறது.

முதல் தந்தை - பெற்றெடுத்தவர்;  இரண்டாவது தந்தை- (ஒரு வேளை தந்தையை இழந்தவராக இருந்தால்) ஆதரித்து வளர்த்தவர்;  மூன்றாவது தந்தை - கல்வியைக் கற்றுக் கொடுத்தவர்; நான்காவது தந்தை - ஞான உபதேசம் செய்த குருநாதர்; ஐந்தாவது தந்தை - குற்றம் குறைகள் இல்லாமல் நல்ல முறையில் ஆட்சி செய்யும் அரசர். ஆறாவது தந்தை ‍-ஆபத்து நேரும்போது, "அஞ்சாதே!' என்று சொல்லி ஆபத்திலிருந்து காப்பாற்றி துயரத்தைத் தீர்த்தவர்;  ஏழாவது தந்தை -‍ (நம்மிடம்) அன்புகொண்ட உள்ளம் உடையவர்;  எட்டாவது தந்தை - தன் மனைவியைப் பெற்றெடுத்தவர் (மாமனார்); ஒன்பதாவது தந்தை - நமது வறுமையைத் தீர்த்தவர்.

இந்த ஒன்பது பேரையும் தினந்தோறும் தந்தையாகக் கருதி மரியாதை செலுத்துவதே நீதியாகும் என்கிறார் குருபாததாசர். அப்பாடல் வருமாறு:

தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதற் பிதா!
தனை வளர்த்தவன் ஒரு பிதா!
தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா!
சார்ந்த சற்குரு ஒரு பிதா!
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா!
நல்ல ஆபத்து வேளை தன்னில்
"அஞ்சல்' என்று உற்றதுயர் தீர்த்துள்ளோர் ஒரு பிதா!
அன்புளம் உளோன் ஒரு பிதா!
கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா!
கலி தவிர்த்தவன் ஒரு பிதா!
காசினியில் இவரை நித்தம் பிதா என்றுளம்
கருதுவது நீதியாகும்!
மவுலிதனில் மதிஅரவு புனைவிமலர் உதவுசிறு
மதலை எனவரு குருபரா!

மயிலேறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே! (பா.6)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com