குணவாயிற் கோட்டம்!

சிலப்பதிகாரம், "இளங்கோவடிகள் குணவாயிற் கோட்டத்தில் அரசு துறந்திருந்ததாகப்' பதிவு செய்கிறது. இக்குணவாயிற் கோட்டம் பற்றி அப்பரடிகள், அடைவு திருத்தாண்டகத்தில் அருளியுள்ளார்.
குணவாயிற் கோட்டம்!

சிலப்பதிகாரம், "இளங்கோவடிகள் குணவாயிற் கோட்டத்தில் அரசு துறந்திருந்ததாகப்' பதிவு செய்கிறது. இக்குணவாயிற் கோட்டம் பற்றி அப்பரடிகள், அடைவு திருத்தாண்டகத்தில் அருளியுள்ளார்.

"மடுவார்தென் மதுரை நகர் ஆலவாயில்
மறிகடல்சூழ் புனவாயில், குணவாயில்
ஆன எல்லாம் புகுவாரைக் கொடுவினைகள்
கூடா அன்றே'

இக்குணவாயில் இன்று கேரளத்தில் "திருவஞ்சைக்களம்' என்று பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலக் குறிப்பு பற்றி அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார் இருவரும் குறிப்பிடும் செய்திகள்: அரும்பதவுரையாசிரியர், "குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகள்' என்று மட்டும் கூறுவார். 

அடியார்க்கு நல்லார், "குணவாயில் - திருக்குணவாயில் என்பது ஓர் ஊர்; அது வஞ்சியின், கீழ்த்திசைக்கண் உள்ளது. அஃது ஆகுபெயர். அது குணக்கண் (கீழ்த்திசை) வாயில் குணவாயிலாகும். கோட்டம் - அருகன் கோயில்' என்று குறிப்பார்.

அரும்பத உரையாசிரியர், "குணவாயிற் கோட்டத்துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோவடிகள்' என்று மட்டும் குறிப்பிட்டு, அருகன் முன்னர் எனக் குறிப்பிடாமல் "கடவுளர் முன்னர்' எனக் குறிப்பிட்டதால், இக்குணவாயிற் கோட்டம் பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் (சிவபெருமான்) என்பதை உணரலாம். இதுவே "திருவஞ்சைக்களம்' எனப்படுகிறது.

சுந்தரர் ஆடி சுவாதி நாள் (குரு பூஜை) இங்கு சிறப்பாக இன்றும் நிகழ்கிறது. சேரரது தலைநகரம் வஞ்சி நகர் ஆகும். பிற்காலத்தில் "அஞ்சைக்களம்' என்று மருவி வழங்கியதாக சுந்தரர் தேவாரப் பாடல் மூலம் அறியலாம். சேர நாட்டு அரசர் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவனின் தந்தையாவார். "இமயவரம்பன்' என்ற பெயரும் சிலப்பதிகாரத்தில் பதிவாகியுள்ளது.

இன்றும், இமயத்தில் உள்ள திருக்கேதாரத்துக்குத்தான் சிவபெருமான் அருள் வேண்டிப் பலரும் திருத்தலப் பயணம் செய்கின்றனர். இரண்டாவது கயிலை யாத்திரை ஆகும். இமய உச்சியில் உள்ள மலைமுகடு இயல்பான சிவலிங்கமாக உள்ளது. இதை வழிபட்ட கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திர சோழன்தான், தமிழ்நாட்டுப் பாணியில் அர்த்த மண்டபமும், சிற்பமும் அமைத்திருப்பது மட்டுமல்லாமல், கெளரிகுண்டம் என்னும் திருவனேகதங்காவதம் எனும் தலத்திலும் கோயில் எழுப்பியுள்ளதை - அதுவும் தமிழ்நாட்டுச்  சிற்பப் பாணியில் உள்ளதை இன்றும் காணலாம்.

நெடுஞ்சேரல் என்பது நீண்டதூரம் என்ற பொருளில், கேதாரத் தலத்தின் பயணத்தையே குறிக்கும். இவ்வாறு சேரநாட்டு நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் கங்கைக்கரை வரை சிவ வழிபாடு செய்திருந்ததை சிலப்பதிகாரமும் பதிவு செய்கிறது.

"இளங்கோ' என்பது முருகனைக் குறிக்கும். இவரது சமயப் பொறையால் பலரும் சமண சமயம் சார்ந்தவர் என்று கணித்துக் கூறுவர். தந்தையும், தனயனும் சிவபெருமானை வழிபட்டுச் சிறப்பித்த சம்பவம் சிலம்பில் கூறப்பட்டுள்ளது.

இளங்கோவடிகள், சிலம்பின் நிறைவான வரந்தரு காதையில், "தெய்வம் தெளிமின் / தெளிந்தோர்ப் பேணுமின்' என்று, கண்ணகி மூலமாகப் பதிவு செய்வார். ஆகவே "குணவாயிற் கோட்டம்' என்பது "திருவஞ்சைக்களம்' என்ற சிவத்தலத்தையே  குறிக்கும் என்ற முறையில், மூத்த உரையாசிரியராகிய அரும்பத உரைக்காரர், "கடவுளர் முன்னர்' என்று குறித்திருப்பதை, பின்வந்த அடியார்க்குநல்லார் "அருகன் கோயில்' என்று குறிப்பிடுவது, சேரர் வழி மரபுக்குப் பொருந்தாத  செய்தியாகும்.

இளங்கோவடிகள் "சமயப் பொறையோடு சிலம்பில் பல சமயங்களையும் சிறப்பாக எடுத்துக்கூறியதை முன்னிட்டு, அடிகளைச் சமண சமயம் சார்ந்தவர் என்று குறிப்பது பொருந்தாது. 

இனி "அடியார்க்கு நல்லார்' என்ற பெயர்த்தொடர் "திருக்கருவூளானிலை' திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பதிவாகியுள்ளது. அது -

"விண்ணுலா  மதிசூடி வேதமே
பண்ணுளார் பரமாய பண்பினர்
கண்ணுளார்  கருவூருளானிலை
அண்ணலார் அடியார்க்கு நல்லரே!' - (3)

இப்பாடலின் தொடரை பெற்ற "அடியார்க்கு நல்லார்' என்ற பெயரை "தமிழ்த் தாத்தா' பதிப்பித்த சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர் குறிப்பில் இல்லை என்றும், "அடியார்க்கு நல்லார்' என்ற பெயர் சிவபெருமானையே குறிப்பிடும் என்றுள்ளது. எனினும் நாம்தான் முயன்று உண்மை காண வேண்டும். 

சேர மன்னர்கள் மூவரும் (நெடுஞ்சேரல், செங்குட்டுவன், இளங்கோவடிகள் ஆகியோர்) சிவநெறி போற்றி வாழ்ந்தவர் என்று அறியலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com