உழவராற்றுப்படை!

"ஆற்றுப்படை' எனும் இலக்கிய மரபு மனித நேயம் கொண்ட மரபாகும். இது தமிழ் மொழியைத்தவிர பிறமொழி இலக்கியங்களில் காணப்படவில்லை என்பர் அறிஞர்.
உழவராற்றுப்படை!


"ஆற்றுப்படை' எனும் இலக்கிய மரபு மனித நேயம் கொண்ட மரபாகும். இது தமிழ் மொழியைத்தவிர பிறமொழி இலக்கியங்களில் காணப்படவில்லை என்பர் அறிஞர். "துயர்படுவோரை ஆற்றுதல்' என்பதாகப் பொருள்தரும் ஆற்றுப்படை நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் ஒரு புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். அது, முருகன் சூர்மாதடிந்த உக்கிர நிலையில் காணப்படுவதால் முருகனை ஆற்றுப்படுத்தல், துயர்படுவோரை முருகனிடம் ஆற்றுப்படுத்தல் ஆகிய இரண்டாகும்.

அதேபோல் வேலாற்றுப்படையும் ஆயின், பிற ஆற்றுப்படை நூல்கள் புரவலனிடம் இரவலனை ஆற்றுவிக்கும் முறையில் அமைந்துள்ளன. இவ்வாறெல்லாம் ஆற்றுப்படை நூல்கள் இருந்தபோதிலும், ஆற்றுப்படைக்கு அடிப்படையாவது சங்க இலக்கியத் தோழிகள் மற்றும் தொல்காப்பியம் கூறும் "வாயில்கள்'தான் என்றே கூறலாம்.

நெடுநல்வாடை இலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து உறக்கம் இன்றி இருந்த தலைவியை (அரசியை) தோழியரும் செவிலியரும்  (செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்-நெடுநல்) ஆற்றியிருந்தனர். அவள்தம் மனத்தைத் தேற்றியிருந்தனர்.

செம்முகம் கொண்ட செவிலியர் யாவரும் இன்முகத்தோடு இருபுறமும் நின்று, அரசனின் பிரிவால் வாடும் அரசியாரின் துயர் நீக்க அவளுடைய மனக்கவலை தீர நகைச்சுவைகளையும், பல நெடிய கதைகளையும், அவளுக்கு ஏற்ற இதந்தரும் இனிய சொற்களையும் கூறி ஆற்றுவித்தனர்.

இதேபோல் போர்ப் பாசறையில் தங்கியுள்ள அரசன் போரில் விழுப்புண்பட்ட வீரர்களுக்கு ஆறுதல் மொழிகளைக் கூறி, வீரர்களின் விழுப்புண்களுக்கு மருந்திடுகின்றான் (நெடு:185:188). இதுவும் ஆற்றுப்படையே!

பொருள் தேடச் சென்ற தலைவனை நெடிது நினைந்து துயர்மீள முடியாது தலைவி வருந்துகின்றாள். அவ்வாறு வருந்தும்  தலைவிக்குத் தோழி ஆறுதல் மொழிகளைக் கூறி ஆற்றுப்படுத்துகிறாள் (குறுந்.பாலை-37). பொதுவாக, தோழியின் கூற்றாக அமைந்த சங்கப் பாடல்களே ஆற்றுப்படை இலக்கியம் வளர அடிப்படை எனலாம். இருப்பினும்,  திருவள்ளுவரின் திருக்குறள் (சில குறள்களில்) யாவருக்கும், எவற்றுக்குமான "ஆற்றுப்படை' எனலாம். எவ்வாறெனில்,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று!

என எல்லோரையும் ஆற்றுப்படுத்தும் திருக்குறளை "ஆற்றுப்படை' எனவும் கூறலாமே? உலகிலுள்ள எல்லா உயிர்களும் உழவரையே நம்பி வாழ்கின்றன. உலகம் உழவுத் தொழிலை நம்பியே உள்ளது. உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர். யாவருக்கும் உணவளிப்பவர். உழவர் யாரிடமும் யாசித்து நில்லாதார் (1031);

உழவர்கள் உலகத்திலுள்ள யாவருக்கும் ஆற்றி இருந்து வேளாண்மை செய்து உணவளிப்பவராவர். அவர்கள் பல பொற்குடை, வெண்கொற்றக்குடை போன்ற சிறப்புகளோடு மக்களை அரசாட்சி செய்யும் மன்னர்கள் பலருக்கும் மன்னராக இருந்து உழவென்னும் தன்குடையின்கீழ் காத்து வருபவர்கள் (1032) என்கிறார். "உழவர்களே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் எக்காலத்திலும் உண்ணக் கொடுத்து உயிர்வாழச் செய்பவர்கள். ஆகவே, உழவை நாடியே அனைவரும் செல்லுங்கள்' என்று திருவள்ளுவர் உலக மக்களை ஆற்றுப்படுத்துகின்றார்.

அதுமட்டுமின்றி, வயலுக்குச் சென்று உழவு செய்யாதவர்களை நிலமானது தன் கணவனை மனையாள் (ஊடுவது) கோபிப்பதுபோலே கோபங் கொள்ளும். ஆகவே, நிலத்தை நாடி உழவு மேற்கொள்ள அனைவரும் செல்லுங்கள் (1039) என்று ஆற்றுப்படுத்துகின்றார் திருவள்ளுவர். ஆகவே, திருக்குறளை இனி "உழவராற்றுப்படை' எனப் புதுப்பெயர் கொடுத்தும் பெருமைப்படுத்தலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com