வாரணவாசிப் பதம்    

தலைவியைப் பார்த்துப் பேச தலைவன் பகலில் (பகற்குறி) இரண்டு மூன்று நாள்களாக வருகின்றான். அவன் வருகையைத் தலைவி அறிவாள். எனினும், தலைவனைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்துகொண்டு அவனுடைய சந்திப்பை  தவிர்க்
வாரணவாசிப் பதம்    
Published on
Updated on
2 min read


உலகப் புகழ்பெற்ற "ரீடெர்ஸ் டைஜெஸ்ட்' என்னும் இதழும், உலகப் புகழ்பெற்ற "பெங்குவின்' என்ற நூல் வெளியீட்டு நிறுவனமும் இணைந்து,  இந்தியாவின் மிக முக்கியமான நகரங்கள், இடங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள "இந்தியாவிற்கான வழிகாட்டி' என்னும் தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளன.

அந்த நூலின் 208-ஆவது பக்கத்தில் "காசி' என நாம் அழைக்கும் வாரணாசி (வாராணசி), கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்து விளங்கியது என்றும், உலகின் பழைமையான நகரங்களில் அதுவும் ஒன்று என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இன்றைக்கு 2,700 ஆண்டுகளுக்கு முன்னரே வாரணாசி புகழ் பெற்று விளங்கியது என்பது தேற்றம்.

சங்க இலக்கியங்கள் இன்றைக்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பது அறிஞர்கள் முடிவு. அவற்றுள் பரிபாடலும், கலித்தொகையும் காலத்தால் பிற்பட்டவை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கலித்தொகை 60-ஆவது பாடலில் "வாரணவாசிப் பதம்' என்னும் தொகைமொழி காணப்படுவதால்,  "ரீடெர்ஸ் டைஜெஸ்ட்'  இதழின் காசி பற்றிய காலக்கணக்கீடு கலித்தொகை ஆய்வாளர்களின் கருத்துடன் ஒத்துப் போகின்றது என்பதை உணரலாம். காலக் கணக்கீட்டை விடுத்து, அந்த 60ஆவது பாடலின் செய்திக்குச் செல்வோம்.

தோழி கூற்று என்னும் தலைப்பில் தோழியும் தலைவியும் பேசிக்கொள்வதாகப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. தலைவி பேசும் பகுதியில் உள்ள செய்திதான் நாம் மிகவும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. நமது புரிதலுக்காகப் பாடலைக் காட்சிப்படுத்திக் கொள்வோம்.

தலைவியைப் பார்த்துப் பேச தலைவன் பகலில் (பகற்குறி) இரண்டு மூன்று நாள்களாக வருகின்றான். அவன் வருகையைத் தலைவி அறிவாள். எனினும், தலைவனைப் பார்த்தும் பார்க்காதது போலிருந்துகொண்டு அவனுடைய சந்திப்பை  தவிர்க்கிறாள்.

தலைவனோ "ஏன் இந்தப் பாராமுகம்' எனக் காரணம் தெரியாமல் தவித்துப் போகிறான். தலைவியின் இந்த நாடகத்தையும், தலைவனின் துன்பத்தையும் அறிந்த தோழி, தலைவியிடம் சென்று, ""நமது தலைவன் எப்பேர்ப்பட்டவன், சாதாரணமானவனா? போர்க் களிற்றைப் போன்ற அவன் உள்ளம் உடைந்து உருகி நிற்கின்றானே! அவன் படும் துன்பத்தைப் பார்த்து  என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லையே! நீ அவன் வருத்தத்தைப் போக்க வேண்டும்''  என்கிறாள்.

இதைக் கேட்ட தலைவி, ""நீ அவன் மேல் கொள்ளும் பரிவு எதற்காக? எனக்குப் புதிதாக இருக்கிறது உன் செயல்'' எனச் சொல்லி மேலும், ""உன் செயல் எப்படி இருக்கிறது என்றால் வாரணாசி நகரத்தார் நிலையைப் போன்று இருக்கிறது'' என்கிறாள்.

""அது என்ன வாரணாசி நகரத்தார் நிலை?'' எனக் கேட்கிறாள் தோழி. தோழியின் இந்த வினாவுக்கு விடையாகத் தலைவி சொல்வதைக் கேட்கும் முன்பு வாரணாசி பற்றிச் சிறிது அறிமுகம் செய்து கொள்வது நல்லது. அப்போதுதான் தலைவி கூற்றின் பொருள் புரியும்.

காசி என்றாலும், பெனாரஸ் என்றாலும், வாரணாசி, வாரணவாசி என்றாலும் வடநாட்டில் கங்கைக் கரையில் அமைந்திருக்கிற ஒரு நகரத்தையே குறிக்கும்.
வரண், அசி என்னும் இரண்டு நதிகள் நமது கண்ணுக்குப் புலப்படாத வகையில், காசிக்கு வலது இடது பக்கங்களில் அந்நகரைச் சுற்றிப் பூமிக்கடியில் செல்வதாக நெடுஞ்சேய்மை நம்பிக்கை. அதனால்தான் அந்நகரை வாரணவாசி என்றழைப்பர். "வாரணவாசி' என்பதன் மரூஉ 
"வாரணாசி'.

காசி நம் தமிழ்நாட்டிலிருந்து ஏறக்குறைய 2,500 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு பகல் இரண்டு இரவுகள் எனத் தொடர் வண்டிப் பயணம் அமைகிறது. மூன்று அல்லது நான்கு மணிநேர ஆகாய விமானப் பயணம். நடந்து செல்வதானால் பல மாதங்கள் ஆகும். இக்காலத்திலும் நடந்து செல்வோர் சிலர் உண்டு.
பண்டைக் காலத்தில் நடைப்பயணத்தைத் தவிர வேறு வழியில்லை. இடைப்பட்ட ஊர்களில் அந்தந்த ஊர் மக்களின் மன நிலையைப் பொருத்து மாட்டு வண்டிப் பயணங்கள் அமையும். எனினும், மாதங்கள் பல கடந்து காசியைச் சென்றடையும் பயணியரின் உடல் மிகவும் துன்பமுற்றே இருக்கும். உடல் வருத்தத்தை முகம் காட்டும், உள்ளம் உணர்த்தும்.

இவ்வாறு மிகவும் துன்பப்பட்டு வருந்தி காசியைச் சென்றடையும் பயணியரை, அந்நகரத்து மக்கள் பார்த்து வரவேற்று, பயணியர் அடைந்த வருத்தங்களையும், துன்பங்களையும் தாங்கள் அடைந்ததுபோலக் கருதி வருந்துவர். பின்பு அவர்களைத் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று உபசரிப்பர். காசி நகரத்தாரின் இந்தப் பண்பாட்டை தலைவி அறிந்திருந்தாள்.

வழிப்போக்கர்களாகிய பயணியரின் துன்பங்களைத் தங்கள் துன்பங்களாகக் கருதி அவற்றைக் களைய வேண்டி காசி நகரத்தார் மேற்கொள்ளும் செயலைத்தான் இப்பாடலில் "வாரணவாசிப் பதம் பெயர்த்தல்' என்று தலைவி சுட்டிக் காட்டுகிறாள்.

"தெருவின் கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு நீ வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில நீ நின் மேல் கொள்வது எவன்?' என்கிறாள் தலைவி. ""தெருவில் செல்லும் அயலோர் சில காரணத்தால் வருத்தமுற்றுச் செல்வர். அந்த வருத்தத்தை நீ உன் மீது ஏற்றிக்கொண்டு பேசுகிறாய். இது எப்படி உள்ளது எனின், காசி நகரத்தார் செயல் போன்று உள்ளது'' என்கிறாள். "தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவோர்' என்னும் தொடர் தலைவனைக் குறித்து நிற்கிறது. தலைவனின் வருத்தத்தைத்  தோழி எடுத்துக் கொண்டு வந்து சொல்வது காசி நகரத்தார் பரிவினைக் காட்டுகிறது.

சரி! இப்பாடலிலிருந்து நாம் அறிந்து கொள்வது யாது?  "வடவர் நம்மவர் அல்லர்- நல்லவரும் அல்லர்' என்று நமது தமிழகத்தில் பரப்பப்பட்டுவந்த - இன்றும் பரப்பப்படும் செய்தி முற்றிலும் தவறானது, வடவரின் பண்பாட்டுக்கு இது முழுவதும் முரணானது என்பதை இப்பாடலிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை'

எனத் திருவள்ளுவர் கருத்தை மெய்ப்பிப்பது போல வடநாட்டார் செயல் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. வடவர், தென்னவர் என நாட்டாலும்; ஆரியர், தமிழர் என இனத்தாலும் நமக்குள் பிரிவினை பேசுவதும், பண்பாட்டுக் கூறுகளைத் தவிர்ப்பதும் பேதையர் செயல் என்பதைப் புரிந்துகொள்ள 
முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com