சோழர் கால பள்ளிக்கூடங்கள்

சோழர் கால பள்ளிக்கூடங்கள்

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டியன் பாடிய "கற்றல் நன்றே' எனும் புறநானூற்றுப் பாடலில் ""வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே'' - என்று

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டியன் பாடிய "கற்றல் நன்றே' எனும் புறநானூற்றுப் பாடலில் ""வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே'' - என்று கூறுவதால் கல்வி எல்லா நிலையினர்க்கும் கிட்டும் சூழலில்தான் ஈராயிரம் ஆண்டு கால தமிழ்ச் சமுதாயம் இருந்துள்ளது. பின்னர் எழுதப்பெற்ற நாலடியாரில் காணப்பெறும் ""கடைநிலத்தோர் ஆயினும் கற்று அறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும்'' - என்ற கூற்றின் வாயிலாக அது மேலும் உறுதி பெறுகின்றது. சங்ககாலப் புலவர் பலர் "ஆசிரியர்' என்ற பெயரொட்டுடன் காணப்பெறுகின்றனர். பெண்பாற் புலவர்தம் பாடல்கள் பல நமக்குக் கிடைப்பதாலும், கல்வி புகட்டும் ஆசிரியர் பலர் தமிழகத்தில் திகழ்ந்ததாலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடின்றி கல்வி பயிலும் வாய்ப்பு சிறந்திருந்தமையை நாம் அறிய முடிகிறது.

சங்ககால கல்விச்சூழல் தொடர்ந்து பல்லவர் காலத்தும், சோழர் காலத்தும், பாண்டியர் காலத்தும்,  பிற மரபினர் காலத்தும் எவ்வகை இடையூறும் இன்றி தொடர்ந்தமையை கல்வெட்டுச் சாசனங்களும் இலக்கியங்களும் மெய்ப்பிக்கின்றன. இந்நெறிமுறைகளுக்குச் சோதனைக்காலம் என்பது கி.பி. பதினான்காம் நூற்றாண்டேயாகும். இதுதான் தமிழகத்தின் இருண்ட காலம் என்பது மெய். களப்பிரர் காலம் இருண்டகாலம் எனக் கூறுவது மாயையே. குறிப்பாக சோழர் காலத்தில் சோழ அரசியர் பலருக்கு "அதிகாரிச்சிகள்' என்ற பெயரில் உயர்நிலை அலுவலர்களாக பெண்கள் திகழ்ந்துள்ளனர். அதுபோன்றே நீதிமன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாகப் பணிபுரிந்துள்ளனர். திருக்கோயில்களில் திருமுறைகளையும், பிரபந்தங்களையும் பண்ணிசையோடு பாடுதல், ஆடற்கலை வாயிலாக அபிநயித்து ஆடுதல் போன்ற பணிகளையும் பெண்களே செய்துள்ளனர். தமிழ்க்கல்வி பயின்றமையால்தான் இவையனைத்தும் அன்று சாத்தியமாயின.

இரண்டாம் குலோத்துங்கனின் தலைமை அமைச்சராகத் திகழ்ந்தவர் சேக்கிழார் பெருமானாவார். அவர் திருத்தொண்டர் புராணத்தில் பல்லவனின் சேனாதிபதியாகத் திகழ்ந்த சோழநாட்டுத் திருச்செங்காட்டங்குடியினரான பரஞ்சோதியாரின் வரலாற்றை விரிவுற பதிவு செய்துள்ளார். 

பரஞ்சோதியார் காவல்தொழில் புரியக்கூடிய மாமாத்திரர் என்ற குலத்தில் பிறந்தவர் என்பதைக் குறிப்பிடும் சேக்கிழார், அவர் ""ஆயுள்வேதக் கலையும், அலகில் வடநூற்கலையும், தூய படைக்கலத் தொழிலும் துறைநிரம்ப பயின்றவர்'' என்று குறிப்பிடுவதால் அவர் தமிழிலும் பிற மொழிகளிலும் பல்துறைக்கல்வி பயின்றவர் என்பதறிகிறோம்.

அவர் வரலாற்றைக் கூறும் சேக்கிழார், திருச்செங்காட்டங்குடியில் அவர் வாழ்ந்த மாளிகை பற்றி கூறுவதோடு குடும்பத்தவர் பற்றியும் விவரித்துள்ளார். 

அவர்தம் ஒரே மகனுக்கு மூன்றாவது வயதில் தலைமுடி நீக்கும் (மொட்டையடிக்கும்) மங்கலம் செய்ததைக் கூறுவதோடு அந்த வயதிலேயே செங்காட்டங்குடியில் இருந்த பள்ளிக்கு அச்சிறுவனைப் படிக்க அனுப்பியதையும் பின்வருமாறு உரைத்துள்ளார்.


வந்துவளர் மூவாண்டில் மயிர்வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொற்றெளிவிற் செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமறவந்தவரைப் பள்ளியினில் இறுத்தினார்

என்பார். இதனால் தமிழ்நாட்டில் பல்லவர், சோழர் ஆட்சிக்காலங்களில் மூன்று வயது நிரம்பிய சிறார்களைப் பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் இருந்துள்ளது.
மூன்று வயதிலேயே உள்ளூர் பள்ளிக்கு அனுப்பப்பெற்று வந்த சிறுவன் ஐந்து பிராயம் எய்தியபோது அந்தப் பள்ளியில்தான் பயின்றான் என்பதைக் குறிப்பிடுவதோடு, ஒருநாள் பள்ளிக்குச் சென்ற அச்சிறுவனை அழைத்துவர பரஞ்சோதியார் ஏவலர் எவரையும் அனுப்பாமல் அவரே அப்பள்ளிக்குச் சென்று அவனை அழைத்து தோள்மீது சுமந்தவாறு வீடு திரும்பியதையும் சுட்டுகின்றார். அவர்தம் மனைவியார் அச்சிறுவனை எதிர்கொண்டு அழைத்து அணைத்தார் என்பதை ஒரு காட்சியாகவே தம் பாடலில் பதிவு செய்துள்ளார். அதனை உரைக்கும்போது,

புதல்வன் ஓத அணைந்த பள்ளியின் உடன்
கொண்டு எய்த கடிது அகன்றார் (பா. 58)  என்றும்,
பள்ளியினிற் சென்றெய்தலும் பாதச் சதங்கை மணி ஒலிப்பப்
பிள்ளை ஓடிவந்து எதிரே தழுவ எடுத்துப் பியலின்மேல்
கொள்ள அணைத்துக்கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்
வள்ளலார் தம்முன் சென்று மைந்தன் தனை எதிர்வாங்கி

 (பா. 59)

என்றும் குறிப்பிட்டுள்ளார். பெரியபுராணம் எனும் அருந்தமிழ் நூலினைக் காட்சியாகக் காட்டுவதற்கெனவே இரண்டாம் இராஜராஜ சோழனால் எடுக்கப்பெற்ற தாராசுரம் கோயிலின் திருச்சுற்று மாளிகையில் பரஞ்சோதியார் வரலாறு காட்டுவதற்கென்றே ஒரு மண்டபத்தை எடுத்துள்ளான். அதில் பரஞ்சோதியார், திருவெண்காட்டு நங்கையார், சிறுவன் சீராளன் ஆகிய மூவரும் ஒரு பீடத்தில் நிற்குமாறு, அவர்கள்தம் பெயர்கள் பொறிக்கப்பெற்ற செப்புச்சிலை ஒன்றினை இடம்பெறுமாறு செய்தான். மேலும், அம்மண்டபத்து உத்திரத்தில் நாற்புறமும் பரஞ்சோதியார் புராணக் காட்சிதனை சிற்றுருவ தொடர் சிற்பக் காட்சிகளாக செதுக்குமாறு செய்துள்ளான். அதில் பரஞ்சோதியார் பள்ளிக்குச் செல்லுதல், பள்ளியினில் ஆசிரியர் ஒருவர் உயர்ந்த ஆசனமொன்றில் வீற்றிருக்க எதிரே மாணவர்கள் ஆசனங்களில் அமர்ந்துள்ளமை, தந்தையார் சென்று மகனை தோளில் அமர்த்தி வீட்டுக்கு அழைத்து வருதல் ஆகிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சோழர் காலப் பள்ளிக்கூடத்தை இக்காட்சி கண்முன் நிறுத்துகின்றது.

தில்லைத் திருக்கோயிலில் முதல் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனான நரலோக வீரன் என்பான் ஆயிரம் பசுக்களை வழங்கி, அவை வழங்கும் பால்தனை குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வழங்க வகை செய்ததை சோழர் சாசனம் எடுத்துரைக்கின்றது. அதே கோயிலில் உள்ள ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்தில் சுவாமி தேவர் என்பார் அங்கு திகழ்ந்த நூலகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அளித்த கொடைகள் பற்றி விவரிக்கின்றது. அங்கு தமிழ், கிரந்த ஏட்டுச் சுவடிகள் இருந்தமையையும், அவை காலத்தால் அழியாமல் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கவும், நூல்களை ஆய்வு செய்யவும், நூலகத்தை செம்மையுற பராமரிக்கவும் வழிவகைகள் செய்தமையை இச்சாசனங்கள் எடுத்துரைக்கின்றன. பண்டு ஆலயங்களில் நூலகங்களும், ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்களும் இருந்தமைக்கான சான்றுகளே இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com