இந்த வார கலாரசிகன் - (10-10-2021)

அடேயப்பா, இப்படியொரு எதிர்பார்ப்பும், வரவேற்பும் "இந்த வாரம்' தொகுப்புக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இந்த வார கலாரசிகன் - (10-10-2021)


அடேயப்பா, இப்படியொரு எதிர்பார்ப்பும், வரவேற்பும் "இந்த வாரம்' தொகுப்புக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எத்தனை கடிதங்கள், குறுஞ்செய்திகள், அழைப்புகள். பெரியவர் சீனி.விசுவநாதன் போன்ற சிலர் முன்பதிவுக் கட்டணத்தைக் குறிப்பிடுவதற்கு முன்பே கடிதத்துடன் காசோலையையும் இணைத்து அனுப்பி இருக்கிறார்கள். இத்தனை வாசகர்களின் அன்பும், ஆதரவும் என்னைத் திக்கு முக்காடச் செய்கிறது.

அதி விரைவாக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மூன்று, நான்கு நாள்களில் முன்பதிவுத் திட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

------------------------------------------------------

மேதகு அப்துல் கலாமின் பிறந்த நாள் வருகிறது. அதையொட்டி அக்டோபர் 15-ஆம் தேதி, "தினமணி' இணைய தளத்தில் ஒரு கருத்தரங்கை ஒளிபரப்பு செய்வதாக இருக்கிறோம். நேற்று மாலை அந்தக் கருத்தரங்கு நடந்தது.

"தினமணி'யிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத இரண்டு பேராளுமைகள் பாரதியாரும், மேதகு கலாம் அவர்களும். முன்னவரின் கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்காக தொடங்கப்பட்ட தின இதழ் தினமணி. அதேபோல, இந்தியக் குடியரசின் தலைவராக இருந்த மேதகு அப்துல் கலாமின் கனவுகளை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் சொல்லி வழிநடத்துவதைத் தனது கடமையாகக் கொண்ட இதழும் தினமணிதான்.

தனக்கும் "தினமணி'க்குமான தொடர்பை தருணம் வாய்க்கும் போதெல்லாம் பெருமையுடன் எடுத்தியம்பும் கலாம் சாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது "தினமணி'யின் கடமை.

அவருடன் தொடர்பில் இருந்த மூவர் கலந்துகொள்ளும் கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது என்று முடிவெடுத்தோம். "தினமணி' இணைய தளத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி ஒளிபரப்ப இருக்கும் அந்தக் கருத்தரங்கில் குன்றக்குடி ஆதீனகர்த்தர் தவத்திரு பொன்னம்பல அடிகளார், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், முன்னாள் காவல் துறைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.நட்ராஜ் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். அந்தக் கருத்தரங்கை "தினமணி' இணைய தளத்துடன் இணைந்து ஒருங்கிணைத்தவர்கள் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமி நிறுவனத்தினர்.

மேதகு கலாம் மறைந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. மாறிவிட்ட உலகச் சூழலில் இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று நம்ப முடியாத அளவுக்கு அவர் ஓர் அற்புத நிஜம். குழந்தைத்தனமான அந்தச் சிரிப்பும் , எளிமையின் வடிவமான அந்த உருவமும் அறிவுச் சுரங்கத்தைத் தன்னுள் அடக்கியிருந்தது என்பதுதான் அப்துல் கலாம் என்கிற அந்த ஆளுமையின் தனிச்சிறப்பு.

"கலாம்' என்பது மனிதரல்ல, தலைவரல்ல வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறை யாருக்கு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது என்று யோசித்தபோது, நாளைய இந்தியாவை வழிநடத்த இருக்கும் இந்திய ஆட்சிப்பணிக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள்தான் நினைவுக்கு வந்தனர். அதனால்தான் கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியுடன் இணைந்து அந்தக் கருத்தரங்கை நடத்த முடிவு செய்தோம்.

"கலாம், கனவல்ல நிஜம்!' என்பது அந்தக் கருத்தரங்கின் தலைப்பு மட்டுமல்ல, உண்மையும் அதுதானே. அக்டோபர் 15-ஆம் தேதி, உங்களது செல்லிடப்பேசியில் அல்லது கணினியில், தினமணி டாட் காமில் அந்த நிகழ்ச்சியின்ஒளிபரப்பில் சந்திப்போம்!

------------------------------------------------------

நண்பர் "முரசொலி' முத்தையாவிடமிருந்து செல்லிடப்பேசி அழைப்பு வந்தது. "தினமணி' வெளியிட்ட பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டார். பாரதியார் நினைவு நூற்றாண்டு மலர் மட்டுமல்லாமல், செம்மொழி மாநாட்டின்போது வெளியிட்ட செம்மொழிக் கோவை, அண்ணா நூற்றாண்டு மலர் ஆகியவற்றையும் சேர்த்து, உதவிஆசிரியர் ரவிவர்மா மூலம் அனுப்பி வைத்தேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய "பெரியார் மறைந்தார், பெரியார் வாழ்க', "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?' என்கிற இரண்டு புத்தகங்களுடன் வ.உ.சி.யின் திருக்குறள் உரை புத்தகத்தையும் எனக்கு அனுப்பித் தந்தார் அவர். "திருக்குறள் வ.உ.சி. உரை' என்னிடம் ஏற்கெனவே இருக்கிறது என்றாலும், இப்போது மீண்டும் ஒரு முறை அதை என் கவன ஈர்ப்புக்குக் கொணர்ந்ததற்கு நண்பர் முத்தையாவுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

1932-ஆம் ஆண்டில், "வ.உ.சி.' என்கிற தமிழினத் தலைவர் மறைவதற்கு ஓராண்டுக்கு முன்னால், தூத்துக்குடியில் வசித்தபோது வெளியிடப்பட்டதுதான் அவரது திருக்குறள் உரை. அந்தப் புத்தகத்துக்கு (அறத்துப்பால்) அவரது முன்னுரையும், உரைப்பாயிரமும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுபவை. வ.உ.சி.யின் திருக்குறள் உரைப் பதிப்புக்கு வையாபுரிப் பிள்ளை எழுதியிருக்கும் பதிப்புரை, செக்கிழுத்த செம்மலின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் பதிவு.

ஏனைய உரைகளிலிருந்து வ.உ.சி.யின் உரை மாறுபடுகிறது என்று கூற முடியாவிட்டாலும், வேறுபடுகிறது. திருக்குறளில் முதல் மூன்று அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியது அல்ல என்பது வ.உ.சி.யின் கருத்து. தனது உரையில் அந்த மூன்று அதிகாரங்களையும் அகற்றிவிடாமல், அவற்றை "இடைப்பாயிரம்' என்று தலைப்பிட்டு சேர்த்திருக்கிறார்.

கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை என்னும் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் ஏனைய குறள்களைப் போல சொற்செறிவும், பொருட்செறிவும் உடையன அல்ல. "மெய்யுணர்தல்', "துறவு' என்னும் அதிகாரங்கள் இருப்பதால், "கடவுள் வாழ்த்து', "நீத்தார் பெருமை' இரண்டும் பாயிரத்தில் தேவையற்றவை. அதேபோல, வான் சிறப்பைக் கூறுவதால் பயனில்லை. அந்தக் குறட்பாக்களை இயற்றியவர்கள் ஒருவரல்ல - இவையெல்லாம் வ.உ.சி.யின் வாதங்கள்.

இரண்டு வரிக் குறளுக்கு அவர் வழங்கும் ஒரு வரிக் கருத்து விளக்கம்தான், ஏனைய உரைகளிலிருந்து தகைமைசால் தமிழரான வ.உ.சிதம்பரனாருடைய உரையின் தனிச்சிறப்பு.

------------------------------------------------------

கவிஞர் லோக. சந்திரபிரபுவின் தொகுப்பு "அம்மா பின்னிய கூடை'. அதிலிருந்து ஒரு கவிதை. இன்றைய சிறு விவசாயியின் நிதி நிலைமையை மூன்றே வரிகளில் படம் பிடிக்கிறது அவரது கவிதை.
விதை பயிராகியிருக்கிறது
வாங்கிய கடன்
வட்டியாகியிருந்தது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com