பாரதி கண்ட உலக சமுதாயம் ! 

பாரதியார் தான் கண்ட உலகம் இந்தியாவால்தான் உருவாகும் என்று நம்பினார். பொருளாதாரத்தில் சமத்துவமும், ஜாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும், கல்வியில் மேன்மையும், பெண்கள் முன்னேற்றமும்,
பாரதி கண்ட உலக சமுதாயம் ! 
Published on
Updated on
1 min read


பாரதியார் தான் கண்ட உலகம் இந்தியாவால்தான் உருவாகும் என்று நம்பினார். பொருளாதாரத்தில் சமத்துவமும், ஜாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும், கல்வியில் மேன்மையும், பெண்கள் முன்னேற்றமும், அரசியல் விடுதலையும், ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்க விரும்பினார்.

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்' என்ற கொள்கை உடைய பாரதியார், இந்தியாவின் பல கோடி மக்களும், கடைக்கோடி ஏழையும் சமம், எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனப் பாடினார். அனைவருக்கும் விடுதலை, அனைவருக்கும் உணவு, ஆங்கோர் ஏழைக்கும் எழுத்தறிவு என அனைவருக்கும் கல்வி என்ற ஒப்பில்லாத சமுதாயம் காணப் பொதுவுடைமை வேண்டும் என்றும் முழங்கினார்.

" தாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது உலகில் எங்கும் காணோம்' என்று அறிவித்த பாரதியார்,  நம் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தளித்து, "திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்திடச் செய்வோம்' என்றார்.

ஊர்தோறும் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தி அ .. ஆ.. எனக் கற்பித்துத் தமிழ் படிக்கச் செய்வோம்;  வெற்றுப் பணக் கல்வியைவிட தொழில் திறமையும், பண்பும் தரும் நாட்டுக்கல்வியே உயர்ந்தது என்பன பாரதியாரின் கொள்கைகள். மெத்த வளரும் மேலை நாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் மொழிபெயர்ப்போம்; ஊசி செய்வது முதல் கப்பல் கட்டும் தொழில் வரை நம் நாட்டு இளைஞர்களைக் கற்கச் செய்வோம் என்றார்.

ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைப் பரப்பிய பாரதியார், அதற்குக் கல்வியே உறுதுணை என்றார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று பெண்களை முழங்க வைத்தார். புதுமைப் பெண்ணைப் படைத்த பாரதி, புதுமை கற்பை இரு திணைக்கும் பொதுவில் வைத்த ஆண்களையும் படைத்தார்.

மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்து, கடவுள் பக்தியுடன் உண்மையான ஆன்மிகத்தைப் பின்பற்றி வாழ வேண்டும் என்றவர், வன்முறைகளால் எதனையும் சாதிக்க முடியாது என்றார். எதிரிக்கும் இரக்கம் காட்டச் சொன்னவர், காக்கை குருவி எங்கள் சாதி என்று கூறியதுடன் உலகுக்கே வழிகாட்டும் திறன் இந்தியாவுக்குத்தான் உண்டு என்று பாடினார். ஆகவே, பாரதியார் கண்ட உலக சமுதாயம் படைப்போம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com