மகாகவியின் மறுபக்கம்!

"பாரதி' என்றவுடன் நமக்கு நினைவில் வருபவை, "அவர் ஒரு மகாகவி, தேசிய கவி' என்பதுதான்.
மகாகவியின் மறுபக்கம்!
Published on
Updated on
2 min read


"பாரதி' என்றவுடன் நமக்கு நினைவில் வருபவை, "அவர் ஒரு மகாகவி, தேசிய கவி' என்பதுதான். ஆனால், மகாகவி பாரதியின் பூரண விஸ்வரூபத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அவரது பிற எழுத்துப் பணிகள் தெரியவரும். குறிப்பாக, எந்த நவீன வசதியும் இல்லாத 115 ஆண்டுகளுக்கு முன்னர், அன்றைய ஆங்கிலேய அரசை எதிர்த்து "இதழியல்' துறையில் பணியாற்றிய பாரதியின் துணிவும், மேதைமையும் அளவிடற்கரியது.

அவர் பணியாற்றிய பத்திரிகைகள், நடத்திய இதழ்கள், எழுதிய கட்டுரைகளின் பட்டியலைப் பார்த்தால் வியப்பு மேலிடும். "லண்டன் டைம்ஸ்' முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான "அமிர்தபஜார்' பத்திரிகை வரை 50க்கும் மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், நாட்டின் பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தமது கட்டுரைகளில் எழுதியதுடன், தான் பங்களித்த பத்திரிகைகளில் பல புதுமைகளையும் நிகழ்த்தியிருக்கிறார். 

"இந்தியா' பத்திரிகையில் வாசகர்களின் வசதிக்கேற்ப செல்வந்தர்களுக்கு ஒருவித சந்தாவும், எளியவர்களுக்கு ஒருவித சந்தாவும் அறிவித்து, புரட்சி செய்தார். மேலும், தமிழ்ப் பத்திரிகைகளில் முதன்முதலாக முகப்பு அட்டையில் கார்ட்டூன் வெளியிட்டவர் பாரதியே! 

பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தகம் வெளியிடுதல், விவாதங்களில் வாசகர்களை ஈடுபடுத்துதல், பத்திரிகையில் தமிழ்த் தேதி குறிப்பிடுதல், வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மூலம் வெளிநாட்டு செய்திகளை வெளியிடுதல் எனப் பல முன்னோடிப் பணிகளைச் செய்தவர். 1908-இல் வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரை சிறையில் சந்தித்து நேர்முக வர்ணனையுடன் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

1904-இல் "சுதேசமித்திரன்' பத்திரிகையில் துணை ஆசிரியராகச் சேர்ந்தபோது பாரதியின் இதழியல் பணிகள் ஆரம்பமாயின.  மிக விரைவில் அவருடைய மண்டையம் நண்பர்கள் தொடங்கிய "இந்தியா' வார இதழ் அவரது ஆவேச எழுத்துகளுக்கு வடிகாலானது. அதே நிறுவனத்தின் வெளியீடான "சக்ரவர்த்தினி' என்ற மகளிர் மாத இதழில் (1905), பெண்களின் முன்னேற்றத்துக்கான கட்டுரைகளை பாரதி வாரி வழங்கினார்.

1906, மே 9 முதல் சென்னையிலிருந்து வெளிவந்த "இந்தியா' வார இதழ், ஆங்கிலேய அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக 1908 செப்டம்பர் 5- ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. மேலும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பிரசாரம் செய்வதாக வழக்குப் பதியப்பட்டு "இந்தியா' பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பெயர் பதிவு செய்திருந்த ஸ்ரீநிவாச ஐயங்கார் கைது செய்யப்பட்டார். வேறு வழியின்றி, உண்மையான ஆசிரியரான பாரதி,  புதுச்சேரி சென்று அடைக்கலம் புகுந்தார்.

ஆயினும்,  மண்டையம் குடும்பத்தாரின் உதவியுடன் "இந்தியா' வார இதழை (1908) அக்டோபர் 10 முதல் மீண்டும் வெளியிடத் தொடங்கினார். அந்த இதழ் 1910 மார்ச் 12 வரை பல்வேறு கெடுபிடிகளைத் தாங்கி வெளிவந்தது. அந்த இதழ்களில் பாரதி எழுதியுள்ள செய்திகள்,  கட்டுரைகள் அனைத்தும் சரித்திர 
ஆவணங்கள். 

தாங்கள் நடத்திவந்த பத்திரிகைக்கு வாசகர்கள் போதிய ஆதரவு தரவேண்டும் என்று கோரி, 1908, நவம்பர் 7-இல் பாரதி எழுதிய "நமது விஞ்ஞாபனம்' என்ற வேண்டுகோள்,  ஒரு பத்திரிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுக்கிறது.

""இப்பத்திரிகை (இந்தியா) தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது.''

மண்டையம் திருமலாச்சாரியாவின் ஏற்பாட்டில் "பாலபாரதா' அல்லது "யங் இந்தியா' என்ற ஆங்கில இதழையும் (1906) நடத்தினார். "யங் இந்தியா' என்ற பெயரில் 1919 முதல் 1932 வரை மகாத்மா காந்தியும் ஒரு பத்திரிகை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவையில் இருந்தபோது, பாரதி மேலும் பல இதழ்களைத் தொடங்கினார். அவற்றுள் "விஜயா' என்ற மாலை பத்திரிகை குறிப்பிடத்தக்கது. "இந்தியா' வார இதழில், லண்டனில் மாணவராக இருந்த வ.வே.சு.ஐயர் பல சங்கதிகளை எழுதியிருக்கிறார். "இந்தியா'வும் "விஜயா'வும் பிரிட்டீஷ் இந்தியாவில் 1909-இல் தடை செய்யப்பட்டன.

"சூர்யோதயம்' (1910) என்ற உள்ளூர்ப் பத்திரிகைக்கும் (பாண்டிச்சேரியில்) பாரதி ஆசிரியரானார். அரவிந்தர் நடத்திய "கர்மயோகி' (1909) பத்திரிகையிலும், "ஆர்யா' என்ற ஆங்கில இதழிலும் (1915) பாரதி பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். விடுதலை வீரர் சுப்பிரமணிய சிவா நடத்திய "ஞானபானு' இதழிலும் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை எழுதிய பாரதி, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், கவிதைகள், கட்டுரைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். அக்காலத்தில் வெளிவந்த "தி ஹிண்டு, காமன்வீல், நியூ இண்டியா' முதலிய ஆங்கில நாளிதழ்களில் வாசகர் கடிதங்களையும் தீட்டியிருக்கிறார். 

வாழ்வின் இறுதிக் காலத்தில், மீண்டும் "சுதேசமித்திரன்' இதழில் (1920) இணைந்து முன்னைவிட வேகமாக பல வியாசங்களை எழுதிய பாரதி, சித்திரங்களை மட்டுமே கொண்டதாக "சித்ராவளி' என்ற பத்திரிகையையும், வாரம் இருமுறை  வெளியாகும் "அமிர்தம்' என்ற இதழையும் நடத்த வேண்டும் என்ற துடிப்புடன் வேண்டுகோள் விளம்பரங்களை வெளியிட்டார். ஆனால், அவரது கனவு நனவாகும் முன்பே காலன் அவரை அழைத்துக் கொண்டான்.

 "விவேகபானு' என்ற பத்திரிகையில் (1904) பாரதியின் "தனிமை இரக்கம்' கவிதை முதன்முறையாக அச்சு வாகனம் ஏறியது. அதன்பிறகு, அவர் காலமாகும் (1921 செப். 11) வரை, அவரது எழுதுகோல் நிற்காமல் எழுதிக்கொண்டே இருந்தது.  எழுத்துலகில் அவர் தொடாத துறையே இல்லை. அவற்றுள் முத்தாய்ப்பானது அவரது பத்திரிகைப் பணிதான். காலத்தை மீறிக் கனவு கண்ட அந்த மகாகவியின் மறுபக்கம், தமிழின் முன்னோடி இதழாளர் பாரதி என்பதே!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com