பருத்திபட்ட பன்னிரண்டும்...

வாழ்க்கையில் அடுத்தடுத்து அடிவிழுந்தபோது துன்பம் தாங்க முடியாத யாரோ ஒருவர், "உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி' என்று எப்போதோ சொல்லி வைத்தார்.
பருத்திபட்ட பன்னிரண்டும்...


வாழ்க்கையில் அடுத்தடுத்து அடிவிழுந்தபோது துன்பம் தாங்க முடியாத யாரோ ஒருவர், "உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி' என்று எப்போதோ சொல்லி வைத்தார். அதுவே காலப்போக்கில் பழமொழியாகி, நிலைபெற்றுவிட்டது.

மகாகவி பாரதியும் குயில் பாட்டில், "நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும் / தாளம் படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?' என்கிறார். பாரதிக்கு முன்பு வள்ளலார் தம் பாட்டொன்றில், 

நான்படும்பாடு சிவனே 
உலகர் நவிலும் பஞ்சு
தான்படு மோசொல்லத் தான்
படுமோ? எண்ணத்தான் படுமோ?
கான்படு கண்ணியில் மான்
படுமாறு கலங்கி நின்றேன்;
"ஏன்படு கின்றனை?' என்றிரங் 
காய்என்னில் என்செய்வனே?

என்று வாழ்வில் அடுக்கிவரும் துன்பங்களைக் குறித்து இறைவனிடம் முறையிட்டார். இம்முறையீடு, "ஏசப்பட்டேன் இனிப்படுகின்ற தமையாதால்' என்று மணிவாசகர் சுருங்கச் சொன்னதன் விரிவு எனலாம்.

இனி, வள்ளலார் பாட்டில் வரும், "பஞ்சுதான் படுமோ?' என்பது - தலைப்பில் காட்டிய "பருத்திபட்ட பன்னிரண்டும்' என்பதை ஒருவகையில் நினைவூட்டுகின்றது.

"தன் கையிலே பருத்திபட்ட பன்னிரண்டும் பட்ட பூமியை இரந்தானாயிற்று' என்பது பெரிய திருமொழி (1-8-5) உரையில் இடம்பெறும் தொடராகும். வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையின் உரைக்குறிப்பு இது.
வண்கையான், அவுணர்க்கு நாயகன் வேள்வியில் சென்று மாணியாய் மண்கையால் இரந்தான் என்னும் திருமங்கையாழ்வாரின் பாசுர அடிகளுக்கு இவ்வாறு விளக்கம் தருகிறார் அவர். 

திருமால் மாவலியிடம், வாமனனாய்ச் சென்று இரந்து பெற்ற இந்தப் பூமி, பருத்தியைப் போலப் பன்னிரண்டு நிலையடைந்து அவன் வசமாயிற்று என்பது கருத்து.

"திருமால் உலகைப் படைக்கும்போது தன்னிலிருந்தும் அதனைப் பிரித்து, ஐம்பூதங்களை ஒன்றோடொன்று சேர்த்து, அண்டமாக்கி, தேவர் முதலிய சரீரங்களாக்கி, உலக நிலைமையை உண்டாக்கி, வேறு வேறு படைப்புப் பண்ணி, காப்பாற்றி, பிரமன் முதலானோர்க்கு ஆக்கி, பிரளயத்திலே எடுத்து, எயிற்றிலே வைத்து, வயிற்றிலே உய்யக்கொண்டு, உமிழ்ந்து,  பின் அழியச் செய்யும்படி நிலைகள் பன்னிரண்டு' (மா.வரதராஜன், அருளிச்செயல் அருஞ்சொற் பொருள் அகராதி, ப.245-246) என்பது இதற்கான விளக்கமாகும்.

இப்படி, பூமி பட்டபாட்டுக்கு உவமையாகச் சொன்னதுதான் பருத்தி பட்ட பாடுகள் பன்னிரண்டும். அவை என்னென்ன என்பதை நாம் அறிய வேண்டாமா? பெரிய திருமொழிக்கான அரும்பதவுரை பின்வருமாறு அவற்றைத் தெளிவுபடுத்துகிறது.

கொட்டை வாங்கி, பன்னி, வேண்டாதன நீக்கி, சுருட்டி, நூலாக்கி, பாவோட்டி, நெய்து, மடித்து, விற்கப்பட்டு, உடுத்து, தோய்த்து, உலர்த்தி, கிழிந்து விடும்படியான நிலை. இவற்றைத்தான், "பருத்திபட்ட பன்னிரண்டும்' என்று சுருங்கக் குறிக்கிறது மூலவுரை. பருத்தி, செடியில் விளைவது முதல் அது கந்தலாகிக் க(கி)ழிவது வரை அப்பன்னிரண்டு நிலையையும் மேற்காட்டியவாறு ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டுகிறது அரும்பதவுரை.

இவ்வாறு வாழ்வியல் அனுபவங்களையும், சமுதாய நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு ஆழ்வார் பாசுரங்களுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் தரும் இடங்கள் பலவுண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com