கற்பனையாய் கவிதைக் கடிதம்!

சைவமும் வைணவமும் நமது தமிழ்ப் பண்பாட்டில் தமிழின் தொன்மை, ஆன்மிகம் சார்ந்த வாழ்வியல் போன்றவற்றை இலக்கியங்கள் மூலம் கொடுத்த பெருமைக்குரியவை.
கற்பனையாய் கவிதைக் கடிதம்!


சைவமும் வைணவமும் நமது தமிழ்ப் பண்பாட்டில் தமிழின் தொன்மை, ஆன்மிகம் சார்ந்த வாழ்வியல் போன்றவற்றை இலக்கியங்கள் மூலம் கொடுத்த பெருமைக்குரியவை. சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவரான திருஞானசம்பந்தரும், பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கையாழ்வாரும் இலக்கிய வரலாற்றுக் காலப்பிரிவில் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை. இருப்பினும், ஒருவருக்கொருவர் கவிதைக் கடிதம் எழுதியது போன்ற இரண்டு பாடல்கள் பலரும் அறியாத ஒன்று.

திருமங்கையாழ்வார், மகாவிஷ்ணுவுக்குக் கோயில் கட்டுவதற்காகக் கொள்ளையடித்தவர்; மன்னனாக வாழ்ந்தவர்; மிகவும் அழகான தோற்றம் கொண்ட திருமங்கையாழ்வார் மன்னனாக வீற்றிருந்து உலாப் போனாராம். அவரின் அழகிய தோற்றப் பொலிவைக் கண்டு, இளம் பெண் ஒருத்தி தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவரை அடையப் பெறாமையால், உடல்வாடி மெலிந்து, திருஞானசம்பந்தரைச் சந்தித்து, தன்னை அவருடன் சேர்த்து வைக்கும்படி முறையிட்டாளாம். திருஞானசம்பந்தர், அவளது வேதனையை வெளிப்படுத்தி அவளது துன்பத்தைப் போக்கும்படி கவிதை ஒன்றை எழுதி அவளிடம் கொடுத்து, திருமங்கையாழ்வாரிடம் அனுப்பி வைத்தாராம். அக்கவிதை இதுதான்:

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா
படியுண்ட பெருமானைப் பறித்து பாடி
பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே!

தடாகத்துக்குள்ளே இருக்கின்ற வாளை மீனானது முதலையிடம் கடிபட்டுத் தப்பி, தடாகத்துக்குள்ளே இருக்க விரும்பாமல் துள்ளி ஆகாயம் நோக்கிப் பாய்கின்றது. அப்படிப் பாய்கின்ற வாளை மீன், தடாகத்திற்குப் பக்கத்திலே செழித்து உயர்ந்து வளர்ந்திருக்கின்ற தென்னை மரத்திலே பழுத்துக் கிடக்கின்ற தேங்காய்க் குலையில் மோதியடிக்கின்றது. வாளை மீன் மோதியதால் தேங்காய்கள் கீழே விழுகின்றன. அவை தென்னை மரத்திற்குப் பக்கத்திலே வளர்ந்திருந்த கமுக மரத்திலுள்ள பாக்குக் குலையிலே மோதுகின்றன. பாக்குக் குலைகள் சிதறிக் கீழே விழுகின்றன.

அத்தகைய வளம் பொருந்திய நாட்டின் தலைவனே! படியுண்ட பெருமானிடம் பறித்தும் (களவெடுத்தும்) அவரையே புகழ்ந்து பாடியும் உயர்பதம் பெற்ற பெருமானே! என்மகள் போன்ற ஒருத்தி , நீ பவனி செல்லும்போது எதிர்வந்து உன்னைப் பார்த்துக் கும்பிட்டாள்.

இப்பொழுது உயிரை உன்னிடத்திலே விட்டுவிட்டு, வெறும் எலும்பும் தோலுமாக வந்திருக்கிறாள். அவளுக்கு உயிர் கொடுத்துக் காக்க வேண்டியது உம்முடைய கடமையாகும்' என்பதுதான் இப்பாடலின் பொருள்.

இந்தக் கவிதைக் கடிதத்தைப் பார்த்த திருமங்கையாழ்வார், தானும் ஒரு கவிதைக் கடிதம் எழுதி, திருஞானசம்பந்தருக்குக் கொடுத்தனுப்பினார். திருஞானசம்பந்தரைப் போலவே திருமங்கையாழ்வாரும், முதலில் திருஞானசம்பந்தரின் நாட்டு வளத்தைப் புகழ்ந்து கூறிவிட்டு, தனது கருத்தைச் சொல்கிறார்.

வறுக்கை நுறுங்கணி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலாவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே

பலாவின் இனிய கனியானது பழுத்துத் தானாகவே வெடித்துச் சிதறி, பலாக் கிளையிலே இருக்கும் தேன் கூட்டையும் சிதைத்துக் கொண்டு பூமியிலே விழுகின்றது. தேனானது மடுக்களில் நிரம்பி, குளங்களிலேயும் நிரம்பி மதகின் ஊடாக வயலுக்குப் பாய்கின்றது. அப்படிப் பெருக்கெடுத்துப் பாயும்போது, வண்டுகளானவை ரீங்காரம் செய்து மொய்க்கின்றன. அத்தகைய வளம் பொருந்திய சீர்காழியில் வாழும் திருஞானசம்பந்தப் பிள்ளையாரே! கேளும்.

சிவபெருமானின் அருள் விளங்கும் மயிலாப்பூரிலே, நெருப்பிலே எரிந்து போய்ச் சாம்பலாகிக் கிடந்த பூம்பாவையை உயிர்பெற்றெழச் செய்தோம் என்று இருப்பது மட்டும் தகுதியானதல்ல. காம வேதனையால் நிலாவினாலே வெந்துபோய் இருக்கின்ற இவளையும் ஓர் பெண்ணாக ஆக்குதல் உமக்கு இயல்பானதுதானே. எலும்பைப் பெண்ணுருவாக்கும்படி என்னிடம் அனுப்ப வேண்டியதில்லையே! நீரே ஆக்கியிருக்கலாமே என்பது இதன் பொருள்.

இவ்விரு பாடல்களும் உண்மையில் திருஞானசம்பந்தரும், திருமங்கையாழ்வாரும் பாடிய பாடல்களல்ல; இது உண்மைச் சம்பவமும் அன்று. பெயர் தெரியாத யாரோ புலவர் ஒருவர் தனது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, இப்படியான கற்பனை நயம்மிக்க, ரசனைக்குரிய பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com