இந்த வாரம் கலாரசிகன் - (27-12-2021)

மணிவிழா காணும் பதிப்பகம் என்கிற பெருமை பெறுகிறது மணிவாசகர் பதிப்பகம். அதற்கான விழா நேற்று சென்னையில் நடந்தது.
இந்த வாரம் கலாரசிகன் - (27-12-2021)


மணிவிழா காணும் பதிப்பகம் என்கிற பெருமை பெறுகிறது மணிவாசகர் பதிப்பகம். அதற்கான விழா நேற்று சென்னையில் நடந்தது. குன்றக்குடி ஆதீனகர்த்தர் தவத்திரு பொன்னம்பல அடிகளார், உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், தொழிலதிபர் "நல்லி' குப்புசாமி செட்டியார் கலந்துகொண்ட விழாவுக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

பதிப்பகத்தின் அறுபது ஆண்டு நினைவையொட்டி அறுபது புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதில் "இந்த வாரம்' பகுதியில் நான் பரிந்துரைத்திருந்த "தமிழ் நூல் தொகுப்புக் களஞ்சியம்' புத்தகத்தின் மறுபதிப்பும் வெளியிடப்பட்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. அந்தப் புத்தகத்தைக் குறிப்பிட்டு, அதன் சிறப்புகளை நீதியரசர் சிலாகித்துப் பேசியதில் அதைவிட மகிழ்ச்சி. நூல் வெளியீட்டு விழாவில் நான் சற்று ஒதுங்கியே இருந்து விட்டேன். முடிந்தவரை புத்தக வெளியீட்டு விழாக்களில் நான் கலந்து கொள்வதில்லை என்று ஏற்கெனவே பலமுறை எழுதியிருக்கிறேன். 

எனக்கு இன்னொரு பணியை வழங்கியிருந்தார் மணிவாசகர் பதிப்பகத்தின் அதிபர் ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம். அது மனநிறைவுடைய பணியும்கூட. மணிவாசகர் பதிப்பகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக பணியில் உள்ளவர்களை மேடைக்கு அழைத்துப் பாராட்ட வேண்டும் என்கிற பெரிய மனது மெய்யப்பனாரின் வாரிசு மீனாட்சி சோமசுந்தரத்திற்கு இருந்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதற்கு என்னைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

மணிவாசகர் பதிப்பகம் உருவாகி வளர்ந்த கதை மிகவும் சுவாரசியமானது. அதை, அதன் தொடக்கத்திலிருந்து கூடவே இருந்து பார்த்த கவிஞர் சிற்பி விவரித்தார். சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த "சிற்பி' பாலசுப்பிரமணியனும், மெய்யப்பனாரும் கையெழுத்துப் பத்திரிகை தொடங்கிய வரலாறு ஆச்சரியப்படுத்தும் விதத்திலானது. மணிவாசகர் பதிப்பகத்தின் வரலாறு என்பது அறுபது ஆண்டுகளாகத் தமிழ் வளர்த்த வரலாறும்கூட. 

நேற்றைய நிகழ்வில் பல அரிய தகவல்கள் கிடைத்தன. மணிவாசகர் பதிப்பகம் இதுவரை 2000-க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டிருக்கிறது. அந்தப் பதிப்பகம், கிளைப் பதிப்பகங்களான தென்றல் நிலையம், தாமரைப் பதிப்பகம், மெய்யப்பன் பதிப்பகம் மூலமாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறது. இரண்டு ஊழியர்களுடன் தொடங்கப்பட்ட மணிவாசகர் பதிப்பகத்தில் இப்போது இரு நூறுக்கும் மேற்பட்டோர் பணி புரிகிறார்கள்.

இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட மூன்று நூல்கள் சாகித்திய அகாதெமி விருது பெற்றிருக்கின்றன. 
75 நூல்கள் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன. எல்லாவற்றுக்கும் 
சிகரம் வைத்தாற்போல அமைந்திருப்பது சிதம்பரத்தில் இயங்கும் "மெய்யப்பன் தமிழாய்வகம்'.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மெய்யப்பனார். 20 ஆண்டுகளுக்கு முன்னால் சிதம்பரத்தில் தொடங்கப்பட்ட "மெய்யப்பன் தமிழாய்வகம்' துணைவேந்தர்கள் க.ப.அறவாணன், பொற்கோ, ச.அகத்தியலிங்கம் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. 

ஏறத்தாழ 40,000-க்கும் அதிகமான நூல்கள் அடங்கிய அந்த ஆய்வகத்தில் ஆய்வு மாணவர்களும், ஆய்வு அறிஞர்களும் தங்கி, படித்து, குறிப்புகள் எடுப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய  பணியை மணிவாசகர் பதிப்பகம் செய்கிறது.

எனக்கும் மணிவாசகர் பதிப்பகத்துக்கும் ஒரு ரகசிய உறவு உண்டு. அச்சாகும் நூல்களின் முதல் இரண்டு படிகள் விமர்சனத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுவிடும். இப்போது வெளியிடப்பட்டிருக்கும் அறுபதில் இருபது நான் படித்தவை, எனக்குப் பிடித்தவை.

-------------------------------------------------

புத்தக விமர்சனத்துக்கு அனுப்பப்படும் சில புத்தகங்கள், பார்வையில் படாமல் இருந்துவிடுகின்றன. "அடடா, இதை எப்படிப் பார்க்காமல் போனோம்?'  என்று ஒருநாள் எடுத்துப் பார்த்துப் படித்தேன்.  அப்படி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் புத்தக விமர்சனத்துக்காக வந்திருந்த புத்தகம் என். முருகன் எழுதிய "இதுவா ஜனநாயகம்?'.

"தினமணி' நாளிதழின் நடுப்பக்கத்தில் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தபோது வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்புதான் "இதுவா ஜனநாயகம்?'. அந்தக் கட்டுரைகள் பிரசுரமாவதற்கு முன்பும், பிரசுரமான பின்பும் நான் படித்தவைதான். ஆனால், மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு அந்தக் கட்டுரைகளைப் படித்துப் பார்க்கும்போது, ஒன்றுமட்டும் நன்றாகவே புரிந்தது - இந்தியாவும், இந்திய ஜனநாயகமும் மாறவில்லை! 

பத்தாண்டுகளுக்கு முன்னால் "தினமணி' நடுப்பக்கத்தில் "வெறுக்கத்தக்கவையா தெருநாய்கள்?' என்கிற தலைப்பில் என். முருகனின் கட்டுரை வெளிவந்தபோது, அவரை அழைத்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. தெரு நாய்கள் பிரச்னை குறித்து இந்த அளவுக்குத் துல்லியமாக வேறு ஒருவரால் சிந்தித்திருக்க முடியுமா என்பது சந்தேகம். சாலையோர உணவு விடுதிகளை முழுமையாக ஒழிப்பதும், குப்பைக் கூளங்கள் இல்லாத நகரத்தை உறுதி செய்வதும்தான் தெருநாய்கள் பிரச்னைக்குத் தீர்வு என்பது ஏன் நகராட்சி அமைப்புகளுக்குத் தெரியவில்லை?

இதில் இடம்பெற்றிருக்கும் 43 கட்டுரைகளும் அனுபவசாலியான நிர்வாகியின் பகுத்தாய்வு. பிரச்னைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு என். முருகன் வழங்கும் தீர்வுகள், இன்றைய ஆட்சிப்பணி அதிகாரிகள் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பாடங்கள். அரசியல்வாதிகளின் ஜாதிக் கணக்கில் தொடங்கி அரசியல், நிதி நிர்வாகம், காவல்துறை செயல்பாடு, சமூக அநீதிகள் என்று முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியான என். முருகன் பகுத்தாய்வு செய்திருக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றும் சமுதாய விவாதத்துக்கானவை.

-------------------------------------------------

கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியனை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, இரா.பூபாலனை நான் சந்திக்க விரும்புவதாக எங்கள் பொள்ளாச்சி நிருபர் மகேஷிடம் கூறினேன். "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்' என்கிற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் புதிய கவிஞர்கள் பலரை அறிமுகப்படுத்தும் பூபாலனின் தமிழ்ப்பணியை நேரில் சென்று பாராட்ட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

சொல்லிக் கொண்டிருந்தபோதே, கவிஞர் சிற்பியை சந்திக்க அவரே நேரில் வந்துவிட்டார். அப்போது அவர் எனக்குத் தந்த அவரது கவிதைத் தொகுப்பு "திரும்புதல் சாத்தியமற்ற பாதை'. 

அதிலிருந்த கவிதை இது - 
தாத்தாவின் நினைவிடத்தைப்
பார்க்க வேண்டுமென
ஆசைப்பட்டவளை
வெகு நாட்களுக்குப் பின்
சொந்த ஊருக்குக்
கூட்டிச் சென்றேன்
ஆச்சர்யம்
புதைத்த அப்பா
கட்டிடமாக முளைத்திருக்கிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com