சோமலெ பதித்த சுவடுகள்

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே நவீன வசதிகளற்ற காலத்திலேயே உலகில், "சோமலெ' உலா நிகழாத இடமே இல்லை' எனலாம்.
சோமலெ பதித்த சுவடுகள்


நூற்றாண்டு நிறைவு 11.2.1921-11.2.2021


ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பே நவீன வசதிகளற்ற காலத்திலேயே உலகில், "சோமலெ' உலா நிகழாத இடமே இல்லை' எனலாம்.

கால்களாலும் எழுதுகோல்களாலும் அகிலம் அளந்த இவர் - தமிழகம், பாரதம், பிரபஞ்சம் என முப்பெரும் நோக்கில் முத்து முத்தான புத்தகங்களை இயற்றி இந்தச் சமுதாயத்துக்கு அளித்த சாதனையாளர். எனவேதான் "பேனா வீரர் சோமலெ', "தென்னாட்டு மார்க்கோபோலோ', "பயண இலக்கிய ஞாயிறு' என்றெல்லாம் பாரே இவரைப் பாராட்டுகிறது.

சோமலெ அறிவுலகு போற்றும் நிலையில் திகழ்ந்தவர். அரசியல் "மாண்புமிகு'வினர் கூட மதிக்குமாறு விளங்கியவர். எனினும், எளிமையின் இலக்கணமாகவே வாழ்ந்தவர். பணிவும் பாசமும் இவருக்கு இரு கண்கள். ஆயினும், நேர்மைக்கு முரணானவற்றை இவரால் அனுசரிக்க முடியாது. எவ்வளவு பெரிய மனிதராயினும் "நக்கீரர்' ஆகிவிடுவார். தீர்வு கிட்டும் வரை ஓயமாட்டார்.

""அரிய பெரிய எழுத்தாளர் சோமலெ அவர்களை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். என் தந்தையின் தோழர். அதே இயல்போடு அவர் என்னிடமும் நேசமாக இருப்பார். அவரது உறவை எனக்கு வாய்த்த நற்பேறாகவே கருதுகிறேன்!'' என, இதயபூர்வமாகப் பதிவு செய்கிறார், அறிஞர் ஒvவை நடராசன்.

சோமலெயின் முதல் பயணக் கட்டுரை, அமுதசுரபியில் வெளியாயிற்று. அப்போது, அதன் ஆசிரியர் "கலைமாமணி' விக்கிரமன். அதற்கு நல்ல வரவேற்பு அமைந்தது. எனவே, அந்த வகையிலான கட்டுரைகளையே பல்வேறு இதழ்களில் தொடர்ந்து எழுதி உச்சம் தொட்டார்.

""சிற்பம் சமைப்பது எப்படி?'' என ஒரு கலைஞனைக் கேட்டபோது, ""பாறையை உற்றுப் பார்ப்பேன்; எனக்கு அந்தப் படிமம் புலனாகும். பிற பகுதிகளை வெட்டி எறிந்து விடுவேன். சிற்பம் தானே அமைந்துவிடும்'' என்று சொன்னாராம்.

""அப்படி- தேவையான செய்திகளை மட்டும் தொகுத்து, அவற்றை முறையாகப் பொருத்திக் கொண்டால், எந்தக் கட்டுரையும் - எந்த நூலும் எளிதாக - ஏற்றம் உடையதாக அமைந்துவிடும். இதுவே என் படைப்பூக்கம் செழிக்கக் காரணமாயிற்று'' என்பார் சோமலெ.

செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சோமலெவை இப்படிச் சிறப்பிப்பார் - ""நாம் அவரை, "ஒரு பல்கலைக் குரிசில்' என்று போற்றி மகிழத்தக்க பல சுவடுகள் அவரிடம் பளிச்சிடக் காணலாம். கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மொழிவளர்ச்சி, பொதுநலம், உயர்கல்வி, செய்தியியல், இதழியல், சுற்றுலா, திருக்கோயில்கள் என ஏராளமான துறைகளில் புதுப்புது அணிகளைத் தமிழன்னைக்குப் பூட்டிப் பூரிப்பதில் இவரை விஞ்ச இன்னொருவர் இல்லை.''

சோமலெ விளம்பர வெளிச்சத்துக்கு மிகவும் கூசி விலகுபவர். ஆக்கப் பணிகளில் மட்டுமேஆர்வமான ஈடுபாடு கொள்பவர். இதற்கு ஓர் இணையற்ற எடுத்துக்காட்டு: சோமலெ எழுதிய "செட்டி நாடும் செந்தமிழும்' என்ற நூலில், நகரத்தார் பலரின் விவரம் விரிவாக இருக்கும். ஆனால், இவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்புகூட இருக்காது.

கல்வி, வேலைவாய்ப்பு என ஆதரவு நாடி வருபவர்க்கு அணுக்கமாக உதவுவது இவருக்கு மிகவும் பிடித்த செயல். இவரது அறிவுத்திறன் அபாரமானது; கலங்கரை விளக்கம் போன்றது. எனவே, இவருக்கான பாராட்டுவிழா நிகழ்த்த விழைந்து முயன்றேன். இவர் எளிதில் இணங்கவில்லை. இறுதியில், பயன்கருதாத என் பணிகளின் தன்மையும், அன்பின் வலிமையும் வென்றன.

மேனாள் அமைச்சர் க.இராசாராம் தலைமையில், சிலம்பொலி செல்லப்பன், சாண்டில்யன், ஏவி.எம்.சரவணன் ஆகிய ஆளுமைகள் இணைந்த இதயபூர்வ விழா. "வாழ்நாள் சாதனையாளர்' விருதளித்து, சோமலெயைப் போற்றிச் சிறப்பிக்க முடிந்ததில் அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி.

சோமலெ மறைந்த பிறகும் அவரை நினைவுகூரும் விழா நிகழ்த்துவதில் இலக்கியவீதிக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. அவரது சொந்த ஊர் நெற்குப்பையில், "சோமலெ நினைவு நூலக விழாப் பொறுப்பு இலக்கியவீதிக்கே வாய்த்தது. அவருடைய மகன் சோமசுந்தரம் அதற்கு அணுக்கமாக இருந்து உதவினார்.

மாமல்லபுரத்தில் வடிவமைத்த சோமலெ உருவச் சிலையை, நெற்குப்பை விழாவில், மேனாள் அமைச்சர் இராம.வீரப்பன் திறந்து வைக்க, தங்கம் தென்னரசு சோமலெ நூலகத்தைத் திறந்து வைத்தார். அந்தச் சின்ன ஊர் நூலகம், உலகத் தரத்திற்கு உயர்ந்து, இன்றளவும் செயல்பட்டு வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

கணக்கற்ற கல்வியாளர்கள், அநேக அரசியல்வாதிகள், அமைச்சர் பெருமக்கள், உயர்பதவி வகிப்போர், செல்வச் செழிப்பில் மிதப்போர் தொடர்புகள் அடுக்கடுக்காக இருந்தாலும், இவரை அதிகம் ஈர்த்தவர்கள், உத்தமர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சர்தார் வேதரத்தினம் பிள்ளை, பாடுவார் முத்தப்பர் ஆகிய நான்கே நான்கு ஆன்மாக்கள் மட்டுமே!

இணையற்ற இந்த நல்லோர் நால்வர் தாக்கமும், பயண இலக்கியத்தில் மட்டுமே நாட்டம் கொண்டிருந்த சோமலெவை, வாழ்க்கை வரலாறுகளை உருவாக்க வழிவகுத்தது.

ஓமந்தூரார், அகண்ட தமிழகத்தின் முதலாவது தலைமை அமைச்சர். எவரோடும் ஒப்பிட முடியாத உன்னதமான மாமனிதர். முன்மாதிரி முதலமைச்சர். அவருடைய அஞ்சாநெஞ்சமும், கொள்கைப் பிடிப்பும், ஒழுக்க நெறியும், ஆன்மநேயப் போக்கும் சோமலெவை ஆட்கொண்டன. எனவே "விவசாய முதலமைச்சர்' என விதந்து, அவர் பற்றிய நூலை விவரித்து எழுதிச் சிறப்பித்தார்.

பண்டிதமணி - மழலைப் பருவத்திலேயே இளம்பிள்ளைவாதம் மற்றும் வறுமை. ஆனால், அளவற்ற அறிவுப் பசி. அறிஞர்களை நாடிப் பயில இயலாத சூழல். தமக்கு எதிர்ப்பட்ட இக்கட்டுகளை, ஒரு செல்வந்தர் மூலம் தகர்த்தார். மேலைச் சிவபுரியில் "சன்மார்க்க சபை' நிறுவி, தாம் இருக்கும் இடத்துக்கே அறிஞர்களை வருமாறு செய்தார். தமிழில் "பண்டிதமணி', வடமொழியில் "மகா மகோபாத்யாய' எனும் பட்டங்கள் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைத் தமிழ்ச் சங்கம் என தமிழ் வளர்த்த பெருமகனார். சோமலெ, இவர் வாழ்க்கை சரிதத்தை வடித்துப் பெருமை சேர்த்தார்.

தமிழகத்தில் காந்தியடிகளின் உப்பு சத்தியாக்கிரகம் வெற்றி பெற்றதே - சர்தார் வேதரத்தினத்தின் முனைப்பான முயற்சியால்தான். சர்தார், தம் செல்வம் முழுவதையும் மகளிர் கல்விக்காகவே வழங்கி, இறுதிவரை ஒரு தொண்டராகவே வாழ்ந்த மாமனிதர். எனவே, இம்மூவர்க்கும் சொற்கோட்டங்கள் (நூல்கள்) உருவாக்கி உயர்த்தினார், சோமலெ.

பாடுவார் முத்தப்பர், அருள்வாக்கு வழங்கும் கவிஞர். பல புத்தகங்களை எழுதிய வித்தகர். நெஞ்சில் படும் நிகழ்வுகளை கவிதையாகப் பாட, "எல்லாம் அவர் சொன்னபடியே நடந்தன' - என்பது வரலாறு. எனவே, கீழ்ச் சிவல்பட்டியில் "பாடுவார் கற்கோட்டம்' அமையக் காரணமானார், சோமலெ.

இந்த நான்கு செயல்களிலும் சோமலெ அடைந்த மனநிறைவும் மகத்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com