இந்த வாரம் கலாரசிகன்
By | Published On : 11th July 2021 11:53 AM | Last Updated : 11th July 2021 12:15 PM | அ+அ அ- |

காலம் சிறகடித்துப் பறக்கும் என்பது எவ்வளவு உண்மை. புதுவையில் பெரியவர் மன்னர்மன்னன் மறைந்து ஓராண்டு பறந்தோடி விட்டது என்பதை, கவிஞர் கோ.பாரதி அழைத்தபோதுதான் உணர்ந்தேன். என் மீது தனிப் பிரியம் வைத்திருந்த பெரியவர் மன்னர்மன்னன் மறைந்தபோது நான் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் செல்ல இயவில்லை.
கவிஞர் கோ.பாரதி தன் தந்தையாரின் முதலாமாண்டு நினைவேந்தலை, அவர் வாழ்ந்த இல்லத்திலேயே நடத்தியதாகக் கடிதம் எழுதியிருக்கிறார். அவர் பெயரில் மன்னர்மன்னன் அறக்கட்டளை நிறுவியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஜூலை 6-ஆம் தேதி பெரியவரின் நினைவு நாள். அன்று கவிஞர் கோ.பாரதி எனக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்தி என்னை நெகிழ வைத்தது.
எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கும், நிதி நெருக்கடிகளுக்கும் இடையே கடந்த ஓராண்டாக ஒட்டுமொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்கிறது. இதற்குக் கவிஞர் கோ.பாரதி மட்டும் விதிவிலக்கா என்ன? ஆனால், தன் தந்தையையும், பாட்டனாரையும்போல நெஞ்சுரமும், உறுதியும் ஒருங்கே அமையப்பெற்ற கவிஞர் கோ.பாரதி, அத்தனைக்கு இடையிலும் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதை எத்துணை பாராட்டினாலும் தகும்.
பெரியவர் மன்னர்மன்னனுடைய வாழ்க்கையின் பெரும் பகுதியுடன் இணைபிரிக்க முடியாமல் தொடர்கிறது அவருடைய இளைய மகன் கவிஞர் கோ.பாரதியின் பணிவிடை. தந்தையார் செல்லும் இடமெல்லாம் நிழலாகத் தொடர்ந்து, அவரது கண், காது, அவையங்கள் அனைத்துக்கும் உறுதுணையாக இருந்த பெருமை கவிஞர் கோ.பாரதிக்கு உண்டு.
பாவேந்தர் குறித்த பல செய்திகள் வெளிவரவில்லை. அப்படியே அவை வாய்வழிச் செய்தியாக உலவினாலும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. தனக்குத் தெரிந்ததை பாவேந்தரின் சீடராக இருந்த கவிஞர் பொன்னடியான் ஆவணப்படுத்தி இருக்கிறார். முல்லை முத்தையாவும் ஓரளவுக்குப் பதிவு செய்திருக்கிறார். பேராசிரியர் ய.மணிகண்டனின் ஆய்வுகள் பல, புரட்சிக் கவிஞரின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்ந்திருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக, மகன் மன்னர்மன்னனின் பதிவுகள்தான் முக்கியமானவை. பாரதிதாசன் என்கிற கவிஞருக்குள்ளே இருந்த மனிதரை, அன்புத் தந்தையை வெளிப்படுத்தும் பல நிகழ்வுகளுக்கு மகன் மன்னர்மன்னன் சாட்சியாக இருந்திருக்கிறார். அவரும்கூட, எல்லாத் தகவல்களையும் பதிவு செய்தாரா என்றால், இல்லை. அந்த இடத்தை நிரப்பும் பெரும்பணி கவிஞர். கோ.பாரதிக்கு உண்டு.
"கருப்புக் குயிலின் நெருப்புக் குரல்' என்பது கவிஞர் பாரதிதாசன் குறித்து அவருடைய மகன் மன்னர்மன்னன் எழுதிய ஆவணப்பதிவு. அதில் விட்டுப்போன சம்பவங்கள் இன்னும் ஏராளம். தனது கடைசி இருபது ஆண்டுகளில், தன்னுடன் நிழலாகத் தொடர்ந்த இளைய மகன் கோ. பாரதியிடம் விடுபட்ட நிகழ்வுகள் பலவற்றை மன்னர்மன்னன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதை அப்படியே விட்டுவிட்டால் எப்படி?
மன்னர்மன்னனின் அகவை எண்பதின்போது, தந்தை குறித்த தனது நினைவுகளை சிறு வெளியீடாக்கி அவரிடமே தந்த கவிஞர் கோ.பாரதி, இப்போது அதையே விரித்தெழுதி "வேந்தரின் மைந்தர்' என்கிற தலைப்பில் புத்தகமாக்கி இருக்கிறார். பாரதியார் பற்றி பாரதிதாசன், பாரதிதாசன் பற்றி மன்னர்மன்னன் வரிசையில் இப்போது, மன்னர்மன்னன் பற்றி கவிஞர் கோ.பாரதி எழுதி வெளியிட்டிருக்கும் புத்தகம்தான் "வேந்தரின் மைந்தர்'. அதை எனக்கும் அனுப்பித் தந்திருக்கிறார்.
2020 ஜூலை 6-ஆம் தேதி அமைதியடைந்த மன்னர்மன்னன் குறித்த புத்தகம் என்பது கடந்த நூற்றாண்டுத் தமிழக வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. மகாகவி பாரதியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இருவரின் தனிப்பெருமைகளை எடுத்துச் சொல்லும் கருவூலமாகத் திகழ்கிறது. வாழ்நாள் நிகழ்வுகளைச் சொல்லிச் செல்வது மட்டுமல்லாமல், மறைவு நாள் நிகழ்வுகளையும் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார் கவிஞர் கோ.பாரதி.
வேந்தரின் மைந்தர் குறித்து மைந்தரின் மைந்தர் படைத்திருக்கும் நினைவுக் குறிப்பு என்று இரண்டு வரியில் முடித்துவிட முடியாது. நிறையவே நிறைவாக எழுதியிருக்கிறார் கோ.பாரதி.
சமணமும் தமிழினமும் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்புடையவை என்பதற்கு எத்தனையோ சான்றுகள் நிலவுகின்றன. இலக்கிய அளவிலும், கல்வெட்டு அளவிலும் சமணம் குறித்த ஆய்வில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தக்காண பீடபூமி முழுவதிலுமே சமணம் தழைத்தோங்கியதற்கான அடையாளங்கள் விரவிக் கிடக்கின்றன.
ஆதிநாதர் தொடங்கி மகாவீரர் ஈறாக இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றி சமணத்தை வளர்த்ததாகக் கூறுவர். ஆனால், வரலாற்று ஆசிரியர்கள் அவர்களில் பார்சுவநாதரையும் (கி.மு.817-717) மகாவீரரையும் (கி.மு.599-527) மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள்.
தமிழகத்தின் தென் பகுதியான பாண்டிய நாட்டில் இருந்த மலைப்பகுதிகள் சமண முனிவர்களின் தனிமைத் தவத்துக்கு ஏற்றதாக இருந்ததால், வட நாட்டிலிருந்தும் பல சமண முனிவர்கள் தென்னாடு தேடி வந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமணர்களின் இருக்கைகளும், கல்வெட்டுகளும், தீர்த்தங்கரர் உருவங்களும் பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் காணக்கிடைக்கின்றன.
பாண்டிய நாட்டில் சமணம் என்கிற ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தொல்லியல் அறிஞர் முனைவர் வெ. வேதாசலம் எழுதியிருக்கும் புத்தகம் "எண்பெருங்குன்றம்'. சமணர்களின் புனிதத் தலங்களாக விளங்கிய எண்பெருங்குன்றங்களை, முதன்மைச் சான்றுகளின் அடிப்படையிலும், ஒப்பீட்டு முறையிலும் அடையாளம் காட்டுகிறார் அவர்.
இந்த நூல், மதுரையைச் சுற்றியுள்ள 12 சமணக் குன்றங்களில் இருந்த சமணப் பள்ளிகளின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை உள்ளடக்கியது என்கிறார் ஆசிரியர். அவை சமணர்களின் உறைவிடமாக மட்டுமல்லாமல் வழிபாட்டுத் தலமாகவும், சமண சமயக் கல்விச் சாலைகளாகவும் திகழ்ந்தன என்கிறது அவரது ஆய்வின் முடிவு.
தமிழ் பிராமி கல்வெட்டுகள் உள்ள குன்றங்களுக்கு மீளாய்வு செய்ய தன்னை அழைத்துச் சென்று, கல்வெட்டுகளைப் படிக்க வழிகாட்டிய ஆசான் "தினமணி' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், தமிழ் பிராமி கல்வெட்டறிஞருமான ஐராவதம் மகாதேவன் என்று பதிவு செய்கிறார். கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் எ.சுப்பராயலு, முனைவர் கு.சேதுராமன் ஆகியோரின் உதவிகளையும் நினைவுகூர்கிறார்.
சமணம் வளர்த்த புனிதக் குன்றங்களை அடையாளம் காட்டுகிறது "எண்பெருங்குன்றம்'. ஆய்வாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். வரலாற்று மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய தகவல்கள்.
கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய "இப்பவே கண்ண கட்டுதே...' கவிதைத் தொகுப்பு புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதிலிருந்த கவிதை இது. காலம் கடந்தது என்று ஒதுக்கிவிட முடியாது இந்த ஜனநாயக அவலத்தை...
வாக்காளப்
பெருமக்களா இவர்கள்?
வாக்களிக்கப்
பெறும் மக்கள்...!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...