கார் நாற்பது உணர்த்தும் அறிவியல் குறிப்புகள்

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று மதுரைக் கண்ணன்கூத்தனார் இயற்றிய "கார் நாற்பது'.
கார் நாற்பது உணர்த்தும் அறிவியல் குறிப்புகள்


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று மதுரைக் கண்ணன்கூத்தனார் இயற்றிய "கார் நாற்பது'. பழங்கால இலக்கியங்களை இயற்றிய புலவர்கள் யாவரும் அறிவியல் அறிவும், தெளிவும் கொண்டிருந்தமையை அவர்தம் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. கார் நாற்பதிலும் சில அறிவியல் குறிப்புகளைக் காணமுடிகிறது. 

தோழி ஒருத்தி வானவில் தோன்றினால் மழை வரும் என்ற குறிப்பைத் தருகிறாள் "திருவில் விலங்கு ஊன்றித் தீம்பெயல் தாம்' (பா-1). திருவில் என்பது வானவில். தீம்பெயல் என்பது இனிய மழை (பெய்தல் தன்மையுடையதால் பெயல் என்று பெயர்).

கார்காலத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும் என்பதை இரண்டாவது பாடல் "கார்ச்செல்வம் எய்த நெடுங்காடு நேர்சினை ஈன' (பா-2) என்று சொல்வதோடு, இதை உறுதி செய்யுமுகமாக கொன்றை மலர்கள் பூக்கத் தொடங்கிவிட்டாலே கார்காலம் வந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. கார்காலம் வந்தால் பூக்கும் அல்லது பூத்தால் கார்காலம் வந்துவிட்டது என்பதையும்;  மின்னலால் கண் பார்வை போய்விடும் என்கிற குறிப்பையும்  காணமுடிகிறது. "கண் வெளவி / ஒளிறுபு மின்னும் மழை' (பா-13) கண் வெளவி என்றால் கண் ஒளி கெட என்பதாகும்.

கார் காலத்தில் யானைகள் இணையும் தன்மையால் ஆண் யானைக்கு மதநீர் ஊறி, அதன் மணம் காடெங்கும் பரவும் என்கிற குறிப்பையும் காணமுடிகிறது. 

"கல்லோங்கு கானம் களிற்றின் மதநாறும்' (பா-24). கடல்நீரை வாங்கி மேகமாகி மேற்குத் தொடர்ச்சி மலையில் சூல் கொண்டு மழை பொழிவதை 33-ஆவது பாடல் "கடல்நீர் முகந்த கமம்சூழ் எழிலி'  (எழிலி - மேகம்) என எடுத்துரைக்கிறது. இதே குறிப்பை விரிதிரை (விரிந்த அலைகளையுடைய கடல்) வெள்ளம் வெறுப்பப் (வெறுத்தல் - நிறைதல்) பருகி' என்று 34-ஆவது பாடலும்; "கருங்கடல் மேய்ந்த கமம்சூழ் எழிலி' என்று 37-ஆவது பாடலும் உணர்த்துகின்றன.

இவ்வாறு,  கார்காலம் தொடங்கிவிட்டால் என்னென்ன இயற்கையில் என்னென்ன நிகழும் என்பதான அறிவியல் குறிப்புகளை "கார் நாற்பது' தருகின்றது. பருவப்பொழுது, மேகம் சூல் கொள்ளுதல், இடி முழக்கம், பூக்கள் மலர்தல், வாசம் வீசுதல், மழையின் தன்மை முதலிய குறிப்புகள் பாடலைப் புனைந்த புலவரின் அறிவியல் அறிவைத் தெளிவுபடுத்துகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com