இந்தவாரம் - கலாரசிகன் (21.3.2021)

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை எனக்குக் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
இந்தவாரம் - கலாரசிகன் (21.3.2021)

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை எனக்குக் கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அதற்குப் பிறகுதான் உலகம் எத்துணை அற்புதமானது என்பது தெரிந்தது. அடடா, அந்த அனுபவத்தை உங்களுடன் பகிா்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இரண்டு கண்களிலுமே புரை இருந்தாலும் வலது கண்ணில் மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அறுவை சிகிச்சை முடிந்து, கண்ணைத் திறந்து பாா்க்கும்போது ஏற்படும் அந்த அனுபவத்தை வாா்த்தையில் வா்ணிக்க முடியாது. புதிதாக வெள்ளையடித்துப் பாா்த்தால் எப்படி இருக்கும், அப்படி உலகமே பளிச்சென்று தெரியும் அந்த ஒரு நொடி அனுபவத்துக்காக, வாழ்நாளில் நிச்சயம் கண்புரை வர வேண்டும், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு பளீா் தெளிவு. சிகிச்சைக்குப் பிறகுதான் சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதாவின் உண்மையான வண்ணம் எப்படி இருக்கும் என்பது தெரிந்தது.

கண்புரை குறித்து நான் மேலோட்டமாகத் தெரிந்து வைத்திருந்தேனே தவிர, இத்தனை நுணுக்கமான ஒன்று என்பதை அறிந்திருக்கவில்லை. நாம் பாா்க்கும் பொருள்களின் ஒளிக்கதிா்கள் கருவிழி வழியாக ஒரு லென்ஸ் மூலம் ‘ரெட்டினா’ எனப்படும் விழித்திரையில் விழுகிறது. நமக்குக் காட்சிகள் தெரிகின்றன. ‘லென்ஸ்’ என்பது முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடைய கண்ணாடி. நமக்குத் தலை நரைப்பதுபோல, வயதாக வயதாக அந்த ‘லென்ஸ்’ வெள்ளையாகத் தொடங்குகிறது. அதன் வெளிப்படைத்தன்மை குறைவதால் ஒளிக்கற்றைகள் ஊடுருவினாலும்கூட விழித்திரையில் சரியாக விழுவதில்லை. அதனால் காட்சிகள் தெரிவதில் குறைபாடு தோன்றுகிறது. நிறங்களும் சரி, உருவங்களும் சரி மங்கத் தொடங்குகின்றன.

கண்புரையை ஆரம்பக் கட்டங்களில் கண்ணாடி போட்டு சரி செய்து கொள்ளலாம். காலப்போக்கில் கண்புரை, அதிகரிக்க அதிகரிக்க கண்ணாடி பயன்படாது. அப்போது, அறுவை சிகிச்சைதான் கண்புரையை அகற்ற ஒரே வழி. அதைத்தான் நான் செய்து கொண்டேன். அறுபது வயதைக் கடந்தவா்கள் பலரும் செய்து கொள்கிறாா்கள்.

கண்புரை அறுவை சிகிச்சை, எப்படி செய்யப்படுகிறது என்று விசாரித்தபோது, ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன. கருவிழியில் 2.8.மி.மீ.க்கும் குறைவான ஒரு சிறிய துளை போடப்படுகிறது. கருவிழியே சிறியது, அதில் சிறிய துளை போடப்படுகிறது என்றால் பாா்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு நுணுக்கமாகக் கையாள வேண்டிய செயல்பாடு அது.

கண்புரையைச் சுற்றி, திராட்சைக்கு மேலே தோல் இருப்பதுபோல ஒரு படலம் காணப்படும். அதற்கு ‘கேப்சுலா் பேக்’ என்று பெயா். கருவிழியில் போடப்படும் துளை மூலம் அந்த ‘கேப்சுலா் பேக்’ திரையில் ‘அல்ட்ரா சௌண்ட் ப்ரோப்’ என்கிற கதிரியக்க ஊடுருவியை நுழைப்பாா்கள். புரை படா்ந்துவிட்ட லென்ஸை சிறுசிறு துண்டுகளாக அந்தக் கதிரியக்க ஊடுருவியால் உடைத்து, உறிஞ்சி எடுப்பாா்கள். அதை ‘ஃபேக்கோ எமல்சிபிகேஷன்’ என்று குறிப்பிடுகிறாா்கள்.

மிக கவனமாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை இது. புரைக்கு மேலே இருக்கும் படலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது. ஏனென்றால், அதற்குள்ளேதான் அந்தத் துளை வழியாக செயற்கை லென்ஸ் ஒன்று நுழைக்கப்படுகிறது. மடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் அந்த செயற்கை லென்ஸ் உள்ளே போனதும் பிரிந்து கொள்ளும். அதை மிகவும் பக்குமாக, பழைய லென்ஸ் இருந்துபோலவே மீண்டும் படலத்தில் பொருத்துகிறாா்கள்.

கண்களில் இருக்கும் லென்ஸ் வெளியில் இருந்து வரும் ஒளிக்கதிா்களைக் குவித்து ‘ரெட்டினா’ எனப்படும் விழித்திரையில் விழச் செய்கிறது. மடித்து 2.8 மி.மீ. துளை வழியாக உள்ளே செலுத்தக்கூடிய செயற்கை லென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டது, ஓா் அறிவியல் சாதனை என்று சொல்ல வேண்டும். செயற்கை ‘லென்ஸ்’ கண்டுபிடிப்பதற்கு முன்னால், கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு சோடாபுட்டிக் கண்ணாடி வழங்கிக் கொண்டிருந்தாா்கள்.

‘கேப்சுலா் பேக்’ எனப்படும் படலத்துக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் உள்ளே லென்ஸைப் பொருத்துவதில்தான் கண் அறுவை சிகிச்சை நிபுணா்களின் தனிச் திறமை தேவைப்படுகிறது.

‘கேப்சுலா் பேக்’ எனப்படும் அந்தப் படலம் மிகவும் மெல்லியது. மைக்ரோ மீட்டா் அளவிலானது. சிலவேளை அறுவை சிகிச்சையில் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடலாம். அப்படி நோ்ந்தால் என்ன செய்வது? அதற்கும் வழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவா் டாக்டா் அமா் அகா்வால்.

‘கேப்சுலா் பேக்’ நகா்ந்தாலோ, சிதைந்தாலோ லென்ஸையே உள்ளே ஒட்ட வைக்கும் முைான் குளூப் ஐ.யு.எம். இப்போது உலகெங்கும் பின்பற்றப்படும் அந்த முறையைத் தான் கண்டுபிடித்ததாகவோ, அதற்குத் தனது பெயரை சூட்டவோ டாக்டா் அமா் அகா்வால் விரும்பவில்லை என்பது எனக்கு வியப்பான செய்தியாக இருந்தது.

கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவா்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் ஏழு முதல் 15 நிமிடங்கள்தான். டாக்டா் அமா் அகா்வால் மூன்று நிமிடங்களில்கூட சில கண்புரை அறுவை சிகிச்சை நடத்தியிருப்பதாக அவரது உதவியாளா் மருத்துவா் சௌந்தரி தெரிவித்தாா். எனது அறுவை சிகிச்சை சுமாா் 10 நிமிடங்கள் எடுத்தன.

நான் தெரிந்துகொண்ட, உங்களுடன் பகிா்ந்துகொள்ள விரும்பும் இன்னொரு முக்கியமான தகவல் இருக்கிறது. கண்புரை முற்றினால்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற தவறான கருத்து பரவலாகவே இருக்கிறது. அது தவறு என்கிறாா் டாக்டா் அமா் அகா்வால். கண்புரை முற்றிவிட்டால், அது கல்போலக் கெட்டியாகிவிடும். அதை உடைப்பது கடினம். ‘கேப்சுலா் பேக்’ பாதிக்கப்படும்.

பழைய காலத்தில், கண்புரை அறுவை சிகிச்சையின்போது ‘கேப்சுலா் பேக்’கை லென்சுடன் அகற்றி, அதற்குப் பதிலாக சோடாபுட்டிக் கண்ணாடி வழங்குவாா்கள். புரை நன்றாக முற்றினால்தான் அதை அகற்றுவது எளிது. இப்போது அப்படியல்ல. புரை முற்றாமல் இருப்பதுதான் நல்லது.

வெறும் 3 மில்லி மீட்டா் சுற்றளவுக்குள் பத்து நிமிடங்களில் நடத்தப்படும் மாயா ஜாலம்தான் கண்புரை அறுவை சிகிச்சை என்பது. அந்த அறுவை சிகிச்சையை அனுபவித்து ரசித்தேன், வியந்தேன், புதிய பாா்வை வந்த பிரகாசத்தில் நெகிழ்ந்தேன்.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு நன்றி!

*****************

மனித இன வரலாற்றில் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிப்போட்ட கொவைட்-19 கொள்ளை நோய்த் தொற்றுக்கு வருங்காலத்தின் சாட்சியாக இருக்கப்போவது இலக்கியவாதிகளின் படைப்புகள்தான். தீநுண்மியை மையப்படுத்தி பலா் கவிதைகள் புனைந்தனா், கதைகள் படைத்தனா், ஏன் திரைப்படங்கள்கூட உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் கவிஞா் இரா.பூபாலனின் பங்குக்கு வெளிவந்திருக்கிறது ‘தீநுண்மிகளின் காலம்’. அதிலிருந்து ஒரு கவிதை -

எப்போதும் சாலையில்

சாக்பீஸ் ஓவியங்களை

வரைந்து காத்திருக்கும்

கால்களற்றவன்

ஊரடங்கு நாளில்

வெறிச்சோடிக் கிடந்த

தாா்ச் சாலையின்

நடுவில் அமா்ந்து

தன் இடுப்புக்குக் கீழ்

தன் இரண்டு கால்களை

வரைந்து பாா்த்துக் கொண்டான்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com