சுதந்திரக் கவிஞர்
By டாக்டர் மு. வரதராசனார் | Published On : 12th September 2021 10:47 PM | Last Updated : 12th September 2021 10:47 PM | அ+அ அ- |

நாட்டு மக்கள் நலம்பெற்று வாழ்வதற்காகப் பாடல் பல பாடிய பாரதியாருடைய நெஞ்சம், நாட்டு விடுதலையை மட்டும் பாடி அமையவில்லை. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு இடையூறாக இருந்து வந்த பலவகைக் கொடுமைகளையும் எதிர்த்துச் சாடியது. சாதி வேறுபாட்டைத் தாக்கிப் பாடினார்; மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழங்கினார்; குழந்தைகளுக்கு ஊக்கம் ஊட்டிப் பாடினார்; பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமையை எதிர்த்துப் போரிட்டார்; தாய்மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலத்திற்கே மதிப்புக் கொடுத்து வந்த அந்நியக் கல்வி முறையைத் தாக்கினார். இவ்வாறு அவர் சமுதாய நன்மைக்கான பாடல்கள் பலவற்றைப் பாடினார். அவை இன்றும் உணர்ச்சி மிகுந்த கவிதைகளாகப் பாடிப் போற்றப்படுகின்றன.
பாரதியார் பிறவியிலேயே சுதந்திரமான மனப்பான்மை உடைய கவிஞர்; சுதந்திரத்தைத் தெய்வமாக வழிபட்டுப் பாடிய கவிஞர், செல்வம் நிரம்பிய ஜமீன்தார்களிடையே வாழ்ந்து, அவர்களைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் சூழலில் வளர்ந்து, அவருடைய மனம் அதைவிட்டு உயரப் பறந்தது. சென்னையில் "சுதேசமித்திரன்' என்னும் நாளிதழுக்குத் துணையாசிரியராக அமர்ந்த பிறகு, நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் அவர் நெஞ்சம் ஈடுபட்டது. அவர் எழுதிய உரை நடையிலும் கவிதையிலும் புதிய வேகமும் ஆர்வமும் ஏற்பட்டன. கற்பவர்களின் நெஞ்சை உடனே மாற்றிச் செயல்படுத்தும் தீவிர உணர்ச்சி அவருடைய எழுத்துகளில் காணப்பட்டது.
("தமிழ் இலக்கிய வரலாறு' நூலிலிருந்து...)