ஒரு முறை காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சிற்றுண்டி சாப்பிடுவதற்காகக் கடலூரில் ஓர் உணவு விடுதியின் முன்னால் நிறுத்தினோம். அந்த விடுதிக்கு அருகில் ஒரு புத்தகக் கடை. அதன் உரிமையாளர் அப்போதுதான் அதைத் திறந்து, புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார்.
புத்தகக் கடையைப் பார்த்தபோது, பசி மறந்துவிட்டது. உள்ளே நுழைந்துவிட்டேன். காலையில் முதல் வாடிக்கையாளராக அந்தப் புத்தகக் கடையில் நுழைந்துவிட்டு, புத்தகம் வாங்காமல் வெளியேறுவது அநாகரிகம் என்பது இருக்கட்டும். படிக்காத பல புத்தகங்களைப் பார்த்த மகிழ்ச்சியும், இதை வாங்குவதா, அதை வாங்குவதா என்கிற பரபரப்பும் தொற்றிக் கொண்டது.
கடலூர் கிருஷ்ணாலயா காம்ப்ளக்ஸில் இயங்கும் "சித்ரா புக்ஸ்' என்கிற கடையிலிருந்து சில புத்தகங்களை வாங்கி, காரில் வைத்துக் கொண்டேன். அதன் பிறகுதான் சிற்றுண்டி, பயணம் என்று தொடர்ந்தேன். அன்று வாங்கிய புத்தகங்களில் ஒன்று ப.திருமலை எழுதிய "மாண்புமிகு முதல்வர்கள்'.
ஆந்திரம், கேரளத்தின் பகுதிகளை உள்ளடக்கிய அன்றைய சென்னை ராஜதானியின் முதல்வர்களாக இருந்தவர்கள் பற்றிய புத்தகம் அது. "சுப்பராயலு முதல் ராஜாஜி வரை' சென்னை ராஜதானியின் முதல்வராக இருந்தவர்கள் பற்றிய புத்தகம் என்பதைவிட, அந்தக் காலகட்டத்தின் தமிழக அரசியல் வரலாறு என்றுதான் கூறவேண்டும்.
சென்னை ஐக்கிய சங்கம், திராவிடர் சங்கம், ஹோம்ரூல் இயக்கம் ஆகியவற்றுடன் தொடங்குகிறது அந்த வரலாற்றுப் பதிவு. நீதிக்கட்சி எப்படி ஆட்சிக்கு வந்தது என்பது மட்டுமா, அதன் தொடக்கம், வளர்ந்தது, வீழ்ச்சி, சாதனைகள் என்று 1920 முதல் 1937 வரையிலான 17 ஆண்டு வரலாறும் ஒன்றுவிடாமல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ராஜாஜி முதல்வர் ஆனதிலிருந்து தொடங்குகிறது அடுத்த 12 அத்தியாயங்கள். பிரகாசம், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, ராஜாஜி ஆகியோரின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது குறித்தும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்திற்கு, பதிப்பாளர் "நக்கீரன்' கோபால் "அரிய வரலாற்று ஆவணம்' என்று தலைப்பிட்டு, பதிப்புரை வழங்கி இருக்கிறார். அதுவே நல்லதோர் அரசியல் கட்டுரை எனலாம்.
""தேர்தல் குறித்தோ, ஆட்சி அதிகாரம் குறித்தோ, ஆள்வோர் குறித்தோ, ஆட்சிக்கான வாய்ப்பைப் பறிகொடுத்தோர் குறித்தோ பெரும்பாலானோரிடம் எந்தவிதப் புரிதலும் இல்லை. நம் எல்லோர் கையிலும் வாக்குச்சீட்டு வடிவில் மிகவும் சக்தி வாய்ந்த அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பைத் தெரிந்து கொள்ளாமல், தேர்தல் நேரத்தில் யார் அன்பளிப்புகளைக் கொடுக்கிறார்களோ, அவர்கள் எதற்காக அதைக் கொடுக்கிறார்கள் என்பதைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு வாக்களிக்கும் போக்கு இன்றும் பலரிடம் இருக்கிறது.
அன்பளிப்புக்காக நாம் நம் அதிகாரத்தை, நம் சக்தியை, நம் சுயமரியாதையை விற்கிறோம் என்கிற உணர்ச்சிகூட எவரிடமும் இல்லை'' என்கிற "நக்கீரன்' கோபாலின் வார்த்தைகள் என்னை மட்டுமல்ல, ஜனநாயகத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரையும் கவலைப்படுத்தும்.
""தமிழகத்தின் கடந்த காலத்திற்குள் நம்மை அழைத்துச் சென்று, அரிய காட்சிகளைக் காட்டுகிறது இந்தத் தகவல் களஞ்சியம்'' என்கிற அவரது கூற்று, நூற்றுக்கு நூறு உண்மை.
------------------------------------------------------
வள்ளுவருக்கும், கம்பருக்கும் அடுத்தபடியாகத் தமிழகத்தில் மிக அதிகமாகப் பேசப்படுகிற, வாசிக்கப்படுகிற, விவாதிக்கப்படுகிற கவிஞர் மகாகவி சுப்பிரமணிய பாரதியாராகத்தான் இருப்பார். எத்தனையோ பார்வைகள், எத்தனையோ கோணங்களில் பாரதி எடைபோடப்பட்டும் இன்னும்கூடப் புலப்படாத பல பரிமாணங்கள் அவருக்கு இருக்கின்றன என்பதால்தான் அவர் மகாகவி.
பாரதியாரைப் பற்றிய பல நூல்கள் வெளிவந்துவிட்டன. அவரது சமூக, இலக்கிய, சமயப் பணிகள் குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. பெரியவர் சீனி. விசுவநாதனும், இளசை மணியனும், பெ.சு.மணியும், பேராசிரியர் ய.மணிகண்டனும், நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதியும் தங்களது பிறவிப் பயன் என்று கருதி நடத்தியிருக்கும் ஆய்வுகள், பாரதியாரின் பரிமாணத்தை எடுத்தியம்ப மேற்கொள்ளப்பட்ட வேள்விகள்.
பாரதியாரைப் பற்றி வேறொரு கோணத்தில் பதிவு செய்ய முற்பட்டிருக்கிறார் "ஐகேஎஸ்' என்று பரவலாக அறியப்படும் பேராசிரியர் கி.சுப்பிரமணியன். கோவையில், திருமுறை, திருக்குறள் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்திவரும் "ஐகேஎஸ்', தொகுத்திருக்கும் புத்தகம் "நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்...'. பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி, அவருடன் பழகியவர்கள், உதவியவர்கள், அவரால் போற்றப்பட்டவர்கள் குறித்த பல தகவல்களைத் தொகுத்துப் புத்தக வடிவம் தந்திருக்கிறார் அவர்.
சீவலப்பேரியில் தொடங்கி, காசி, சென்னை, புதுவை என்று பாரதியார் வாழ்ந்த, சென்ற இடங்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும், அவருடனான அவர்களது அனுபவங்கள் குறித்தும் சுவாரசியமாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். பாரதியின் முன்னோடிகளான வள்ளலார் குறித்தும், ஆவுடையக்காள் குறித்துமான அவரது பதிவுகள் நல்லதொரு ஆய்வுக் கண்ணோட்டம்.
டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயரால் கோவை பாரதீய வித்யா பவன் சார்பில் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு மேல் இந்தப் புத்தகம் குறித்து நான் சொல்லவா வேண்டும்? பாரதி அன்பர்கள் ஒவ்வொருவரிடமும் இருந்தாக வேண்டிய புத்தகம் இது என்பது எனது பரிந்துரை.
------------------------------------------------------
புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது தனிச்சுற்றுக்கான "தமிழர் எழுச்சிக் குரல்' பொங்கல் மலர் 2022. அதை வெளிக்கொணரும் "நாஞ்சில் நாட்டான்' என்கிற அ.பத்மநாபனுக்கு ஒரு மனக்குறை. பத்திரிகைகளை நடத்துபவர்கள், முதல் பக்கத்திலேயே தெரிந்தே செருப்பு விளம்பரம் முதல் மசாலாபொடி விளம்பரம் வரை வணிக நோக்கத்தில் வெளியிடுகிறார்கள் என்பதுதான் அவரது ஆதங்கம்.
அவர் சொல்வதை மறுக்கவில்லை. ஆனால், நூற்றுக்கணக்கானவர்களுக்கு மாதா மாதம் ஊதியம் கொடுத்து நடத்த வேண்டிய நிர்பந்தம் இருக்கிறதே, என்ன செய்ய? சில சமரசங்களுக்கு உடன்படாவிட்டால், பத்திரிகையை நிறுத்திவிட வேண்டும். அச்சு ஊடகங்கள் ஏற்கெனவே காகித விலையால் தடுமாறிக் கொண்டிருக்கின்றன என்கிற எதார்த்தத்தை அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை.
"தமிழர் எழுச்சிக் குரல்' பொங்கல் மலரில் வெளியாகி இருந்தது கவிஞர் வைகை விஜய் என்பவர் எழுதியிருக்கும் "மழை' என்கிற கவிதை. அதிலிருக்கும் சில வரிகள் இவை-
உன்
இடத்தையும்
வீட்டையும்
தெருவையும்
நீர் ஆக்கிரமிக்கும்போது
எப்படி வலிக்கிறதோ
அப்படித்தான் மழைக்கும்...!
இனியாவது
மழை நின்று
சுத்தம் செய்கிறபோது
அடைப்பை மட்டும்
எடுக்காதே
ஆக்கிரமிப்பையும் எடு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பஞ்சாப் விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப ராகவ் தவறிவிட்டாா்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பிஞ்சுக் கைவண்ணம்
முதல் தேர்தலும் சுகுமார் சென்னும்...
ஏழு தலைமுறை சுற்றம்...
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


