பூசத்துறை

நெல்லை மாவட்டத்தில், குறிப்பாக அம்பாசமுத்திரம் பகுதியில், "தாலம்' என்னும் சொல்லும், பெண்கள் பாத்திரம் "பூச' வேண்டும், விளக்கு "பூச' வேண்டும் என்று சொல்வதும் (1971 வரை) பேச்சுவழக்கில் இருந்தன
பூசத்துறை


நெல்லை மாவட்டத்தில், குறிப்பாக அம்பாசமுத்திரம் பகுதியில், "தாலம்' என்னும் சொல்லும், பெண்கள் பாத்திரம் "பூச' வேண்டும், விளக்கு "பூச' வேண்டும் என்று சொல்வதும் (1971 வரை) பேச்சுவழக்கில் இருந்தன. "தாலம்' என்பது சாப்பிடும் தட்டைக் குறிப்பது. "பூசல்' என்பதற்குக் "கழுவுதல்' என்று பொருள்.

தாமிரவருணி ஆற்றங்கரையில், கோயில் இருக்கும் இடங்களில் கல்படித்துறையும், அதோடு சேர்ந்த ஒரு கல் மண்டபமும் இருக்கும். அதற்குப் "பூசத்துறை' என்று பெயர். சில இடங்களில்,  "தைப்பூசத்துறை' என்னும் பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.

கோயில்களில் ஒவ்வோர் ஆண்டும் பத்து நாள்கள் திருவிழா நடக்கும். "உற்சவரை' அந்தப் பத்து  நாள்களும் சப்பரத்தில் வைத்து ஊரைச் சுற்றி வருவது மரபு. பத்து நாள் திருவிழா முடிந்தவுடன், உற்சவரை பூசத்துறைக்குக் கொண்டுசென்று, கல்மண்டபத்தில் வைத்துக் கழுவி (பூசி), வழிபாடுகள் செய்து, அதன்பிறகே கோயிலுக்குள் கொண்டு வைப்பார்கள். உற்சவரை, அதாவது சுவாமியைக் கழுவும் துறைதான் "பூசத்துறை' என்று ஆகியிருக்கிறது.

நறுநெய்க் கடலை 
விசைப்பச் சோறு அட்டுப்
பெருந் தோள் தாலம் பூசல் மேவர 

(புறம்-120. வரிகள் 14,15; கபிலர்)

இந்த ஒரு பாடலிலேயே, "தாலம்', 

"பூசல்' ஆகிய இரண்டு வழக்குச் சொற்களும் இடம்பெறுகின்றன. உணவு உண்ணும் தாலத்தை உண்பதற்கு முன்பு ஒருமுறையும், உணவு உண்டு முடித்தபிறகு இன்னொரு முறையும் என்று இரண்டுமுறை கழுவியிருக்கின்றனர். இன்று நேற்றல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழரிடம் இப்படி ஓர் உணவுக் கலாசாரம் இருந்திருக்கிறது.

பெண்களே உணவு ஆக்குபவர்களாகவும், பரிமாறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். இதுபோல, சங்கப் பாடல்கள் அனைத்திலுமே, உணவுக் கலாசாரம் பற்றிய தகவல்கள் பரவலாகக் காணப்படுகின்றன. ஆனாலும், பெரும்பாணாற்றுப்படையில், பரிசில் வேண்டி பாணன் செல்லும் வழியெல்லாம், பல்வேறு நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்கள் என்னவிதமான உணவு கொடுத்து உபசரிப்பார்கள் என்பது பற்றியதாகவே இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. 

பூசல் என்றால் ஓசை:

"பூசல்' என்பதற்கு "ஓசை' என்னும் பொருளும்கூட உண்டு. சான்றாக, மலைபடுகடாமில் இடம்பெறும் சில வரிகள் இவை:
"புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல்' (299)
"மலைமார் இடூஉம் ஏம் பூசல்' (306)
"சிறுமையுற்ற களையாப் பூசல்' (314)
"கிளி கடி மகளிர் விளி படு பூசல்' (229)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com