பாரதி போற்றிய மகாமகம்

தைந்நீராடல் என்பது சங்ககாலம் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை "மலி புனல் நிகழ்தரும் தீநீர் விழவு' (பதிற்று. 48:13) என்ற தொடர்வழி அறியமுடிகிறது.
பாரதி போற்றிய மகாமகம்

தைந்நீராடல் என்பது சங்ககாலம் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை "மலி புனல் நிகழ்தரும் தீநீர் விழவு' (பதிற்று. 48:13) என்ற தொடர்வழி அறியமுடிகிறது. அதன் தொடர்ச்சியாக மாசி மாதமும் நீராடலுக்குரிய சடங்கும் சம்பிரதாயமும் கைக் கொள்ளப்படுகிற புண்ய காலமாகின்றது. மாசி மாதத்தின் மகம் நட்சத்திரத்தன்று நீராடல் புண்ணியமாகப் போற்றப்படுகிறது.
மாசி மாதம் "கும்ப மாதம்' என்று அழைக்கப்படும். இந்தக் கும்ப மாதத்தில் நீர்நிலைகளைப் போற்றுதல் இந்திய ஆன்மிக மரபு. கும்ப மாதமாகிய மாசி மாதத்தில் முழுநிலவு நாளில் வரும் மக நட்சத்திரம் மாசிமகம் எனப்படும்.

அந்நாளில் தேவர்களின் ஆசிரியராம் பிரகஸ்பதியாகிய குரு சிம்ம ராசியை அடைவார்; சிம்ம ராசிக்கு உரிய சூரியன் தன் மகனாகிய சனியின் வீடாகிய கும்ப ராசியாகிய ஏழாமிடம் சேர்வார்; இவ்வாறு சேர்தல், மக நட்சத்திரம் அமையும் பெளர்ணமி நாளில்.      சந்திரன் வந்து சிம்மராசியில் நிற்கும் குருவுடன் சேர, இவ்விருவரையும் சூரியனும் சூரியனை இவ்விருவரும் முழுப் பார்வையுடன் பார்க்கும் நாளில் வருவது மகாமகப் புண்ணிய காலம். இவ்வாறான விண்மீன் அமைப்புகள் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைகிறது. இதனை "மகாமகம்' எனத் தென்னகமும், "கும்பமேளா' என வடவரும் கொண்டாடுவர். தென்னவர் தமிழகத்தின் கும்பகோணத்திலும், வடவர் அலகாபாத்திலும் புண்ய நீராடிக் களிப்பர்.

ஒவ்வோர் ஆண்டும் மாசி பெளர்ணமியில் அமையும் மகம், மாசிமகம் எனவும் புனித நீராடலுக்கு உரிய நாளாகவும் இன்றளவும் உள்ளது.  2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் நாள் கொண்டாடப்பட்டது. பன்னிரு ஆண்டுகள் கழித்து 2028-ஆம் ஆண்டு மகாமகம் கொண்டாடப்பட வேண்டும். எனினும், ஆண்டுதோறும் மாசிமகம் அமைவதும், அந்நாளில் நீராடலும் மக்களின் பழக்கமாக அமைகிறது.

இந்த ஆண்டு 17.2.2022-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று மாசிமகம் அமைகிறது. இம்மக நாளில் புண்ணிய தீர்த்தங்கள், கடல், ஆறு முதலியவற்றில் நீராடுவது புண்ணிய செயல். இந்த மாசிமக நீராடலை மகாகவி பாரதி தமது சுதேசமித்திரனில் விவரிக்கிறார்:

""தமிழகத்தின் குடமூக்கு எனப்படும் கும்பகோணத்தில் நீராடல், அதிலும் அங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடல் சிறப்பு என்பது ஐதீகம். அந்த ஐதீகத்தைச் சொல்ல வருகிற பாரதி வடமொழியில் வால்மீகி, காளிதாஸர்களையும் தமிழில் கம்பனையும் புகழேந்தியையும் இங்கிலீஷில் ஷெல்லியையும் கவிகளின்கவி என்று சிறப்பித்துச் சொல்கிறார்கள்... அதுபோல கும்பகோணத்திலுள்ள அமிர்தவாவிகள் என்று சொல்லப்பட்ட பொற்றாமரைக் குளம், மஹாமகக் குளம் இவ்விரண்டும் புண்ய தீர்த்தங்களுக்குப் புண்ய தீர்த்தமென்று புராணம் சொல்கிறது'' என்கிறார். 

தொடர்ந்து ஒன்பது தீர்த்தங்களும் மகாமகக் குளத்தில் நீராடுகின்ற புராணத்தை எடுத்துரைக்கிறார் பாரதி. பாரதி வாழ்ந்த காலத்தில் கொண்டாடப்பட்ட மகாமகம் 22.02.1921 - ஆம் நாள் வந்திருக்கிறது. அதனைத் தமது "சுதேசமித்திரன்' இதழில் மறுநாள், அதாவது,  23.02.1921-ஆம் நாள் பதிவு செய்கிறார். லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் அதில் ஸ்நானம் செய்திருப்பார்கள் என எழுதுகிறார்.

பழம் புராணத்தையும் உலகளாவிய கவிஞர்களின் பெருமையை மட்டும் சொல்லியிருந்தால் அன்றைய நாளின் சிறப்பைக் கூறுகின்ற சாதாரணச் செய்தியாளராக பாரதி தேங்கிப் போயிருப்பார். அவரோ காலம் கடந்த கவி! இல்லையில்லை காலத்தைக் கட்டமைக்கும் பெரும் படைப்பாளி!

மக நாளின் புண்ய நீராடலின் மகத்துவத்தை அந்த மகாகவி விளக்குகிறார். இதுபோன்ற தீர்த்த யாத்திரைகளின் தத்துவத்தை இங்கு விளக்குவோம் எனப் பேசுகிறார்.

""இவற்றில் பாவமழிந்து புண்யத்தன்மை பெற வேண்டுமெனில் உண்மையான நம்பிக்கை இருக்க வேண்டும் எனவும், இனிமேல் நாம் பாவம் பண்ணுவதில்லையென்ற மனம் நிச்சயம் வேண்டும்'' எனவும் வலியுறுத்துகிறார்.

""பாவமானது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவித்தல் இங்ஙனமே, புண்யமாவது தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பக் கலப்பில்லாத சுத்தமான இன்பம் விளைவித்தற்குரிய செய்கையென்பது சாஸ்த்ர கோடிகளின் பரம ஸித்தாந்தம்' என்று பாவ - புண்ணியத்திற்கு விளக்கம் கொடுக்கிறார்.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், இவ்வாறு எண்ணத்தை விட்டுவிட்டு மனத்திடத்துடன் ஞானம் பெறுபவன் ஏன் தலயாத்திரை மேற்கொள்ள வேண்டும் என வினாவும் எழுப்புகிறார். ""பாவத்தைத் துறந்துவிட விரும்புவோனுக்கு மனோநிச்சயமும் ஞான உதயமும் கதியாயின் பணச் செலவு செய்து ரயிலேறிக் கும்பகோணத்துக்கும் காரேறி ராமேசுவரத்துக்கும் ஏன் போக வேண்டும் என்று சிலர் வினவக்கூடும்!'' என வினா எழுப்புகிறார்.

இந்த வினாவுக்கான விடையாக, ""இப்படிப்பட்ட பாவத்தைக் களைந்து புண்யத்தைப் போர்த்துக் கொள்வதாகிய ராஜவிரதத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ? அவ்விதிச் சடங்கே மஹாமக புண்ய தீர்த்த யாத்திரை என்க'' என விடை தருகிறார்.

ஏதாவது ஒரு நிகழ்வின் சிக்கலைத் தீர்ப்பவர்கள் அறிவாளிகள். ஆனால், அச்சிக்கலைத் தீர்ப்பதோடு வருங்கால வளமைக்கும் சேர்த்து யோசிப்பவர்கள் லட்சியவாதிகள்! நாடு விடுதலையடையும் முன்னரே விடுதலைப்பள்ளு பாடிய பாரதிப் பாவலர், அவ்விடுதலைச் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் நிர்ணயம் செய்கின்றார். மனதில் உறுதியோடு வாக்கில் இனிமையுடன், நல்லவே செய்ய ஆணையிடும் பாரதிப்பாவலர் புண்ய நீராடலையும் மனமாசகற்றும் சடங்காக்கி, ராஜவிரதமாக்கும் நயத்தை என்னென்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com