கற்பென்னும் திண்மை!

"பெண் புத்தி பின் புத்தி' என்பதைப் பேச்சு வழக்கில் அடிக்கடி கேட்டிருக்கிறோம். பொதுவாகப் பெண்களே இப்படிப்பட்டவர்கள் என்பதுபோல் உள்ளது இது. ஆனால், "பின் புத்தி' என்று
கற்பென்னும் திண்மை!

"பெண் புத்தி பின் புத்தி' என்பதைப் பேச்சு வழக்கில் அடிக்கடி கேட்டிருக்கிறோம். பொதுவாகப் பெண்களே இப்படிப்பட்டவர்கள் என்பதுபோல் உள்ளது இது. ஆனால், "பின் புத்தி' என்று இங்குக் குறிக்கப்படும் "வருமுன் காக்காத அறியாமை' ஆண்களுக்கும் உண்டு.
 சினம், பொய், புறங்கூறல் முதலியவை ஆண்- பெண் என்ற வேறுபாடு இல்லாமல் இருபாலார்க்கும் பொதுவானவை. பின்புத்தி என்பதும் அப்படிப்பட்டதே. ஆனால், பெண்கள் அடிமைப்பட்டிருந்த காலத்தில், ஆண்கள் அவர்களைப் பழித்துரைப்பதற்கு அது பயன்பட்டது.
 அதுபோலவே, ஆங்கில மொழியிலும் பெண்களை இழித்துரைக்கும் சொற்றொடர்கள் உண்டு. மிகச் சிறந்த புலவரான ஷேக்ஸ்பியர் ஒரு நாடகத்தில் (ஒரு பாத்திரத்தின் வாயிலாக) "திட்பமற்ற நிலையே! உனக்குத்தான் பெண் என்று பெயர் உள (ஊழ்ஹண்ப்ற்ஹ்ண், ற்ட்ஹ் ய்ஹம்ங் ண்ள் ஜ்ர்ம்ங்ய்) என்று குறிப்பிடுகிறார். பெண் மனம் பேதை மனம் என்று கருதுமாறு அத்தொடர் உள்ளது.
 தமிழ்ச் சொற்களில், "பேதை' என்றாலே "பெண்' என்று பொருள்படும். "பேதை' என்ற சொல்லுக்குப் பழங்காலத்தில் "அறியாமை' என்பது பொருள். அக்காலத்தில் பேதை என்ற சொல்லாலும் பெண்ணைக் குறிப்பிடுதல் உண்டு. ஆனால், உண்மையை ஆராய்ந்தால், ஆண்களுக்கும் திட்பமற்ற நிலை, பேதைமை, அறியாமை உண்டு. இந்தக் குறைகளை எந்தப் பாலார்க்கும் தனிச் சொத்தாகக் கருதலாகாது.
 ஷேக்ஸ்பியரின் அந்தத் தொடர் பெண்ணுக்குத் திட்பம் இல்லை என்பதைத் தெரிவிக்கிறது. அதற்கு மாறாகத் திருவள்ளுவர் "திண்மை' என்னும் பண்பைப் பெண்ணுக்குச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.
 பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
 திண்மைஉண் டாகப் பெறின்.
 திண்மை உண்டாவது அரிதுதான். உண்டாகிவிட்டால் பெண்ணைவிடச் சிறப்பு வேறு இல்லை என்பது அவர் கருத்து. இதனால் பெண் திண்மை உடையவளாக விளங்க முடியும் என்னும் உண்மை அறியலாம். திருவள்ளுவரும் பெண்களைக் குறையுடையவர்களாகவே கருதியுள்ளார் என்று சிலர் வேறு குறளைக் காட்டுவர்:
 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
 திருநீக்கப் பட்டார் தொடர்பு.
 என்னும் குறளில், பெண்களை இருமனப் பெண்டிர் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளதாகக் காட்டுவர். அது பொருந்தாது. ஆண்களிலும் பலர்க்கு இருமனம் உண்டு. அதனால் பொதுவாக ஆண்கள் எல்லோரையும் "இருமன ஆடவர்' என்று கூற முடியுமா? அங்கே அதிகார வைப்பு முறையை உணர்ந்தால், திருவள்ளுவருடைய கருத்து விளங்கும். நாட்டின் நல்ல ஆட்சிக்கு ஆகாதவை இன்ன இன்ன என்று கூற வந்த இடம் அது. பொருட்பாலில் குடியியலில் ஒழிக்கத்தக்கவை இன்னின்னவை என்று விளக்கும்போது, கள், சூது ஆகியவை வேண்டா என விளக்குகின்றார்.
 கள்ளும் சூதும் போல் மக்களின் மனத்தையும் வாழ்வையும் பாழாக்குவது வேசியரின் தொடர்பு. அதனால் கள்ளுண்ணாமை, சூது என்னும் அதிகாரங்களைச் சேர்த்தாற்போல் "வரைவின் மகளிர்'
 என்ற அதிகாரத்தையும் அமைத்துள்ளார். மேலே காட்டிய குறளில் இந்த மூன்றையும் தொகுத்துக் கூறியுள்ளார். வரைவின் மகளிர் என்றோ, பொது மகளிர் என்றோ சொற்களை அமைக்கக் குறள் இடந்தராத காரணத்தால், அதே பொருள் தருமாறு "இருமனப் பெண்டிர்' என்ற தொடரை
 வைத்துள்ளார்.
 பொருட் பெண்டிர், பொய்ம்மை முயக்கம் முதலிய தொடர்களில் அந்த இருமனத்தின் இயல்பை, ஒருபுறம் பொருளின்மேல் ஆசை வைத்து, மற்றொரு புறம் நாடி வந்தவர் மேல் ஆசை உள்ளதுபோல் நடிக்கும் இருவேறுபட்ட மனப்பான்மையை - திருவள்ளுவர் விளக்கியுள்ளார். ஆதலால், இருமனப் பெண்டிர் என்று குறித்த தொடராலேயே, அண்மையில் விளக்கிய வரைவின் மகளிரையே அது சுட்டும் என்று அவர் நம்பினார். அவருடைய நம்பிக்கைக்கு மாறாகப் பிற்காலத்தில், பெண்களின் நிலை தாழ்ந்தபோது, பெண்களே இருமனம் உடையவர்கள் என்ற கருத்துப் புகுந்தது. அது தவறு என்பதற்கு வேறு சான்று வேண்டா. குறளின் பொருளே போதும்.
 கள், சூது, பெண் மூன்றும் இருந்தால் திருமகள் சேர மாட்டாள் (செல்வம் சேராது) என்று பொருள் கொள்ள முடியுமா? குடும்பத் தலைவியாகிய பெண் இல்லாத வாழ்வு செல்வ வாழ்வா? கள்ளும் சூதும் போல் பெண்ணும் அவ்வளவு தீமையானவளா? "திரு' என்று குறள் குறிப்பிடுவது திருமகளாகிய ஒரு பெண்ணைத்தானே? "வாழ்க்கைத் துணை நலம்' என்று ஓர் அதிகாரத்தில் பெண்ணைச் சிறப்பித்த திருவள்ளுவர், கள்ளையும் சூதையும் விடுவதுபோல் பெண்ணையும் விடு என்று கூறுவாரா? இவ்வாறு எண்ணிப் பொருளுணர்ந்தால், திருவள்ளுவரின் கருத்து விளங்கும். இருமனம் பெண்களுக்கு இயற்கை என்று அவர் கூறவில்லை என்பது தெளிவாகும். ÷ஆகவே, பெண் அடையத்தக்க சிறப்பு நிலைகளில் ஒன்று திண்மை என்பதே திருவள்ளுவரின் கருத்து ஆகும். ÷
 அதை ஒரு பெண் அடைந்து சிறப்புடன் விளங்கியதாகக் காட்டுவதே இளங்கோவடிகளின் நோக்கம் ஆகும். ÷இளங்கோவடிகளின் காவியத்தில் ஆணாகிய கோவலனே திட்பம் அற்றவனாகக் காணப்படுகின்றான். கண்ணகி திட்பத்தின் திருவுருவாகக் காணப்படுகின்றாள். அதைக் கண்ணகியே சொல்லாமல் சொல்கின்றாள்; தன் கணவனிடத்திலேயே சொல்கின்றாள். "கணவனே! நீ திட்பம் அற்றவன்'' என்று நேரே சொற்களால் கூறவில்லை; அது நாகரிகமும் அன்று; நல்ல பண்பும் அன்று. அன்புடையவர் ஒருவரை ஒருவர் அவ்வாறு பழித்துக் கூறுவதில்லை. அன்புடையவர் கடிந்து கூறுவது உண்டு; பழித்துக் கூறுவதில்லை. பழிப்புரையில் அன்பு இல்லை. கடிந்துரையில் அன்பு உண்டு; நட்பு உண்டு; காதல் உண்டு; அருளும் உண்டு.
 கண்ணகி தன் கணவனை அன்போடு கடிந்துரைக்கும் இடம் ஒன்று அமைகின்றது. அந்த இடத்தில் தக்க சொற்களால் அன்பின் மிகுதியால் கடிந்துரைக்கின்றாள். மதுரையில் ஆய்ச்சியின் வீட்டில் தங்கியிருந்த அந்த ஒரு நாளில், பல ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் நடத்தும் இல்லறத்தைக் காண்கின்றோம். (அதுவும் சிறிது நேரத்தில் மறைந்து போகிறது) கணவனுக்காகச் சமைத்தல், அவனுடைய உள்ளம் குளிருமாறு உணவு இடுதல், உண்ட கணவன் அன்புடன் மனைவியை அழைத்துப் பேசுதல், அந்த பேச்சினிடையே அவன், தனக்காக அவள்பட்ட துன்பத்தை எடுத்துரைத்து மனம் நோதல் எல்லாம் காண்கின்றோம்.
 "கண்ணகி! நான்தான் அவசரப்பட்டு அழைத்தேன். நீ என்னுடன் வராமல் வீட்டிலேயே நின்றிருக்கக் கூடாதா? புறப்படு என்று சொன்னதும் என்னுடன் புறப்பட்டு வந்துவிட்டாயே'' என்று சொல்லி அவள்பட்ட துன்பத்திற்காகத் தன்னை நொந்து கொள்கின்றான்.
 அப்போதுதான் கண்ணகி கடிந்துரை கூறலானாள். கடிந்துரைக்கும் சொற்கள் அவள் பேச்சில் இல்லை. ஏன்? கனி இருப்பக் காய் கவராத பெருந்தகை அவள். இனிய சொற்கள் மட்டும் சில சொல்லி, அவனே தவறு உணருமாறு செய்தாள்.
 மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
 ஏற்றெழுந் தனன்யான்
 என்கிறாள். "நீ இப்படிப்பட்டவன்' என்று அவனுடைய பண்பைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. "யான் இப்படிப்பட்டவள் அதனால் வந்தேன்' என்று தன் பண்பையே கூறினாள். அது அவனுடைய பண்புக்கு நேர்மாறானது. ஆகையால், அவனே உணர்ந்துகொள்ளட்டும் என்று குறிப்பாகப் புலப்படுத்தினாள்.
 "அன்று மட்டும் அல்ல. இன்று மட்டும் அல்ல, என்றும் ஒரே மனப்போக்கு உள்ளவள் நான். உங்களுக்குத் தெரியும். உங்கள் வாழ்வே என் வாழ்வு. உங்கள் விருப்பமே என் விருப்பம். என்றும் இவ்வாறு மாற்றாத உள்ளத்தோடு, ஒரே உறுதியுடன் வாழ்ந்து வருபவள் யான். ஆதலால் புறப்படு என்றதும், அதுவே என் கடமை எனப் புறப்பட்டேன்'' என்று விடை கூறினாள்.
 இத்தகைய "மாற்றா உள்ள வாழ்க்கை' இல்லாத ஒன்றுதான் கோவலனுடைய ஒரே ஒரு குறை. சில ஆண்டுகள் கண்ணகியிடம் அன்பு, பிறகு சில ஆண்டுகள் மாதவியிடம் அன்பு, ஒரு நாள் மாலையில் கடற்கரையில் மாதவியிடம் வெறுப்பு, அன்று இரவே கண்ணகியிடம் பேரன்பு, பிறகு சில நாளில் மாதவியிடம் குற்றம் இல்லை என்ற மன அமைதி. இவ்வாறு அவனுடைய மனம் அடிக்கடி மாறி வந்ததை நன்கு அறிந்தவள் கண்ணகி. அத்தனையும் அவன் உணருமாறு செய்தாள்.
 ஒன்று, இரண்டு, மூன்று என அவனுடைய மனமாறுதல்களை அடுக்கிச் சொல்லவில்லை. அவனிடம் இல்லாத ஒரு நல்ல பண்பு - திண்மை - தன்னிடம் இருப்பதாகக் கூறினாள். இவ்வாறு தன் பண்பை எடுத்துரைத்தத் தன் கணவனைக் கடிந்துரைத்துத் திருத்தியதில் மிகச் சிறந்த நாகரிகம் விளங்குகிறது. இவ்வாறு திருத்திய பெண்ணறிவை - திண்மை வாய்ந்த பெண்ணறிவை - என்னவென்று புகழ்வது?
 இதைப் புகழ எழுந்த ஒரு தமிழ் நூல்
 சிலப்பதிகாரம்.
 ("மு.வ. கட்டுரைக் களஞ்சியம்' நூலிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com