செண்பகம்: வண்டுணா மலரன்று

வண்டுகள் சென்று படிவதாலும் பாடுவதாலும் பூக்கள் மலர்கின்றன என்னும் செய்தி தமிழ் இலக்கியங்களில் நயம்படவுரைக்கப்பட்டிருப்பதை நாமறிவோம்.
செண்பகம்: வண்டுணா மலரன்று
Updated on
2 min read

வண்டுகள் சென்று படிவதாலும் பாடுவதாலும் பூக்கள் மலர்கின்றன என்னும் செய்தி தமிழ் இலக்கியங்களில் நயம்படவுரைக்கப்பட்டிருப்பதை நாமறிவோம்.  

அகநானூறு முதற்பாடல், "வண்டுபடத் ததைந்த கண்ணி' என்று தான் தொடங்குகின்றது. வண்டுகள் மொய்த்திட மலர்ந்த பூக்களாலாகிய கண்ணி என்பதுதான் இதன் பொருள்,

பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்கும் தண்டுறை ஊரன் 
(370:1-2)

என்பது குறுந்தொகை.

கமழ்பூங் காந்தள்,
வரியணி சிறகின் வண்டுண மலரும்    (399:2-3)
என்பது நற்றிணை.
வண்டுபடக் கமழுந் தேம்பாய் கண்ணி (466)
என்பது மலைபடுகடாம்.
வண்டொடு மிஞிறு ஆர்ப்பச் சுனைமலர (8:23)
என்பது பரிபாடல்.
ஆம்பலுங் குவளையுந் தாம்புணர்ந்து மயங்கி
வண்டுண மலர்ந்த குண்டுநீர் இலஞ்சி (8:7-8)
என்பது மணிமேகலை.

இப்படி வண்டுகளுக்கும் மலர்களுக்குமுள்ள உறவு பேசப்பட்டிருக்க, "சண்பகப்பூவில் வண்டு படியாது' என்பதனையும் தமிழ்நூல்களில் பார்க்கிறோம். அதனை, "வண்டுணா மலர்' என்றே குறிக்கக் காண்கிறோம்.

இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் - மனையறம் படுத்த காதையில் ஒரு சிறு வருணனைப் பகுதி. "எழுநிலை மாடத்தின் இடைநிலத்தில் - பள்ளிக் கட்டிலில் புது மணமக்களாகிய கோவலனும் கண்ணகியும் தீராக்காதலராய்ச் சேர்ந்திருக்கின்றனர். அப்போது பலபூக்களிற் படிந்து அவற்றின் மணத்தையுண்டு சுழன்று செவ்வி பார்த்துச் சாளரத்தின் குறுங்கண் வழியே நுழைந்த வண்டுகளோடு தென்றலும் சேர்ந்து கொண்டது' என்கிறார் இளங்கோவடிகள். இங்குக், "கழுநீர் ஆம்பல் முழுநெறிக் குவளை' என்று தொடங்கி, 

மேதகு தாழை விரியல்வெண் தோட்டுக்
கோதை மாதவி சண்பகப் பொதும்பர்த்
தாதுதேர்ந் துண்டு  (2:14,17-19)
வண்டுகள் வந்ததாகப் பாடலடிகள் அமைகின்றன. 

"இம் மலர்கள் யாவும் சண்பகப் பொதும்பரில் (சோலை) சண்பகத்தோடு மலர்தலின், தேர்ந்துண்டு என்றார்' என இதற்கு உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கம் எழுதினார். 

இதனை மேலும் தெளிவுறுத்தக் கருதிய நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், "சண்பகம் வண்டுணா மலர் மரமாதலின், மாதவி முதலான மற்ற மலர்களின் தாதினை ஆராய்ந்து (தேர்ந்து) உண்டு வண்டு வந்தது' என்று விளக்கம் தந்தார். 
தமக்கு ஆகாத உணவை அகற்றுவாரைப் போல, வண்டுகள் சண்பகமரத்தின் கோட்டுப் பூக்களில் படியாமல் அவற்றை விலக்கி ஏனைய மலர்களின் தாதினை உண்டன என்னும் கருத்தினைப் பெறவைத்தார். "தேர்ந்து' என்னும் சொல்லுக்கு முன்னோர் வழியில் சொன்ன நுட்பமான விளக்கம் இது.

பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையிலும் இந்த நுட்பத்தைக் காண்கிறோம். "வண்டறை இய சண்பகநிரை' (பரி.11:18) என்னுமிடத்து, "சண்பகப் பூவில் படியும் வண்டுகள் மடியும் என்பதால் அதனருகில் செல்லாது மணத்தை நுகர்ந்தே வண்டுகள் ஒலிக்கின்றன' என்னும் பொருளில் அவரது உரை அமைந்துள்ளது. 

ஆனால் பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலையில் சண்பகமலரின் மணத்தை நுகரினும் வண்டு அழியும் என்னும் கருத்து இடம் பெற்றிருக் கிறது.
மின்னுபு விளக்கத்து 
               விட்டில் போலவும்
ஆசையாம் பரிசத் 
              தியானை போலவும்
ஓசையின் விளிந்த 
              புள்ளுப் போலவும்
வீசிய மணத்தில் 
              வண்டு போலவும்
உறுவது உணராது 
             செறுவுழிச் சேர்ந்தனை
(11ஆம் திருமுறை 837:29)
என்கிறார் (செறுவுழி - அழிவிடத்தில்)
கண்டுகேட் டுண்டுயிர்த் 
                        துற்றறியும் ஐம்புலனும் 
ஒண்டொடி கண்ணே உள 
(1101)

என்னும் குறளுக்கு உரை வரைந்த பரிதியாரும், "செண்பக மணம் உண்டு அழிந்த வண்டும்' என்றே எழுதக் காண்கிறோம்.

திருக்குறள் விளக்கக் கட்டுரை ஒன்றில் அறிஞர் தெ. ஞானசுந்தரமும், "செண்பகப் பூ மணக்கிறது... மணம் வண்டுக்கு மரணவோலை வாசிக்கிறது. உயிர்த்தறியும் இன்பத்தை நாடி அழிகிறது வண்டு' (கற்பகமலர்கள், முதல் தொகுதி, ப.53) என்று இதே கருத்தினை வழிமொழிகிறார்.

இத்தனைக்கும் மாறாக எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப்பாசுரம் ஒன்றில்,

துன்னுமா தவியும் சுரபுன்னைப் பொழிலும்
        சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்னவென்று அளிகள் முரன்றிசை பாடும்
        திருக்கண்ணங் குடியுள் நின்றானே (9-1-9)

என்று பாடுகிறார்.

நெருங்கிய மாதவி(குருக்கத்தி)யாலும் சுரபுன்னையின் சோலைகளாலும் சூழப்பட்டதாய் அடர்ந்து மலரும் செண்பகப் பூவிலே வண்டுகள் "தென்ன' என்று இசைபாடும் என்பது இதன்பொருள். இது நிகழ்ந்த இடம் திருக்கண்ணங்குடி எனும் திவ்யதேசம். பெரியவாச்சான் பிள்ளையின் உரை இவ்வாறே அமைந்துள்ளது.  

"செண்பக மலர்வாய்' என்றதனால் அம்மலரிடத்தே படிந்து மணம் நுகர்ந்து வண்டுகள் இசை பாடின என்பது உறுதிப்படுகின்றது. ஆனால் சண்பகப் பூவில் படியும் வண்டுகள் இறந்து விடும் என்பதற்கு மாறாக, "முரன்று இசை பாடும்' என்று ஆழ்வார் பாடியதற்கு ஓர் அமைதி காட்ட விரும்புகிறார் அப்பு என்னும் அரும்பதவுரைகாரர். 

"திருக்கண்ணங்குடி என்னும் திவ்யதேசத்தில் வாழ்ந்த வண்டுகளாகையாலே அவற்றுக்கு இறப்பு ஏற்படாமல் நன்மையாகவே முடிந்தது' என்று எழுதுகிறார். சமய நம்பிக்கையின் அடிப்படையில் காட்டிய அமைதி இது.

இப்பொழுது நம்முன் எழுகின்ற கேள்வி, "சண்பகம் வண்டுணா மலர்' என்பது உண்மையா? அல்லது வழி வழி நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த "கவிமத'மா (சமய மரபு) என்பதுதான்.

தாவரவியில் அறிஞர் கு.வி. கிருஷ்ணமூர்த்தி, "சண்பகப் பூவில் வண்டு படிவது உண்மை; உயிரற்றது போல் நெடுநேரம் மயங்கிக் கிடக்கும்; பின்னர் எழுந்து செல்லும். இதனை முழுவதும் அறியாத நிலையில் "சண்பகத்தில் படிந்த வண்டுகள் மடியும்' என்னும் கருத்துப் பழந்தமிழரிடையே தோன்றியிருக்கலாம்' என்கிறார். 

எனவே சண்பகம் வண்டுணாமலர் என்பது ஒரு "கவிமத'மாகவே தமிழில் இடம் பெற்றிருந்தது என்று தெளியலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com