மூழ்கினார்... மறந்தார்!

சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம். அது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால்  "மூவாயிரம் தமிழ்' எனக் காரணப்பெயரால் அழைக்கப்படுகிறது.
மூழ்கினார்... மறந்தார்!

சைவத் திருமுறைகள் பன்னிரண்டினுள் பத்தாம் திருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம். அது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால்  "மூவாயிரம் தமிழ்' எனக் காரணப்பெயரால் அழைக்கப்படுகிறது. பற்பல துறைச் செய்திகள் செறிந்த சைவ சமய சாத்திர நூல் அது.  

புரிந்துகொள்ள எளியதள்ளாத பல கருத்துகள் அதனுள் இருப்பினும், எல்லோரும் அறிந்த, கண்ட, பேசிய, விவரித்த எதார்த்த நிகழ்வுகளும் அந்நூலில் உண்டு.

உடல், செல்வம், இளமை, உயிரெனும் இவை நிலையற்றவை, அழியும் என்பது அறிவுறுத்த பல பாடல்களைப் பாடியுள்ளார். அதனுள் யாக்கை (உடம்பு) நிலையாமை பற்றிப் பாடியுள்ள 25 பாடல்களுள் ஒரு பாடல் மிகவும் எளிமையாகப் புரிந்துகொள்ளத்தக்கது. உலகியல் நிகழ்வைப் படம்பிடித்து காட்டுவது. எதார்த்தத்தைச் சாறு பிழிந்து தருவது போல விளங்குவது.

ஓர் ஊரில் ஒரு வீட்டில் ஒருவர் இறந்துவிட்டார். உறவினர்களுக்குச் செய்தி சொல்லப்பட்டது. ஊரிலுள்ள பலரும் வந்தனர். 

பெண்கள் குரல் கொடுத்து தோளொடு தோள் அரவணைத்து ஒப்பாரிப் பாடல் பாடினர். 

இறக்கும் வரை என்ற ஏதோ ஒரு பெயரால் சொல்லப்பட்டவர், இப்போது "பிணம்' என்று சொல்லப்பட்டார்.

உரிய சடங்குகள் செய்த பிறகு தூக்கிச் சென்று முள்ளடர்ந்த சுடுகாட்டில் எரித்தனர். பிறகு அருகில் இருந்த நீர் நிலையில் குளித்தனர். ஒருசிலரைத் தவிர பிறர் அவரவர் சொந்தக் கவலைகளில் ஆழ்ந்து, இந்த நிகழ்வையே மறந்துவிட்டனர்.  நீரில் மூழ்கினார் (இறந்தவரைப் பற்றிய) நினைவை மறந்தார் இதுதான் உலகம். 

இக்கருத்தை விவரிக்கும் பாடல் இதுதான்:
ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கி பிணம் என்று பெயரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே...!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com