இந்த வாரம் கலாரசிகன் - (03-4-22)

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி,  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "மகாகவி பாரதியாரின் உரைநடை ஆக்கங்கள்' குறித்து இரண்டு நாள் பன்னாட்டு ஆய்வரங்கு நடந்தது.
இந்த வாரம் கலாரசிகன் - (03-4-22)

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி,  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "மகாகவி பாரதியாரின் உரைநடை ஆக்கங்கள்' குறித்து இரண்டு நாள் பன்னாட்டு ஆய்வரங்கு நடந்தது. அந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பாரதியாரின் திருவுருவச் சிலையை அயலகத் தமிழ்க் கல்வித் துறையில் திறந்துவைக்க தெலங்கானா மாநில மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அழைக்கப்பட்டிருந்தார்.  ஓர் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று யாராவது எதிர்பார்த்திருக்க முடியுமா?  மகாகவி பாரதியார் சிலை  திறக்கப்படவில்லை. துணியால் மூடி அந்தச் சிலையை வைத்திருக்கிறார்கள். மேதகு ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், பாரதிக்கு ஏற்பட்ட அவமானத்தை சகித்துக்கொண்டு, ஆய்வரங்கத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். 

சிலை வைப்பதற்கு துணைவேந்தர் சிண்டிகேட்டில் முன் அனுமதி பெறவில்லை என்பது, சிலை திறப்பு தடைபட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு துறையின் வளாகத்தில் சிலை நிறுவக்கூட அதிகாரம் இல்லாத பதவியா துணை வேந்தர் பதவி? சிலை நிறுவிய பிறகு சிண்டிகேட்டில் அனுமதி பெறலாம் என்கிற விதிகூடவா இல்லை? நமக்குத் தெரியவில்லை.

பாரதியாரின் சிலை திறப்பு விழா தடைபட்டதற்குப் பின்னால் அரசியல் இருக்குமாயின் அது மிகவும் வேதனைக்குரியது. பாரதிக்கு ஜாதிச்சாயம் பூச முற்படுவதோ, தேசிய, திராவிட அரசியலை இதில் கலப்பதோ துரதிருஷ்டவசமானது.

மதுரை ஆ.ரத்தினம் என்பவர் பாவேந்தர் பாரதிதாசனின் அணுக்கத் தொண்டர். திராவிடப் பற்றாளர். 

""பாரதியார் ஒரு "பார்ப்பனர்'. நீங்கள் பார்ப்பன எதிர்ப்பாளர். தாசன் என்பதற்கு அடிமை என்று பொருள். போயும் போயும் ஒரு பார்ப்பானுக்கா நீங்கள் அடிமையாய் இருப்பது?'' என்று பாரதிதாசனிடம் கேட்டிருக்கிறார்.

பாரதிதாசனுக்கு வந்ததே கோபம். ""அடே நிறுத்து! பாரதி பற்றி உனக்கென்ன தெரியும்? பாரதியார் எனது கவிதைக்குப் புதிய நெறியைத் தந்தவர். 

தன்  பெண்டு, தன் பிள்ளை என்று நினைக்காமல் உலகத்தை நேசித்தவர். பாரதியைப் படித்த பின் என்னைப் படித்திருந்தால் இக்கேள்வியை நீ கேட்டிருக்க மாட்டாய்!'' என்று சொல்லி, அவருக்கு பாரதியார் கவிதைகள் நூலைக் கையொப்பமிட்டுக் கொடுத்தார் பாவேந்தர்.

கிறிஸ்துவருக்கு எப்படி பைபிளோ, இஸ்லாமியருக்கு எப்படி திருக்குரானோ, மார்க்சிஸ்டுக்கு எப்படி "தாஸ் கேப்பிடலோ', அதுபோல தமிழர்களாகிய நம் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய புத்தகம் பாரதியாருடையது. தமிழ் பேசுகிற, தமிழில் சிந்திக்கிற அத்தனை பேருமே பாரதியின் வாரிசுகள்தான்!'' என்றவர் ஜெயகாந்தன்.

""பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல. அவன் சர்வ சமரசவாதி. பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை'' என்பார் கவியரசர் கண்ணதாசன். 

ஓராயிரம் அரசியல் மனமாச்சரியங்கள் இருக்கலாம். நிர்வாக ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்கெல்லாம் அப்பாற்பட்ட  தமிழுக்குத் தகும்  உயர்வளிக்கும் பாட்டுத் தலைவனின் சிலை கோணிப் பையில் மூடிவைக்கப்பட்டிருக்கிறது என்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

பாரதியாரின் நினைவு நூற்றாண்டையொட்டி பல அறிவிப்புகளை வெளியிட்டு, தமிழகத்தை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காட வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில், மகாகவிக்கு  இப்படியொரு அவமரியாதை நேர்ந்திருக்கக்கூடாது. இது அவருக்குத் தெரிந்து  நடந்திருக்கவும் வாய்ப்பில்லை. அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட்டதா என்றும் தெரியவில்லை. 

பாரதியார் சிலை,  அதே இடத்தில் பாரதியார் நினைவு நூற்றாண்டு நிறைவு விழாவாக, ஆயிரக்கணக்கான பாரதி அன்பர்கள் புடைசூழ கோலாகலமாக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட வேண்டும் என்பது எனது அவா, வேண்டுகோள். 

வரலாற்று நிகழ்வாக நினைவு நூற்றாண்டில் தனது சிலை முதல்வர் ஸ்டாலினால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  திறக்கப்பட வேண்டும் என்று முண்டாசுக் கவிஞன் நினைக்கிறானோ என்னவோ!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளரும், வேதிப்பொறியியல் துறைப் பேராசிரியருமான முனைவர் பழ. சபாரெத்தினம் எழுதியிருக்கும்  புத்தகம் "வழிகாட்டும் வள்ளுவம்'. 

திருக்குறள் குறித்தும், வள்ளுவம் குறித்தும் தினந்தோறும் ஏதாவது ஒரு புத்தகம் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. எங்காவது ஓர் இடத்தில் ஆய்வோ, கருத்தரங்கோ நடைபெற்று வருகிறது. அள்ள அள்ளக் குறையாத அறவெளியின் அட்சயபாத்திரம் திருக்குறள் என்பதற்கு வேறென்ன அத்தாட்சி வேண்டும்?

முனைவர் பழ.சபாரெத்தினத்தின் அணுகுமுறை சற்று வித்தியாசமானது. சங்க இலக்கியம், கம்ப காவியம், சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய அற நூல்களை அவர் சரளமாக மேற்கோள்களைக் காட்டி, நடத்தி இருக்கும் குறள்வழிப் பயணம் இது. நகரத்தார்கள் காசி யாத்திரை போவார்கள். இவர் நம்மையும் அழைத்துக் கொண்டு குறள்வழி யாத்திரை நடத்தி இருக்கிறார்.

மகாபாரதக் கதைகள், திருவிளையாடல் புராண சம்பவங்கள், கந்தபுராண மேற்கோள்கள் என்று ஏதோ உரை நிகழ்த்துவது போல சரளமான ஒரு நடை அவருக்குக் கைவந்திருக்கிறது. அத்துடன் விட்டாரா என்ன? பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், சிறுகதைகள், உரையாசிரியர்கள் என்று தனது குறள்வழிப் பயணத்தில் மேற்கோள் காட்டும் பாணி அலாதியானது.

குறளுக்குப் பொருத்தமான வாழ்க்கை நிகழ்வுகளை அவர் ஆங்காங்கே கையாள்வதுதான் எல்லாவற்றையும்விடச் சிறப்பு. தந்தி மீனி ஆச்சி கதை, சாயப்பட்டறை மேஸ்திரி சாமிக்கண்ணு கதை என்று கதைகள் மூலம் குறள் விளக்கங்கள் தருவது மட்டுமல்ல, நமது தினமணி கொண்டாட்டத்தில் கம்பம் ராஜா ரஹ்மான் எழுதிய சீனாவின் காங் அரசனின் கதையையும்கூட மேற்கோள் காட்டியிருக்கிறார். 

இது முனைவர் பழ.சபாரெத்தினத்தின் வள்ளுவ வழிகாட்டி!

கவிஞர் சகா என்கிற ச.கஜேந்திரனின் கவிதைத் தொகுப்பு "விளக்கின் கீழே நிழல்'. அதில் உள்ள இந்தக் கவிதைக்குப் பின்னால், பல உண்மைகள் நிறைந்து கிடக்கின்றன.

உழவர் சந்தை விலை நிர்ணயிக்கிறார் அரசு அதிகாரி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com