இந்த வாரம் கலாரசிகன் - (18-12-2023)

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் கூடியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்த வாரம் கலாரசிகன் - (18-12-2023)

மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் கூடியபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பழைய நண்பர்கள் பலரை அங்கே சந்திக்க முடிந்தது. கவிஞர்கள் பலர் மகாகவிக்கு அஞ்சலி செலுத்த அதிகாலையிலேயே அங்கே வந்துவிட்டனர். 

பாரதியார் வேடமணிந்து பள்ளிச் சிறுவர், சிறுமியர் சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து ஆசிரியர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர். எங்கள் நிருபர் சங்கரேஸ்வர மூர்த்தி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார். இரண்டு வாரத்துக்கு முன்பிருந்தே தூத்துக்குடியிலிருந்து நண்பர் மாறன் அடிக்கடி அழைத்து, பாரதியார் இல்லத்திலும், மணிமண்டபத்திலும் நான் அணிவிப்பதற்கான மாலைகளை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்த வண்ணம் இருந்தார். 

மூன்று வாரத்துக்கு முன்பிருந்தே பாரதியார் பிறந்தநாள் விழா குறித்தும், "தினமணி'யின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் நிகழ்வு குறித்தும் எழுதாதது தவறாகிவிட்டது. நான் வருவேனோ, மாட்டேனோ என்று தெரியாததால் முன்கூட்டியே பயணத்திட்டத்தை அமைத்துக் கொள்ளாததாகப் பலர் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் வருத்தப்பட்டனர். அடுத்த ஆண்டு இந்தத் தவறு நடக்காது.

மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு விட்டேன். இனி, எனது வருத்தத்தையும் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். பாரதியார் பிறந்த வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு இல்லத்தை, முன்பு மோகன் என்பவரும், இப்போது மகாதேவி என்பவரும் நிர்வகித்து வருகிறார்கள். இப்போது அரசின் சார்பில் ஒரு நூலகரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். நினைவகத்தைக் கூட்டிப் பெருக்கி, தூசு தட்டி சுத்தப்படுத்த ஒரு கடைநிலை ஊழியரை தற்காலிகப் பணியாளராகவாவது அரசு நியமிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

வள்ளுவருக்கும், கம்பருக்கும் அடுத்தபடியாக, தமிழகத்தில் மிக அதிகமான புத்தகங்கள் எழுதப்படுவது பாரதியார் குறித்துத்தான். எந்தப் புத்தகம் பிரசுரமானாலும், கன்னிமாரா நூலகம், கொல்கத்தா தேசிய நூலகம் இரண்டுக்கும் அதன் பிரதிகள் அனுப்பப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. பாரதியார் குறித்துப் புத்தகம் எழுதும் எழுத்தாளர்களோ, அதைப் பிரசுரிக்கும் பதிப்பாளர்களோ அதன் ஓரிரு பிரதிகளை எட்டயபுரத்திலும், திருவல்லிக்கேணியிலும் இருக்கும் பாரதியார் இல்லங்களில் அமைந்த நூலகங்களுக்கு அனுப்பிக் கொடுத்தால்தான் என்ன? அதை பாரதியாருக்குச் செய்யும் காணிக்கையாக ஏன் கருதக்கூடாது?

அப்படிப் புத்தகங்கள் அனுப்பப்பட்டால், அவற்றைப் பெற்றுக் கொள்ளவும், நூலகத்தில் காட்சிப் படுத்தவும் பாரதியார் நினைவில்லப் பொறுப்பாளர்களுக்கு அதிகாரம் தரப்பட்டிருக்கிறதா? இது குறித்து பாரதி அன்பர்கள், எழுத்தாளர்கள் மட்டுமல்ல, தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறையும், தமிழ் வளர்ச்சித் துறையும் ஆலோசித்து நல்ல முடிவெடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!


வழக்கம்போல இந்த ஆண்டும் பாரதியை உயிராய் நேசிக்கும் திருக்குற்றாலம் பொதிகைத் தமிழ்ச் சங்கம் தென்காசி தங்கப்பாண்டியனை எட்டயபுரத்தில் சந்தித்தேன். மகாகவி பாரதியின் சின்ன சங்கரன் கதையையும், தனது பாரதியார் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலையும் எட்டயபுரத்தில் பாரதிக்கு சமர்ப்பிக்க எடுத்து வந்திருந்தார்.

தங்கப்பாண்டியன் மட்டுமல்ல, அவரைப் போல இன்னும் பல கவிஞர்கள் தங்களது படைப்புகளை பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்னர் வைத்து வணங்கி எடுத்துச் செல்வதைப் பார்க்க முடிந்தது. பாரதியாரின் பிறந்தநாளன்றும், நினைவு நாளன்றும் எட்டயபுரத்திலும், திருவல்லிக்கேணியிலும், புதுச்சேரியிலும் பாரதியார் குறித்த படைப்புகளை வெளியிடவும், அவரவர் வரைந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்தவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

அண்டை மாநிலமான கேரளத்தில், அவர்களது மகாகவி வள்ளத்தோள் நினைவிடத்தை ரம்மியமாக அமைத்து, எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிடவும், கருத்தரங்குகள் நடத்தவும் வழிகோலப்பட்டிருக்கிறது. வாழும்போதுதான் அடிமை இந்தியாவில் வறுமையில் உழன்றார் பாரதியார். சுதந்திர இந்தியாவில் அவரை நாம் கெளரவமாக வைத்திருக்க வேண்டாமா?


-----------------------------------------------------------
 

சென்ற ஒரு வாரமாக நான் எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. நிறையப் பார்த்தேன். நான் பார்த்தவற்றில் எல்லாம் பாடம் இருந்தது. அந்தப் பாடங்களைப் படித்தேன், அவ்வளவுதான். நான் பார்த்ததில், மிக அதிகமாக ரசித்தது நெல்லையில் ஓடிக்கொண்டிருந்த தாமிரவருணியை. அதைப் பார்த்தபோது, பிரபஞ்சனின் காவிரி பற்றிய குறிப்பு நினைவுக்கு வந்தது. அதையே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

"கல்லூரி கற்றுக் கொடுக்காததைக் காவிரி எனக்குக் கற்றுக் கொடுத்தது. தோட்டத்துக் கதவைத் தொட்டுக் கொண்டு ஓடியது, வடவாறு. காவிரியின் நடையழகைக் கண்டாருக்கே தெரியும், காவிரியின் பிரவாகப் பேச்சைக் கேட்டவருக்கே தெரியும், காவிரியின் காற்றை சுவாசித்தவர்களுக்கே தெரியும், காவிரி ஓர் ஆறு மட்டுமல்ல என்று. காலங்காலமாக அது ஒரு மானுட தர்மத்தை நிறுவிக் கொண்டே இருக்கிறது.'

காவிரி குறித்த பிரபஞ்சனின் வார்த்தைகள் பொருநைக்கும் பொருந்தும்!

-----------------------------------------------------------


"தமிழ்' என்கிற தலைப்பில் நான் குறித்து வைத்திருக்கும் வரிகள் இவை. ஏதோ ஒரு கவிதைத் தொகுப்பில் படித்ததை எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன். யார் எழுதியது என்று குறித்து வைக்க மறந்துவிட்டேன். கவிஞர் மன்னிக்கவும் - 
சங்கம் வளர்த்த தமிழ் 
சிதைந்து போனது.. 
"ல'கரமும்  "ழ'கரமும் 
அல்லல்படுகின்றன..
அம்மாவென்ற சொல்லுக்கு 
அகராதியை நாடும் நிலை..
பாரதியின் கவிதைக்கே
உரை எழுதும் அவலம்..
தமிழனாய் இருக்க 
தவம் செய்ய வேண்டுமாம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com