சங்ககால ஆவின் பாலும் நெய்யும் 

"ஆ' என்ற ஓரெழுத்து ஒருமொழி "பசு' வைக்குறிக்கும். இக்காலத்தில் நாம் "பசு' என்றழைப்பதைமுற்காலத்தார் "ஆ' என்றழைத்தனர். பசுவின் பால் "ஆன் பால்' அல்லது "ஆவின் பால்' எனப்பட்டது.
சங்ககால ஆவின் பாலும் நெய்யும் 

"ஆ' என்ற ஓரெழுத்து ஒருமொழி "பசு' வைக்குறிக்கும். இக்காலத்தில் நாம் "பசு' என்றழைப்பதைமுற்காலத்தார் "ஆ' என்றழைத்தனர். பசுவின் பால் "ஆன் பால்' அல்லது "ஆவின் பால்' எனப்பட்டது. தமிழின் பழைமையைப் போற்ற வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசின் பால் மற்றும் பால்படுபொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு "ஆவின் ' என்று பெயரிடப்பட்டது. "பசு' என்பது வடமொழித்திரிபு என்பர் அறிஞர்.

முன்பு மகளிர் வைகறையில் மத்தின் உதவியால் தயிர்கடையும் வழக்கம் கொண்டிருந்தனர்.

இதனை நற்றினை,
விளம்பழம் கமழும் கமஞசூற் குழிசிப்
பாசந் தின்ற தேய்கான் மத்த
நெய்தெரி யியக்கம் வெளில்முதன்
முழங்கும்
வைகுபுலர் விடியல் (பா.12)
எனப்பாடுகின்றது.

தலைவன் "இனிது' எனக்கூறி மகிழுமாறு, முதிர்ந்த தயிரைக் கொண்டு தலைவி "மோர்க்குழம்பு' செய்து அளிக்கும் பாங்கினைக் குறுந்தொகை (பா.167) சிறக்கப்பாடுகிறது. எள்ளிலிருந்து நல்லெண்ணெய் எடுத்தும், தேங்காயிலிருந்து தேங்காய் நெய் எடுத்தும் பயன்படுத்தத் தொடங்கும் காலத்திற்கு முன்னரே ஆவின் பாலினைக் காய்ச்சிப் பின்பு பெறப்படும் வெண்ணிற நெய்யாகிய வெண்ணெய்யின் பயன்பாடு சங்ககாலத்தில் இருந்துள்ளது.

இதனைக் குறுந்தொகை
இடிக்கும் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமற்
றில்லை
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்
கரிதே (பா.58)
என்கிறது.

உணவு வேண்டி இரப்போர் செந்நெல்லரிசிச் சோறு, வெண்ணெய் ஆகிய இவற்றைப் பிச்சையாகப் பெற்று உண்பதுண்டு என்பதைக் குறுந்தொகையில் (பா.277) ஓரிற் பிச்சையார் என்ற புலவர் அழகாகப் பாடியுள்ளார். குடும்பப் பெண்கள் தம் வீடுகளில் மாலை நேரங்களில் நெய்பெய்து விளக்கேற்றினர் என்ற செய்தியும் அதே இலக்கியத்தில் (பா.398) பதிவாகியுள்ளது.

அகத்திணைப் பாடலொன்றில்,
புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெண்வேர்
வுரையிழி அருவியின் தோன்றும்
நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனைய மெடு
விடுகந்தூதே (குறுந்.106)
என்பதான கபிலரின் கூற்றால், தீ வளர்க்க நெய்யினைப் பயன்படுத்திய மக்கள் மாண்பு வெளிப்படுகிறது.

"ஆன் ' என்ற சொல்லில் உள்ள "ன' கர ஒற்று அகரத்தோடு புணர்ந்து நின்று "ஆன' என்றும் வரும் என்று எழுத்திலக்கணம் கூறவந்த தொல்காப்பியர், "ஆனொற் றகரமொடு நிலையிடன் உடைத்தே' (நூ.233)என்கிறார். இந்நூற்பாவிற்கு உரையெழுதும் உரையாசிரியர்கள், (கூந்தலுக்கு) ஆவின் நெய் தெளித்து நானநீவி என்னும் ஓர் இலக்கியத் தொடரினை எடுத்துக்காட்டாகத் தருவர்.

இதிலிருந்து கூந்தலுக்கு ஆவின் நெய்தடவும் வழக்கம் பழைமையானது எனக் கூறமுடிகிறது. ஆக, ஆவின் பாலும், ஆவின் நெய்யும் சங்ககால மக்களின இன்றியமையா உணவு வகைகளாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. காலத்தால் மாறாதது ஆவின் பால்படு பொருட்கள் என்பதைப் பதிவுசெய்துள்ள நமது பண்டைய இலக்கிய, இலக்கண வல்லார் என்றும் போற்றத்தக்கவர்களே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com