இந்த வாரம் கலாரசிகன் - (27-02-2022)

விமர்சனத்துக்கு வந்திருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில், இயக்குநர் வி.சி.குகநாதன் எழுதிய "என் முதல்பட நாயகனும் நாயகியும்' என்கிற புத்தகம் இருந்தது.
இந்த வாரம் கலாரசிகன் - (27-02-2022)


விமர்சனத்துக்கு வந்திருந்த புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில், இயக்குநர் வி.சி.குகநாதன் எழுதிய "என் முதல்பட நாயகனும் நாயகியும்' என்கிற புத்தகம் இருந்தது. "புதிய பூமி' திரைப்படத்தின் மூலம் 1968-இல் கதை வசனகர்த்தாவாக அறிமுகமானவர்  வி.சி.குகநாதன். தமிழகத்திலேயே மிக அதிகமான படங்களில் கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவராக சாதனை படைத்தவர் அவர் என்பது வெளியில் அதிகம் அறியப்படவில்லை.
அவரைப் பற்றிச் சொல்ல இன்னும் ஏராளமான செய்திகள் உண்டு. அவருடைய தந்தையார்  யாழ்ப்பாணம் நகராட்சித் தலைவராக இருந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் குகநாதன் மாணவராக இருந்தபோது, அண்ணாவுக்கு அறிமுகமானவர். அவரது ஆசியுடன் பேனா பிடிக்கத் தொடங்கியவர்.  அறுபது ஆண்டுகளுக்கும் அதிகமாகத் திரையுலகில் வெற்றிகரமாக இயங்குவது என்பதே மிகப்பெரிய சாதனை அல்லாமல்  வேறென்ன?

1980-களில் பத்திரிகையாளனாகத் தமிழில் தடம் பதிக்க வேண்டும் என்று சென்னை மாநகரத்துக்கு நான் வந்தபோது,  தங்க இடமில்லாமல் தவித்த வேளை. "எனது அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளுங்கள்' என்று ஆதரவுக்கரம் நீட்டியவர் குகநாதன். அவரும் அவருடைய சகோதரர் லிங்கமும் என்னையும் ஒரு சகோதரனாகத்தான்  இன்றுவரை கருதுகிறார்கள்.

சென்னையில், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலுக்கு அருகில் இருந்த அவரது அலுவலகத்தில் இருந்துதான் எனது இதழியல் பயணம் தொடங்கியது எனலாம். சினிமா குறித்து,  வசனம் எழுதுவது குறித்து, படப்பிடிப்பு குறித்து நான் ஏதாவது கொஞ்சம் தெரிந்து கொண்டிருக்கிறேன் என்றால்,  அது இயக்குநர் வி.சி. குகநாதனிடம் இருந்துதான்.

"என் முதல்பட நாயகனும் நாயகியும்' புத்தகத்தைப் பார்த்தபோது பழைய நினைவுகள் என்னை ஆட்கொண்டன. அந்தப் புத்தகத்தைப் படித்தபோது, அதில் சொல்லப்பட்டிருக்கும் பெரும்பாலான தகவல்கள், அவர் சொல்ல நான் கேட்டது, சினிமா பாணியில் சொல்வதாக இருந்தால், "ஃப்ளாஷ் பேக்' காட்சிகளாக அவை ஓடி மறைந்தன. எம்.ஜி.ஆர். குறித்தும், ஜெயலலிதா குறித்தும் அவர் பதிவு செய்திருக்கும் சுவாரசியமான தகவல்கள் இன்றைய தலைமுறையினரை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.

நாற்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. எனக்கு அவர் மீதிருக்கும் மதிப்பும் மரியாதையும் குன்றிமணி அளவும் குன்றிவிடவில்லை. அவருக்கு என்மீது இருக்கும் அன்பும் பாசமும் இம்மியும் அகலவில்லை. பார்க்கவில்லை, சந்திக்கவில்லை என்கிற குறை இருக்கத்தான் செய்கிறது. அவரது எழுத்தைப் படிக்கிறபோது,  அது அதிகரிக்கிறது.

----------------------------------------------------------

தமிழுக்கும், தமிழர்களுக்கும்  வெ.சாமிநாத சர்மா செய்திருக்கும் பங்களிப்பு அளப்பரியது. இப்போது போல விரல் அசைவில் உலகத்தைக் கொண்டு நிறுத்தும் கூகுள் இல்லாத கடந்த நூற்றாண்டில், பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்து கொட்டியவர்களில் முதன்மையானவர் வெ.சாமிநாத சர்மா எனலாம்.

"எழுதிக் குவித்தார்' என்று யாரைப் பற்றியாவது சொல்ல வேண்டும் என்றால், வெ.சாமிநாத சர்மாவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவரிடம் இருந்த சிறப்பு, அவர் மொழிபெயர்ப்பாளராக  இருக்கவில்லை என்பது.  ஆங்கிலத்தில் வெளிவந்த நூல்களைப் படித்து, 

கிரகித்து அதைத் தனது பாணியில் அவர் தமிழில் படைத்தவைதான் அதிகம். அந்த வரிசையில் அமைந்த புத்தகம்தான் "சர்வாதிகாரி ஹிட்லர்'. இதற்கு முன்னால்  அவர் எழுதிய "கமால் அத்தாதுர்க்' புத்தகத்தைப் படித்தபோது, படிக்க வேண்டும் என்று நான் எடுத்து வைத்திருந்த அவரது இன்னொரு புத்தகம் இது.

சர்வாதிகாரி,  கொடுங்கோலன், ஃபாசிஸ்ட் என்றெல்லாம் உலகத்தாரால் பழிக்கப்பட்டவர்கள் குறித்து அறிந்து கொள்வதில் மனிதர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். மிக அதிகமான மக்கள் விரும்பிப் படிக்கும் கடந்த நூற்றாண்டு ஆளுமைகள் யார் எவர் என்று கேட்டால், அதில் அடால்ஃப் ஹிட்லரும் மாசேதுங்கும்தான் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள். முதலிரண்டு இடங்கள் அவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக மாறிக்கொண்டிருக்கின்றனவே தவிர, மூன்றாவது ஒருவர் அந்த இடத்துக்குப் போட்டியாக இன்றுவரை வரவில்லை, தெரியுமா?

வெ.சாமிநாத சர்மாவின் "சர்வாதிகாரி ஹிட்லர்', ஆங்கிலப் புத்தகத்தின் மொழியாக்கம் அல்ல. ஜமான் எர்வின் ஈவன் என்கிற ஜெர்மானிய நண்பர், பிரெஞ்சு, ஜெர்மன் இரண்டிலும் புலமையுடைய மைசூர் மகாராஜா கல்லூரிப் பேராசிரியர் தியாகராஜன் ஆகிய இருவரின் உதவிகளைப் பெற்று, ஹிட்லர் பற்றிய பல்வேறு தகவல்களைத் திரட்டி இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் சாமிநாத சர்மா.


இது ஹிட்லர் பற்றிய புத்தகம் மட்டுமல்ல,  கடந்த நூற்றாண்டு ஜெர்மனி, ஐரோப்பா, உலக யுத்தங்கள் உள்ளிட்ட எல்லாமே இதில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. இன உணர்வைத் தூண்டுவது, துவேஷத்தை வளர்ப்பது, பொய்யான பரப்புரைகளைக் கட்டவிழ்த்து விடுவது, பேச்சாற்றலால் மக்களைக் கவர்வது - இதுதான் ஹிட்லர். அதுதான்  நாசிசம் உலகுக்கு வழங்கிய ஃபாசிசக் கொடை.

புத்தகத்தைப் படித்து முடித்ததும் நான்  எனக்குள் சிரித்துக் கொண்டேன். அன்றைக்கு ஒரே ஒரு ஹிட்லர்தான். இன்றைக்கு ஊருக்கு ஊர் ஹிட்லர்கள் உலகில் நிறைந்து விட்டார்கள். இவர்களுடன் ஒப்பிடும்போது,  அந்த ஹிட்லர் நல்லவராகத் தெரிகிறார்!


சித்தார்த்தன் பாரதி எழுதிய "முழு நிலவும் சில விண்மீன்களும்' என்கிற கவிதைத் தொகுப்பு புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது.  உக்ரைனில் ரஷியப் போர் விமானங்கள் குண்டுமழை பொழிவதை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டே இந்தப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். சட்டென்று கண்ணில் பட்டது இந்தக் கவிதை -
பறவைகளை
தொலைத்திருந்த வானத்தில்
போர் விமானங்கள்
பறந்து திரிகின்றன
மனிதர்களைத் தொலைக்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com