இந்த வாரம் கலாரசிகன் - (24-07-2022)

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திருக்கோவிலூரில் நடைபெறும் கபிலர் விழாவில் கலந்து கொள்ளச் சென்றது உற்சாகம் ஏற்படுத்தியது.
இந்த வாரம் கலாரசிகன் - (24-07-2022)

இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு திருக்கோவிலூரில் நடைபெறும் கபிலர் விழாவில் கலந்து கொள்ளச் சென்றது உற்சாகம் ஏற்படுத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகள் விடுபட்ட கபிலர் விருது வழங்கும் நிகழ்ச்சி நீதியரசர் அரங்க. மகாதேவன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 45 ஆண்டுகளாகத் "திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம்' நடத்தும் கபிலர் விழா, தொடர்ந்து நடைபெறுகிறது என்பதைவிட மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

தமிழகத்தில் மீண்டும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறத் தொடங்கி இருப்பது மிகப் பெரிய ஆறுதல். கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் பார்வையாளர்கள் நேரில் வராமல், காணொலி நிகழ்வாகப் பல கருத்தரங்குகளும், நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இனிமேல், அரங்கங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இல்லாமல் போகுமோ என்கிற அச்சம் எழுந்தது. இலக்கிய நிகழ்வுகள் முன்புபோல நடக்கத் தொடங்கி இருப்பது தமிழகம் செய்த பெரும் பேறு!

எழுத்தாளர்களுக்கு முதுமை வரலாம். எழுத்துக்கும், சிந்தனைக்கும் முதுமை வருவதில்லை. எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா, மகாபாரதத்தை ஆங்கிலக் கவிதையாக எழுதியது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன்.

இப்போது அவர் நாலடியார், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், ஒளவையாரின் ஞானக்குறள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரத்தைத் தமிழ் மொழியில் பெயர்த்தல் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. அதைவிட முக்கியம், நல்ல தமிழ் இலக்கியங்களையும், படைப்புகளையும் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்வது. தமிழின் இன்றைய தேவை, நிறைய ஜோதிர்லதா கிரிஜாக்கள் என்பது எனது கருத்து!

-------------------------------

கம்பர் குறித்த நூல் என்று சொன்னாலே நான் காந்தம் போல ஈர்க்கப்படுவேன். தமிழக அரசின் தலைமைச் செயலர் வெ. இறையன்பும், அவருடைய சகோதரி பேராசிரியர் வெ. இன்சுவையும் அந்நூலுக்கு அணிந்துரைகள் வழங்கியிருக்கிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும்?

தமிழ்நாடு    வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண்மைத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருபவர் செ. சரத். வேளாண் குடும்பத்தில் பிறந்தவர் என்பதாலோ என்னவோ, அவரை கம்பர் எழுதிய "ஏரெழுபது' கவர்ந்திருக்கிறது.

பன்னிரண்டாம் நூற்றாண்டில், கம்பரால் எழுதப்பட்ட "ஏரெழுபது' என்கிற நூல் பற்றிப் பரவலாகப் பேசப்படுவதில்லை. அவரது ராமகாதையின் வெளிச்சத்தில், ஏனைய படைப்புகள் முக்கியத்துவம் பெறாமல் போனதில் வியப்பில்லை. 

விவசாயிகள் குலப் பெருமை, அவர்களின் கொடைத்தன்மை, விவசாயம் செய்ய பயன்பட்ட கருவிகளான கலப்பை, கொழு, ஊற்றாணி, நுகத்தடி, பூட்டாங்கயிறு, மண்வெட்டி, எருக்கூடை பற்றியெல்லாம் கம்பரின் ஏரெழுபதில் குறிப்புகள் காணப்படுகின்றன.

""கம்பர் தனது "ஏரெழுபது' நூலின் எழுபது பாடல்களிலும் விவசாயிகளை "திருவேளாளர்' என்றே குறிப்பிடுகிறார்'' என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். கம்பரை வைத்துப் புது முயற்சியாக செ. சரத் படைத்திருக்கும் நூல் "ஏர்நாடி'. 

ஒவ்வொரு பாடலையும் தந்து அதற்கான தெளிவுரையும் தருகிறார். அத்துடன் நின்றுவிடாமல், இன்றைய சூழலில், நிலைமையில் அந்தப் பாடல்களைப் பொருத்தி அவர் விளக்கும் அழகே அழகு. கம்பர் நிகழ்காலத்துக்கும் பொருத்தமானவர் என்பதை உணர்த்தியிருக்கும் செ. சரத்துக்குப் பாராட்டுகள். அவரது கன்னி முயற்சியே இது. இனி அவர் வழங்க இருக்கும் எழுத்துக் கொடைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

-------------------------------

கம்பர் பற்றி எழுதியபோது, நண்பர் முஸ்தபா "படித்துப் பாருங்கள்' என்று என்னிடம் தந்த "மைவண்ணன் இராம காவியம்' புத்தகம் நினைவுக்கு வந்தது. இலங்கையைச் சேர்ந்த "காப்பியக்கோ' ஜின்னாஹ் ஷரிபுத்தீன் படைத்திருக்கும், நவீனத் தமிழ் விருத்தங்களாலான படைப்பு அது. 

12 காப்பியங்கள், 26 நூல்கள் படைத்திருப்பவர் "காப்பியக்கோ' என்று இலங்கையில் பரவலாக அறியப்படும் ஜின்னாஹ் ஷரிபுத்தீன். அகவை 85-ஐ தொட்டுவிட்ட இவர் தற்போது துபையில் வசித்து வருகிறார். இவருடைய தந்தையார் பெரும்புலவர். யாழ்ப்பாண நூலகத்தில் அவரது உருவப்படம் இருந்ததாகச் சொல்வார்கள். புலிக்குப் பிறந்ததால் புலமையில் அவரைப் போலவே புதுமைகள் செய்து வருகிறார்.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்' என்கிற கம்பநாடர் வரிகளை, "படைத்துலகைப் பாவித்துப் பின்னழித்தே என்றுங் கடைத்தேறச் செய்வோன் துணை' என்று கடவுள் வாழ்த்தை அமைத்ததிலிருந்தே, படைப்புக்குள் நான் ஈர்க்கப்பட்டேன். அவையடக்கத்தில் தொடங்கி, முடிவுரையுடன் 1,357 பாடல்கள். சாரைப் பாம்பு விரைவதைப் போல, சரசரவென்று இராமகாதையை நகர்த்திச் சென்றிருக்கும் இந்தப் படைப்பு, கம்பரையே கைதட்ட வைத்துவிடும்.

தனக்குத் தமிழோதித் தந்த மேதை துறவி விபுலானந்தருக்கு "மைவண்ணன் இராம காவியம்' சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துரை வழங்கி இருப்பவர் "கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ். ஈழம் தமிழுக்குத் தந்திருக்கும் இலக்கியக் கொடை இந்தப் புதிய முயற்சி!

-------------------------------

புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது டாக்டர் எஸ்.பிருந்தா இளங்கோவனின் "எனக்கெனப் பொழிகிறது தனி மழை' என்கிற கவிதைத் தொகுப்பு. 23 ஆண்டுகள் மத்திய அரசுப் பணியிலிருந்த பிறகு விருப்ப ஓய்வுபெற்று இப்போது சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் இந்த நெல்லைக்காரரின் முதல் கவிதைத் தொகுப்பு இது என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

ஏற்கெனவே இவரது ஒன்றிரண்டு கவிதைகளைக் கவிஞர் ரவி சுப்பிரமணியன் எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார். கவிதைத் தொகுப்பில் நான் தேர்ந்
தெடுத்த கவிதை இது -
பூக்களைக்
காணும் போதெல்லாம்
பதிலுக்குப்
புன்னகை செய்யாமல்
கடக்க முடியவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com