பரகாலனும் பராங்குசனும்

நம்மாழ்வாருக்கு  "பராங்குசன்' என்றும் திருமங்கையாழ்வாருக்கு "பரகாலன்' என்றும் வேறு பெயர்கள் உண்டு.
பரகாலனும் பராங்குசனும்


நம்மாழ்வாருக்கு  "பராங்குசன்' என்றும் திருமங்கையாழ்வாருக்கு "பரகாலன்' என்றும் வேறு பெயர்கள் உண்டு. பெண்பேச்சாக நாயகிபாவத்தில் பாடும்போது இவ்விருவரையும் முறையே பராங்குசநாயகிஎன்றும் பரகாலநாயகி என்றும் குறிப்பது வைணவ மரபு. 

திருமங்கையாழ்வார் பதிகத்தின் பலன் கூறும் பாடல்கள் சிலவற்றில் பரகாலன் என்பதைத் தமக்குரிய பெயர்களுள் ஒன்றாகப் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறார்:

"அங்கமலத் தடவயல்சூழ் ஆலிநாடன்
அருள்மாரிஅரட்டமுக்கிஅடையார் சீயம்
கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கைவேந்தன்
கொற்றவேல் பரகாலன்கலியன்' (1187)

"வாள்வீசும் பரகாலன்கலிகன்றி' (1237)
"வாமான் தேர்ப் பரகாலன்' (1587)
"வல்லிப் பொதும்பில் குயில் கூவும்
மங்கைவேந்தன் பரகாலன்'(1597)

என்பன அதற்கான சான்றுகளாம். ஆனால் நம்மாழ்வார், "பராங்குசன்' என்னும் பெயரை திருவாய்மொழி "பலசுருதி' பாட்டு ஒன்றிற்கூடக் குறிப்பிடவில்லை. காரணப்பெயராகக் கருதத்தகும் "சடகோபன்' என்பதையே அவர் அவதரித்த ஊரானகுருகூர் என்பதனொடு சார்த்திப் பேசுவதைப் பல பாடல்களில் பார்க்க முடிகிறது. தென்குருகூர் சடகோபன் (2696), பழனக் குருகூர்  சடகோபன்  (3336), செழுங்குருகூர்  சடகோபன் (3446), அந்தண் குருகூர் சடகோபன் (3501) எனவருவன அவற்றுள் சில.

ஆழ்வார், "பராங்குசன்' என்பதைத் தம் பெயராகக் குறிப்பிட்டுச் சொல்லாதிருக்கவும்  ஆழ்வார்களுக்குப் பிந்தைய ஆசாரியர்கள் காலத்தில் - பராங்குசன் என்னும் இப்பெயர், வழக்குக்கு வந்ததை அறிய முடிகிறது. இராமானுசரின் (கி.பி.1017-1137) சீடர்களுள் ஒருவரான கூரத்தாழ்வான் பாடிய "பஞ்சஸ்தவம்' எனும் நூலில் நம்மாழ்வாரைக் குறிக்கும் பராங்குசன் என்னும் பெயர் இடம்பெற்றுள்ளதாகக் கூறுகிறார் வைணவ அறிஞர் ம.அ.வேங்கடகிருஷ்ணன்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள வடமொழி தனியனிலும், "ஸ்ரீமத் - பராங்குஸ முநிம்' என்றொரு தொடர் காணப்படுகிறது. இதனைப் பாடியவர் கூரத்தாழ்வானின் புதல்வரான பராசர பட்டர். இராமானுசருக்குப் பிறகு ஆசாரிய பீடத்தை அலங்கரித்தவர். இவரின் காலம் கி.பி.1192- 1220. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறாயிரப்படி குருபரம்பரையிலும் மதுரகவியாழ்வார் வைபவத்தில், நம்மாழ்வாரைக் குறிக்கும் பராங்குசர் என்னும் பெயர் காணப்படுகிறது. பின்னர், அழகியமணவாளப் பெருமாள் நாயனார் (கி.பி.1266-1361) இயற்றிய "ஆசாரிய ஹிருதயம்' என்னும் நூலிலும் "பராங்குச பரகாலயதிவராதிகள்'(சூ36) என்ற குறிப்பு உள்ளது. இவர்களுக்கு காலத்தாற் பின்வந்தவரான மணவாள மாமுனிகளும் (1370-1446) முன்னோர்பகளின் இக்கூற்றைத் தழுவி, திருவாய்மொழி நூற்றந்தாதியில் ஓரிடத்தில், (54) "பராங்குசன்தன் சொற்றேனில் நெஞ்சே! துவள்' என்று பாடியிருக்கிறார்.

இவ்வாறு வைணவப் பெரியோர்களால் அபிமானிக்கப் பெற்ற, "பராங்குசன்' என்பதற்கு, "பரசமயங்களாகிய யானைகளை அடக்கும் அங்குசம் போன்றவர்' என்றும், "திருமாலாகிய யானையைச் சொல்வளத்தால் அடக்கித் தம்வயப்படுத்திக் கொண்ட நாவீறு உடையவர்' என்றும் பொருள் கூறுவதுண்டு. 

சமய நோக்கில் இப்படிப் பொருள் காண்பதற்கு இடம் தரும் பராங்குசன் என்னும் பெயர் பெருக வழங்கிய காலத்தில் நாயகி பாவத்தில் பாடும் நம்மாழ்வாரைப் பராங்குசநாயகி என்று சொல்லத் தொடங்கியிருப்பர். நாளடைவில் அதுவே பலரறி தொடராக நிலைபெற்றிருக்கக்கூடும்.

நம்மாழ்வாரின் முன்னோர்கள் ஏழு தலைமுறைகளாகப் பாண்டிய அரசர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாய் இருந்தார்கள் என்ற செய்தியும் உண்டு. "இவரே தம்மைக் குருகைக்கோன் என்று சொல்லிக் கொள்கிறார். குருகை மன்னன் என்று வைஷ்ணவ ஆசார்யர்களும்  அருளிச் செய்துள்ளனர். இதனால் அந்தக் காலத்துப் பாண்டிய அரசர்களுக்கும் அவர்களுக்குக் கீழ் சிற்றசர்களாயிருந்த ஆழ்வார் மரபினருக்குமுள்ள தொடர்பை ஒருவாறு ஊகித்துக் கொள்ளலாம்' என்கிறார். ஆ. அரங்கநாத முதலியார் (பகவத் விஷயம்,ப.20-21). ஆழ்வார் அவதரித்த சில நாளில் பெற்றோர்களாகிய காரியாரும் உடையநங்கையாரும் இவரை குருகூர் "பொலிந்து நின்ற பிரான்' திருமுன்பே கிடத்தி, "மாறன்' என்று பெயரிட்டு அழைத்ததாக ஆறாயிரப்படி குருபரம்பரை கூறுகிறது. 

ஆழ்வார், "ஒன்றுந்தேவும்' என்னும் பதிகத்தின் பலசுருதிப் பாட்டில் (4-10-11), "மாறன் சடகோபன்' என்றும், "பொலிக பொலிக' என்னும் பதிகத்தின் பலசுருதிப் பாட்டில், "குருகூர்க் காரிமாறன் சடகோபன்' என்றும் தம்மைக் குறித்துச் சொல்லிக் கொள்கிறார். இவ்விடங்களில் பன்னீராயிரப்படி உரைகாரரான வாதிகேசரி அழகியமணவாள சீயர் (கி.பி.1242-1350) முறையே, மாறன் என்னும் குடிப்பெயரையும் சடகோபன் என்னும் திருநாமத்தையும் உடைய ஆழ்வார் என்றும், காரி என்னும் தந்தையின் சிறப்பாலும் மாறன் என்னும் குடிப்பிறப்பாலும் புகழ்மிக்கவரான ஆழ்வார் என்றும் எழுதுகிறார். 

அவரின் இவ்வுரை விளக்கம்,"உலகியலுக்கு மாறானவர்' என்னும் பொருளைவிலக்கி, "மாறன்' என்பது அவரின் குடிக்குரிய பெயரே என்பதை நிறுவுகிறது. அங்ஙனமாயின் பாண்டியர்க்குரிய, "மாறன்' என்னும் குடிப்பெயரையே ஆழ்வார்க்கு இட்டதாகக் கருதவும் இடம் ஏற்படுகிறது. 

இழையணியானைப் பழையன் மாறன் என அகநானூற்றிலும் (346:19) "கடுமான் மாறன்' எனப் புறநானூற்றிலும் (198:27) பாண்டியர்கள் மாறன் எனப் பெயர்பெற்றிருத்தல் காண்க. ஆழ்வாருக்கு காலத்தால் முந்தியவனும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் (கி.பி.642-692) வாழ்ந்தவனுமான நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டியனுக்கு "பராங்குசன்' என்னும் பெயர் வழங்கியதையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம் (காண்க: வெ. வேதாசலம் - அ. கலாவதி, பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் ப.41). எனினும் ஆழ்வார் மரபினரைப் பாண்டியர் குடியோடு தொடர்புபடுத்தும் இத்தரவுச் சான்றுகள் மேலாய்வுக்கு உரியனவே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com