மந்திக்குப் பாலூட்டிய பசு... 

"இனம் இனத்தோடுதான் சேரும்' என்பார்கள். நல்லவர்கள் வாழும் நாட்டில் இனம் தாண்டி பாசத்தைப் பொழியும் உயிரினங்கள் இருப்பதை "ஐந்திணை எழுபது' எனும்
மந்திக்குப் பாலூட்டிய பசு... 

"இனம் இனத்தோடுதான் சேரும்' என்பார்கள். நல்லவர்கள் வாழும் நாட்டில் இனம் தாண்டி பாசத்தைப் பொழியும் உயிரினங்கள் இருப்பதை "ஐந்திணை எழுபது' எனும் இலக்கியத்தில் ஒரு காட்சியைப் பதிவு செய்துள்ளார் புலவர் மூவாதியார்.

குறிஞ்சி நிலம். மரக் கிளைகளில் தாவி விளையாடிய ஒரு குரங்கு, ஒரு பலா மரத்தில் தொங்கும் பலாப்பழத்தைப் பறித்து இனிப்பான சுளைகளை வயிறார உண்டுவிட்டு, நீர் பருக மரத்தைவிட்டுக் கீழே இறங்கி வருகிறது. அங்கு நின்று கொண்டிருந்த காட்டுப் பசுவின் மடியை வருடுகிறது... அந்தக் காட்டுப் பசுவும் அக்குரங்கை தன் கன்றாக பாவித்து அதற்குப் பால் தருகிறதாம்.

குறிஞ்சி நாட்டில் பிறந்த தலைவனை "குரங்குக்குப் பால் கொடுக்கும் பசுக்கள் நிறைந்த மலைநாட்டு என் தலைவன், குணத்தில் மிகச் சிறந்தவனாகத்தான் இருக்க இயலும். அதனால், இப்பிறவியில் மட்டுமல்ல எப்பிறவியிலும் குறிஞ்சித் தலைவனை நான் பிரியமாட்டேன்' என்கிறாளாம் தலைவி.

அவர்களுடைய காதல் தூய்மையானது. தூய்மை என்றாலே தெய்வீகம்தான். இத் தூய்மையைப் பெறவே மனிதகுலம் பயணிக்க வேண்டும். அந்தத் தூய்மையான தெய்வீகக் காதலால் இணைந்தவர்கள் சில காலம் பிரிந்து மீண்டும் சந்தித்தால் மெளனமாக அழுவார்கள். அதுதான் தெய்வீகம்.

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி; பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் காதல் சந்நிதி... அதுதான் தெய்வத்தின் சந்நிதி' என்று எழுதினார்.

மந்திக்குப் பாலூட்டிய காட்டுப் பசுவைப் பற்றி புலவர் மூவாதியார்,

மன்றப் பலவின் சுளைவிலை தீம்பழம்
உண்டு வந்து மந்தி முலைவருடக் கன்றமர்ந்து
ஆமா சுரக்கும் அணிமலை நாடனை
யாமாப்  பிரிவ திலம்  (ஐ.எழு.-4)

ஒரு ஜாதிக்குள்ளேயே பல பிரிவுகளை வைத்துக் கொண்டு சண்டை சச்சரவுகளை வளர்த்து, பாசத்தையும், அன்பையும் புறந்தள்ளும் ஆறறிவு படைத்த மானுடர், ஐந்தறிவு படைத்த விலங்குகளிடமிருந்து அன்பையும், பரிவையும், பாசத்தையும் கற்றுக்கொள்ள ஐந்திணை எழுபதில் இக்காட்சியை வைத்துள்ளார் புலவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com