பல்லிலே பட்டுத் தெறித்தல்...

"இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும்' என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று அடையும் தறுவாயில் தடைபட்டு முடிவில் கிடைக்காமலே போகலாம்.
பல்லிலே பட்டுத் தெறித்தல்...

"இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும்' என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று அடையும் தறுவாயில் தடைபட்டு முடிவில் கிடைக்காமலே போகலாம். இப்படி ஏமாற்றத்துக்குள்ளாவது வாழ்க்கையில் எல்லார்க்கும் ஏற்படக் கூடியதே. இந்த அனுபவத்தைத்தான், "கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை' என்று நம் முன்னோர்கள் ஒரு பழமொழியாகச் சொல்லி வைத்தார்கள். 
ஆனால் வாய்க்கு எட்டியது அனுபவிக்க இயலாமல் பல்லிலே பட்டுத் தெறித்துத் தரையிலே விழுந்து வீணாகிப் போனால், இழந்தவன் மனநிலை எப்படி இருக்கும்? "ஐயோ, பல்லிலே பட்டுத்தெறிப்பதே' என்று அவன் புலம்பமாட்டானா? முன்னம் சொன்ன பழமொழியைக் காட்டிலும் பின்னதில் கூடுதல் அழுத்தத்துடன் அந்த இழவுணர்ச்சி உணர்த்தப்பட்டிருப்பதை அறியலாம்.
"பாவியேன், பல்லிலே பட்டுத் தெறிப்பதே' என்று சொல்லித் தவிக்குமளவுக்கு நம்மாழ்வாருக்கு ஓர் இழப்பு ஏற்பட்டதாம்.
அப்படியென்ன இழப்பு ஏற்பட்டு விட்டது அவருக்கு?
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களில் - கலியுகம் பிறந்த 43-ஆம் நாள் அவதரித்தவர் நம்மாழ்வார் என்பதும், துவாபரயுகத்தில் பிறந்து அதன் முடிவு வரை (த்வாபராந்தம்) வாழ்ந்தவன் கண்ணபிரான் என்பதும் வைணவர்களின் நம்பிக்கை ( பக்தி அனுபவத்தில் கால ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லை; அவர்கள் சற்றே ஒதுங்கி நிற்கத்தான் வேண்டும்). 
எனவே, "சிலநாள்கள் முந்திப் பிறந்திருந்தால் கிருஷ்ணாவதாரத்தைத் தரிசித்திருக்கலாமே' என்று வருந்தினாராம் நம்மாழ்வார்.
இதனைப் "பிறந்தவாறும் வளர்ந்தவாறும்' என்னும் திருவாய்மொழியில் ஆழ்வார் வெளிப்படுத்தியிருக்கிறார். இது பற்றிப் பராசரபட்டர் என்னும் வைணவப் பெரியார் நஞ்சீயருக்குக் கூறிய விளக்கம் நம்பிள்ளையின் ஈட்டுரையில் (5-10 பிரவேசம்) பதிவாகியிருக்கிறது. அது வருமாறு:
துக்கம் நடந்து  நாள் திங்கள் ஆண்டு எனக்காலம் கழிந்து விட்டால் அதனைப் பொறுத்துக் கொள்ளலாம். காலமே அதற்கு மருந்தாகிக் துயரத்தை மறக்கடித்து விடும். 
ஆனால், ஏற்பட்ட இழப்பு சற்று முன்னர்த்தான் என்னும்படி மிகவும் நெருங்கிய அணிமைக்காலமாக இருந்தால், அவ்விழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாது அல்லவா? மற்ற அவதாரங்களைப் போலன்றிக் "கிருஷ்ணாவதாரம் இப்போதுதான் முடிந்தது' என்று பிறர் சொல்லக் கேட்டறிந்த ஆழ்வார், ஒரு செவ்வாய்க்கிழமை (சில நாள்கள்) முற்பட்டுப் பிறந்திருக்கக் கூடாதா? பாவியேன், பல்லிலே பட்டுத் தெறிப்பதே என்று வருந்தினாராம். 
"இனிமையான தின்பண்டத்தை ஆவலுடன் கையிலெடுத்து வாயருகே கொண்டு போய் உண்ணமுயலும் போது, அது பல்லிலே பட்டுத் தெறித்துத் தரையிலே விழுந்தது போல இவ்வளவு அருகிலே வந்தும் (கிருஷ்ணாவதாரத்துக்குத் தோள் தீண்டியான மிகநெருங்கிய கலியுகத் தொடக்கத்திலே பிறந்தும்) கிருஷ்ணதரிசனம் கிடைக்காமல் போய்விட்டதே என்கிற வருத்தம் தான் ஆழ்வாருக்கு. 
இழப்பால் ஏற்பட்ட வயிற்றெரிச்சல் ஒருபுறமிருக்க, ஆழ்வாருக்குக் கிருஷ்ணாவதாரத்திலிருந்த எல்லையற்ற ஈடுபாட்டையும் இது புலப்படுத்து
கின்றது.
பேச்சுத் தமிழில் உள்ள வழக்குச் சொற்களும் மரபுத்தொடர்களும் சொலவடைகளும் வைணவ உரையாசிரியர்களுக்கு வழங்கிய கொடை பெரிது. வயிறு வாய்த்தல், வயிறு பிடித்தல், வாயோலை செய்தல், கழுத்துக் கட்டி, கண்ணாஞ்சுழலை, ஒழுகல் ஓடம், ஓட்டை ஓடம், மேட்டுமடை, பள்ளமடை, ஒருமடை செய்தல், மடை மாற்றுதல், விளைநீரடைத்தல், ஒப்பூண் உண்ணுதல், ஒரு நீர்ச் சாவி, தலைச்சாவி வெட்டுதல், சோற்றுச் செருக்கு, சோலைப்பார்வை, நெடுங்கை நீட்டு, உடன்வந்தி, வந்தேறி, பத்தும் பத்தாகச் செய்து, பல்லி பற்றுகை, பச்சை கொள்ளுதல் - இப்படிப் பற்பல. இவையாவும் பொருளாழம் புலப்பட வைணவ உரைகளிற் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.
இங்கு நாம் காட்டிய, "பல்லிலே பட்டுத் தெறித்த'லும் மக்களின் வழக்கு மொழியிலிருந்து கடன் வாங்கப் பெற்றதாகவே தெரிகிறது. ஆதாரம், கண்மணி குணசேகரன் தொகுத்தளித்துள்ள நடுநாட்டுச் சொல்லகராதியில் (தமிழினி, 2017, சென்னை) "மரபுத்தொடர்' என்னும் பகுதியில், "பல்லிலே பட்டுத் தெறித்த மாதிரி' என்பதைப் "ப'கரவரிசையில் காட்டி அதற்கு அவர் தரும் விளக்கம் வருமாறு:
வாயில் போட்ட பொருள் தவறுதலாகப் பல்லில்பட்டுத் தெறித்துக் கீழே விழுந்து வீணானதைப்போன்று, திடுமென அநியாயமாக ஒரு பொருளை இழந்துவிடுவது. பெரிய பெலாப்பழம், நூறு ரூவாபெறும். அடிக்கடி போய்ப் பாக்காம பல்லிலே பட்டுத்தெறிச்ச மாதிரி எவனோ அடிச்சிட்டுப் பூட்டான்.
இவ்விளக்கத்தை நோக்க நெடுங்காலமாக இம்மரபுத்தொடர் மக்களின் வழக்கிலிருந்து வருவது தெரிகிறது. இதனைக் கூறிய பராசரபட்டர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஸ்ரீ இராமாநுசரின் (கி.பி. 1017-1137) காலத்தில் வாழ்ந்தவர்; இராமாநுசருக்குப் பிறகு ஆசாரியபீடத்தை அலங்கரித்தவர். 
மெத்தப்படித்தவர்களாலும் அனுபவப்பிழிவாக உள்ள பேச்சு மொழிகள் பொன்னே போல் போற்றிப் பொதிந்து கொள்ளப்பட்டன என்பதற்கு இது தக்கதொரு சான்றாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com