இந்த வாரம் கலாரசிகன் - 10-12-2023

சென்னை மழையில் படாத பாடுபட்ட அனுபவத்தை அசைபோட்டபடி எனது எட்டயபுரம் நோக்கிய பயணம்  தொடங்குகிறது.
இந்த வாரம் கலாரசிகன் - 10-12-2023

சென்னை மழையில் படாத பாடுபட்ட அனுபவத்தை அசைபோட்டபடி எனது எட்டயபுரம் நோக்கிய பயணம்  தொடங்குகிறது. இதேபோன்று, அல்ல அல்ல இதைவிடப் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்திய பெருமழை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பாரீஸ் மாநகரத்தைத் தாக்கியது. அப்போது அங்கே காணப்பட்ட சூழல், மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகள், மழையின் கோர தாண்டவத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் மகாகவி பாரதியார் பதிவு செய்திருக்கிறார்.

2015-இல் சென்னை மாநகரம் பெருமழையில் மிதந்தபோது, பாரதியார் "இந்தியா' இதழில் பாரீஸ் பெருவெள்ளம் குறித்து எழுதிய கட்டுரையை தினமணி நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம் (11.12.2015). அந்தக் கட்டுரை சீனி. விசுவநாதன் தொகுத்து அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் "கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' தொகுப்பில் இடம்பெற்று இருக்கிறது.

எந்தவிதமான தகவல் தொலைத்தொடர்பும் இல்லாத நூறு ஆண்டுகளுக்கு முந்தைய உலகில், பல்லாயிரம் கல் தொலைவில் உள்ள பாரீஸில் பெய்த பெருமழையைத் தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்திய அவரது இதழியல் ஆளுமை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அதனால்தான் "தினமணி' நாளிதழ் பாரதியார் பெயரில் விருது ஏற்படுத்த வேண்டும் என்று  நான் விழைந்தேன்.

இந்த ஆண்டு விருது பெற இருக்கும் அறிஞர் முனைவர் ய. மணிகண்டன், மகாகவியின் பல புதிய பரிமாணங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியவர். முனைவர் ய. மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் மேதகு சி.பி. இராதாகிருஷ்ணன் "தினமணி' நாளிதழின் மகாகவி பாரதியார் விருது வழங்கி கெளரவிப்பதில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த ஆண்டு மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவுக்கு முந்தைய நமது விழாக்களைவிட மேலும் ஒரு சிறப்பு கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விழா நடைபெறுகிறது என்பதுதான். மகாகவி பாரதியார் சில காலம் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிக்கூடம் அது. அவரது காலடித் தடம் பதிந்த, மூச்சுக்காற்று உலவிய பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது என்பது தனிச்சிறப்புதானே!

அது நான் படித்த பள்ளிக்கூடம். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எங்கள் ஆங்கில ஆசிரியராக இருந்த பரிதிமாற் கலைஞர் சூரிய நாராயண சாஸ்திரியாரின் பேரன் வி.ஜி. சீனிவாசனின் முனைப்பால் பாரதியார் சிலை நிறுவப்பட்டதை இப்போது நினைத்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. 

நாளை காலை 9 மணிக்கு எட்டயபுரத்தில் பாரதியாரின் இல்லத்தில்; அதன் பிறகு பாரதியார் மணிமண்டபத்தில்; மாலையில், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் என்று பாரதியாரின் பிறந்தநாளை பாரதி அன்பர்களோடு கொண்டாட இருக்கும்  மகிழ்ச்சியில் திளைக்கிறேன்.

-----------------------------------------------------

நாளை டிசம்பர் 11 பாரதியாரின் பிறந்த தினம் என்றால், இன்று டிசம்பர் 10 ராஜாஜியின் பிறந்த தினம். 1878-இல் பிறந்த ராஜாஜி, பாரதியாரை விட நான்கு ஆண்டுகள் மூத்தவர். இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பும் நட்பும் நிலவியது.

1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு ராஜாஜியும், பாரதியாரும் ஒன்றாகச் சென்றனர் என்பதிலிருந்தே அவர்களது நெருக்கத்தை புரிந்து கொள்ளலாம். பாரதியார் புதுவையில் இருந்தபோது ராஜாஜி அவரது வீட்டிற்கு போய் இருக்கிறார். அங்கு உணவு அருந்தி, பாரதியார் தனது பாடல்களைப் பாடுவதைக் கேட்டு ரசித்திருக்கிறார். காந்தியடிகளுக்கு பாரதியாரை அறிமுகம் செய்த பெருமைக்குரிய வரும் ராஜாஜிதான்.

அதெல்லாம் இருக்கட்டும், இப்போது ராஜாஜி பற்றி நான் குறிப்பிடுவதற்குக் காரணம் மா.ரா. அரசு தொகுத்து வெளியிட்டு இருக்கும் ராஜாஜியின் "விமோசனம் "இதழ்கள். பாரதியாரைப் போலவே ராஜாஜிக்கும் இதழியல் பின்னணி உண்டு. அவரது "ஸ்வராஜ்யா' இதழ் கட்டுரைகள் காலத்தை கடந்து நிற்கும் மூதறிஞரின் தீர்க்கதரிசனங்கள்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்த முனைவர் அரசு மட்டுமல்ல, அவரது குடும்பமே தமிழ்ப் பணியில் தங்களை தோய்த்துக் கொண்டவர்கள். திலகர் பற்றியும், வ.உ.சி. பற்றியும் பேராசிரியர் அரசைவிடத் தெரிந்து வைத்திருப்பவர்கள் தமிழகத்தில் யாருமே இருக்க முடியாது எனும் அளவுக்கு அவர்கள் குறித்த ஆய்வுகளை நடத்தி இருப்பவர்.

ராஜாஜியின் தமிழ்ப் பற்று குறித்தும், இதழியல் ஆர்வம் குறித்தும், சமுதாய அக்கறை குறித்தும் வெளியில் தெரியாமல் போனது தமிழகத்தின் துரதிருஷ்டம். 1916- ஆம் ஆண்டு சேலத்தில் புகழ்மிக்க வழக்குரைஞராக இருந்தபோதே ராஜாஜி தமிழ் கலைச்சொல்லாக்கத்திற்காகத் திங்கள் இதழ் ஒன்றை தொடங்கியவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? அவரது முயற்சியை அப்போது பாரதியார் பாராட்டி எழுதியிருக்கிறார்.

1929-ஆம் ஆண்டு மார்ச் முதல், 1930 மே மாதம் வரை 10 இதழ்கள் மட்டுமே வெளிவந்த "விமோசனம்' என்கிற 40 பக்க மாத இதழ், மதுவிலக்கை வலியுறுத்தவும், மதுவின் தீமையை உணர்த்தவும் வெளிக்கொணரப்பட்டது. சமுதாய சீர்கேட்டுக்கு வழிகோலும் மதுவுக்கு எதிராகப் பத்திரிகை கொண்டு வர வேண்டும் என்கிற ராஜாஜியின் அந்த உயரிய எண்ணத்திற்கு உறுதுணையாக, உதவி ஆசிரியராக இருந்தவர் கல்கி என்று பின்னாளில் பிரபலம் அடைந்த நாவலாசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி.

விமோசனம் பத்து இதழ்களிலும் சேர்த்து 17 கருத்துப் படங்களும் வெளிவந்தன. ஒவ்வொரு இதழிலும் ராஜாஜி ஆசிரியர் உரையும் தீட்டி இருக்கிறார். விமோசனம் இதழில் வெளிவந்த கட்டுரைகள், கருத்துப் படங்கள், கேள்வி - பதில் பகுதி ஆகியவற்றைத் தொகுத்து ஆவணப் பதிவாக வெளியிட்டு இருக்கும் பேராசிரியர் மா.ரா. அரசு நினைவு  அறக்கட்டளைக்குத் தமிழகம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது.

மூன்று கவிதைத் தொகுப்புகள், ஏழு சிறுகதைத் தொகுப்புக்குப் பிறகு "அப்பாவின் குதிரை' என்கிற தனது நான்காவது கவிதைத் தொகுப்பை வெளிக் கொணர்ந்திருக்கிறார் கவிஞர் ஸ்ரீதர் பாரதி. விமர்சனத்திற்கு வந்திருந்த அந்தத் தொகுப்பில் இருந்தது இந்தத் துளிப்பா -
மண் வீடு
கட்டிக் கொண்டிருக்கிறது
செங்குளவி
கல் வீட்டிற்குள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com