ஊச்சும் எனும் உயிர்ப்புணர்வு!

"இருகைகள் தட்டினால்தான் ஓசை' என்று கூறுவதுண்டு. ஓசை என்பது ஒலித்தொகுதியின் அளவாக இன்று கணக்கிடப்படுகிறது.
ஊச்சும் எனும் உயிர்ப்புணர்வு!
Published on
Updated on
2 min read

"இருகைகள் தட்டினால்தான் ஓசை' என்று கூறுவதுண்டு. ஓசை என்பது ஒலித்தொகுதியின் அளவாக இன்று கணக்கிடப்படுகிறது. ஓசையை வெறும் உணர்வற்ற "ஒலித்தொகுதி' என்றுதான் நினைக்கிறோம். ஆனால், அந்த ஓசையில் "உயிர்த்துடிப்பு' கலந்திருப்பதாகப் புலவர் பெருமக்கள் உணர்ந்தனர்.
"குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே' (குயில் பாட்டு 1-33) என்று பரவசம் கொள்ளும் பாரதிக்கு "கு...கு' என்ற ஓசையே பாட்டாக ஒலிக்கிறது. எவ்வாறெனில் "கானப் பறவை கலகலவெனும் ஓசையிலும்' (குயில் பாட்டு 2- 28) நெஞ்சைப் பறிகொடுத்தவர் அல்லவா மகாகவி பாரதியார்? "கத்தும் குயிலோசை' என்று அவரே பிறிதோரிடத்தில் பாடுவார்.
ஓசை தரும் இன்பத்தினை முழுவதுமாக உணர்ந்தவர்கள் கவிஞர் பெருமக்கள். "ஓசை பெற்றுயர் பாற்கடல்' என்பார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். மலையருவி வீழும் ஓசை, யாழ், குழல், முழவு ஆகிய இசைக்கருவிகளின் இன்னோசையை ஒத்திருந்ததாகத் திணைமொழி ஐம்பது எனும் பதிணெண்கீழ்க் கணக்கு நூல் பகருகிறது.
"யாழும் குழலும் முழவும் இயைந்தென வீழும் அருவி'. அணி இலக்கணத்தில், ஓசைக்கு நயத்துக்கு என்றுமே தனியொரு ஏற்றம் உண்டு.
முற்காலத்தில் கல்வி, போர், வாணிபம் ஆகிய மூன்று காரணங்களை முன்னிறுத்தி, தலைவன், தலைவியைவிட்டுப் பிரிந்து போவது உண்டு. காடு, மலை, சுரம் ஆகியவற்றைத் தலைவன் கடந்து செல்லும்போது விலங்குகள் அவன் செல்லும் வழியில் குறுக்கிடலாம். அவ்வேளையில் அவன் காணும் காட்சிகளால், தலைவியின் நினைவு அவனுடைய மனத்திரையில் வந்து மோதும்.
அத்தகைய ஒரு காட்சி "ஐந்திணை ஐம்பது' எனும் பதினெண் கீழ்க்கணக்குநூலில் இடம்பெறுகிறது, இந்நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்திற்கும், திணைக்குப் பத்துப் பாடலாக 50 பாடல்கள் வெண்பா யாப்பில் இடம்பெற்றுள்ளன.
"ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர்' என்று இந்நூலின் பெருமையைப் பாயிரப் பாடல் பரிந்துரைக்கிறது.
"சுனைவாய் சிறுநீரை எய்தாதென்று எண்ணிப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமான்தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்ப காதலர்
உள்ளம் படர்ந்த நெறி'
எனும் பாடல் தலைவன் செல்லும் வழி, இத்தகையை அன்பு நிறைக் காட்சிகள் நிறைந்தது என்பதைப் புலப்படுத்தும்.
இப் பாடலின் பொருள் பின்வருமாறு:
"தலைவன் செல்லும் வழியில் சுனை ஒன்று உள்ளது. அச்சுனையில் உள்ள நீரை ஆவலுடன் அருந்துவதற்காக ஆண் மானும் (கலைமான்), பெண் மானும் (பிணைமான்) வேகமாக ஓடி வருகின்றன. இரு மான்களும் சுனைநீரில் வாய் வைக்கின்றன.
சுனையில் மிகக் குறைவாக நீர் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆண் மான், தான் குடிப்பது போல் பாசாங்கு செய்கிறது. நீரை உறிஞ்சுவது போல் தன் உதடுகளைக் குவித்துகொண்டு "ஊ' எனும் ஓசையைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது.
தன்னுடைய இன்துணை, நீரை உறிஞ்சுகிறது என்று எண்ணிய பிணைமான், சுனைநீரை முழுவதுமாக உறிஞ்சுக் குடித்து, தன்னுடைய தாகத்தைப் போக்கிக் கொள்கிறது.
இக்காட்சியைக் கண்ட தலைவனின் உள்ளத்தில் , தலைவியைப் பற்றிய காதல் உணர்வு வந்து மீதூறும். தலைவியின் மீது அளவு கடந்த அன்பு கொண்டவன் தலைவன் என்பதைக் கோடிட்டுக் காட்ட, "காதலர்' எனும் சொல்லைப் புலவர் பயன்படுத்தியுள்ளார்.
அத்துடன் வாய் குவித்து, திரவப் பொருள்களை உறிஞ்சும்போது ஏற்படும் ஓசை வெளிப்பாட்டை "ஊச்சும்' எனும் சொல்லால் ஒளிரச் செய்துள்ளார் ஆசிரியர். அத்துடன் கலைமானின் அன்பு கலந்த பொய்ம்மை நடிப்பைக் காட்டுவதற்காக, "கள்ளத்தின் ஊச்சும்' என்று பாடியிருப்பதுவும் படித்து இன்புறத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.