இறையனார் களவியல் செம்பதிப்பு!

ஒரு நூலுக்குரிய சுவடிகள், பதிப்புகள், உரைமேற்கோள் பாடல்கள் ஆகிய அனைத்துத் தரவுகளையும் ஒருங்கே திரட்டி,  அவற்றிலுள்ள மூலபாடங்களையும் மாற்றுப் பாடங்களையும் கண்டறிவதுடன் அவற்றில் மூலபாடத்தை உறுதிச்...
இறையனார் களவியல் செம்பதிப்பு!


ஒரு நூலுக்குரிய சுவடிகள், பதிப்புகள், உரைமேற்கோள் பாடல்கள் ஆகிய அனைத்துத் தரவுகளையும் ஒருங்கே திரட்டி,  அவற்றிலுள்ள மூலபாடங்களையும் மாற்றுப் பாடங்களையும் கண்டறிவதுடன் அவற்றில் மூலபாடத்தை உறுதிச் செய்து நூலினைப் பதிப்பித்தல் செம்பதிப்பு ஆகும். 

இதற்குச் சான்றாகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளிக் கொண்டு வந்துள்ள செம்பதிப்புகளைக் கூறலாம். அந்த வகையில் அகப்பொருள் இலக்கணமான இறையனார் களவியலை அண்மையில் வெளியிட்டுள்ளது.

இச்செம்பதிப்பு வெளிவருவதற்கு முன்பே இந்நூலை சி.வை. தாமோதரம்பிள்ளை 1883-ஆம் ஆண்டு முதல் முதலில் சுவடியிலிருந்து அச்சில் பதிப்பித்தார். இதன் இரண்டாம் பதிப்பு 1899-ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்பதிப்புகளைத் தொடர்ந்து ச. பவானந்தம் பிள்ளை (1916), கா.ர. கோவிந்தராஜ முதலியார் (1939), கா. நமச்சிவாய முதலியார் (1943), சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் (1953) போன்றோரும் இந்நூலினை வெளியிட்டுள்ளனர்.

இப்பதிப்பாசிரியர்கள் தாங்களுக்குக் கிடைத்த சுவடிகளையும் நூல்களையும் ஆராய்ச்சி செய்து பதிப்பித்தனர். அதனால் இவர்கள் பதிப்பித்த பதிப்புகளுக்கிடையே பாடங்கள் வேறுபட்டும் உள்ளன. சான்றாக இறையனார் களவியல் நூற்பாவான (1:2:4) எட்டினுள் என்பது (சி.வை.தா.1883, 1889) எட்டனுள் என்றும் (ச.பவா.1916)  மற்றொரு நூற்பாவான (3:2:1,2) பாங்க னோரிற் என்பது (சி.வை.தா.1883, ச.பவா.1916) பாங்கி னோரிற் என்றும் (சி.வை.தா. 1899) பதிப்புகளுடையே பாடங்கள் வேறுபட்டுள்ளதைக் காணலாம்.

இப்பாடவேறுபாட்டினால் எந்தப் பாடம் மூல நூலாசிரியரால் சுட்டப்பட்டது என்ற ஐயம் தோன்றும். எனவே, நூலாசிரியர் குறிப்பிட்ட பாடத்தை உறுதிச் செய்ய அந்நூல் தொடர்பான சுவடிகள், பதிப்புகள், உரைமேற்கோள் பாடல்கள் ஆகிய அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தினால்தான் நூலாசிரியருடைய மூலபாடத்தை அறியமுடியும்.

அந்த வகையில் இறையனார் களவியலுக்கு, உ.வே.சா. நூலகம், சரசுவதி மகால் நூலகம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மறைமலையடிகள் நூலகம்,  திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், மதுரைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம், திருப்பதி வெங்கடேசுவராப் பல்கலைக்கழகம், பாரிசு நகரின் பிபிலோதேகு தேசிய நூலகம் ஆகிய இடங்களிலிருந்து செம்மொழி நிறுவனத்தார் சுவடிகளைத்  திரட்டினர். அவைக இப்பதிப்புப் பணிக்குக் கைக்கொள்ளப்பட்டன.

இச்சுவடிகளோடு முதல் முதலில் சுவடிகளைக் கொண்டு வெளிவந்த பதிப்புகளாக சி.வை. தாமோதரம்பிள்ளை (1883, 1899), ச. பவானந்தம்பிள்ளை (1916) ஆகியோரின் நூல்களையும் பழைய உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்தாண்ட இறையனார் களவியல் நூற்பாக்கள் இடம்பெற்ற தொல்காப்பியம், பரிபாடல், திருக்கோவையார், யாப்பருங்கலம், நம்பியகப்பொருள், தஞ்சைவாணன் கோவை, களவியற் காரிகை, இலக்கண விளக்கம் ஆகியவற்றின் உரையையும் பதிப்பாசிரியர்கள் பதிப்புகளின் அடிக்குறிப்பிலும் குறிப்புரையிலும் கூறியுள்ள பாடவேறுபாடுகளையும் மூலபாட ஆய்வுக்கு உட்படுத்தினர்.

மூலபாடத்தை உறுதிச் செய்வதற்கு முன்பாகச் சுவடிகள் எழுதப்பட்ட காலத்தை அறிந்தனர். அவற்றில் காலத்தால் முந்தி எழுதப்பட்ட சுவடியை மூலச் சுவடியாகக் கொண்டனர்.

அந்த வகையில் உ.வே.சா. நூல் நிலையத்தில் கி.பி. 1655ஆம் ஆண்டு எழுதப்பட்ட இறையனார் களவியல் சுவடியே (557) காலத்தால் முந்தையதாகக் கருதினர். 
அச்சுவடியை, பிற சுவடிகள், பதிப்புகள் முதலானவற்றோடு ஒப்பிட்டுப் பாடவேறுபாடுகளைக் கண்டறிந்து மூலபாடத்தைத் தேர்வு செய்து கொண்டனர்.  
தேர்வு செய்த மூலபாடத்தையும் மாற்றுப்பாடங்களையும் முறையே சுவடி, பதிப்பு, உரைமேற்கோள் பாடல் என்ற வரிசையில் இடம்பெறச் செய்தனர். அவற்றின் இறுதியில் மூலபாடத்தை உறுதி செய்ததற்கான விளக்கத்தைச் சான்றுகளோடு நிறுவியுள்ளனர். 
இத்தகைய பாடத்தேர்விற்கான மாற்றுப்பாடம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் அவை இடம்பெற்ற சுவடிகள், பதிப்புகள், மேற்கோள்கள் ஆகியவற்றினைச் சான்றுகளோடு பதிப்பில் இடம்பெறச் செய்தது என்பது பிற பதிப்புகளில் இல்லாத சிறப்பாகும்.   
இதனோடு பிற்கால மேல் ஆய்விற்குப் பயன்படும் வகையில் சுவடிகளில் பூச்சி அரிப்புகளால் ஏற்பட்ட சிதைவு, முறிவு, விடுபாடு ஆகியவற்றைத் தொகுத்துச் "சுவடிகள் சிதைவும் முறிவும்' என்றும் சுவடிகளில் எழுத்துப் பிழை, எழுத்து மிகை, எழுத்துக் குறை போன்றவற்றைத் தொகுத்துப் "பிழைப்பாடப் பட்டியல்' என்றும் எந்தந்தச் சுவடிகளிலிருந்து பாடங்கள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன அல்லது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பனவற்றைத் தொகுத்துச் "சுவடிகள் திறப்பு' என்றும் தலைப்புகளைக் கொண்டு நூலில் இடம்பெறச் செய்துள்ளனர். 
பதிப்புகளில் பாடங்கள் வேறுபட்ட இடங்களைக் கண்டறிந்து அதனைப்  "பிற பதிப்புகள் - ஒப்பீடு' என்னும் தலைப்பில் கொடுத்துள்ளனர். 
இவ்வாறு ஒரு நூலுக்குச் செம்பதிப்பை உருவாக்கி இருப்பது தமிழில் புது முயற்சியாகும். இந்நூல் பிற நூல்களையும் செம்பதிப்பாகக் கொண்டு வருவதற்கு முன்மாதிரியாக விளங்குகின்றது எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com