

திருவெம்பாவை, மணிவாசகப் பெருமான் அருளியது; திருப்பாவை, ஆண்டாள் நாச்சியார் அருளியது. இரண்டும் 'பாவாய்' என்று முடியும் பாசுரங்களைக்கொண்டவை.
'பாவாய்' என்று முடிவு பெறும் பாட்டு,
'பாவைப் பாட்டு'.
திருவெம்பாவை, இருபது பாட்டு உடையது; திருப்பாவை, முப்பது பாடல் உடையது. திருவெம்பாவை, சிவபெருமானின் சீர் பரப்புவது; திருப்பாவை, திருமாலின் புகழ் பாடுவது. சிவன் ஆயினும் திருமால் ஆயினும் பெயர் வேறே தவிர, இறை ஒன்றே என்பது பேர் அறிஞர் கண்ட முடிவு.
திருவெம்பாவை, சிவனோடு இரண்டு அறக்கலந்த ஆண் தகையார் பாடியது; திருப்பாவை, திருமாலையன்றி அறியாத பெண் அரசி பாடியது. திருவெம்பாவை, சிவன் புகழ் பாடுவதில் இணையற்ற நூலாகிய திருவாசகத்தின் ஒரு பகுதி; திருப்பாவை, திருமால் சீர் பரவுவதில் தலைசிறந்த நூலாகிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் ஒரு பகுதி.
திருவெம்பாவைக்கும் திருப்பாவைக்கும் உள்ள ஒற்றுமைகள் பலப்பல. திருவெம்பாவையைப் போலவே திருப்பாவைப் பாசுரங்களும் ஈற்றில் 'எம்பாவாய்' என்றே முடிகின்றன. எனவே, ஆண்டாள் பாவையும் 'திருவெம்பாவை' என்று பெயர் பெறுவதில் தடை ஏதும் இல்லை. இரண்டுக்கும் வேறுபாடு காணவே ஒன்று 'திருப்பாவை' என்றும் இன்னொன்று 'திருவெம்பாவை' எனவும் பெயர் பெற்றிருப்பதாக கொள்ளல் வேண்டும்.
'எம்பாவாய்' என்ற சொல்லுக்கு திருவெம்பாவையிலும் சரி, திருப்பாவையிலும் சரி சில பாசுரங்களிலும் பொருள் அமைகிறது; வேறு சில பாடல்களில் 'எம்பாவாய்' என்பது பொருளின்றியே நிற்கிறது. அவற்றைப் பொருளில்லாமலேயே ஏனைய பாடல்களோடு பொருத்துவதற்கு, இறுதி மகுட ஒற்றுமைக்காகச் சேர்க்கப்பட்டதாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
'ஏல்', 'ஓர்' என்ற இரண்டு சொற்களும் திருவெம்பாவை இருபது பாட்டிலும் திருப்பாவை கடைசிப் பாடல் ஒழிந்த இருபத்தொன்பதிலும் ஈற்று அடியில் வருகின்றன.
'ஏல்' என்பதற்கு 'ஏற்றுக் கொள்' என்றும் 'ஓர்' என்பதற்கு 'ஆராய்ந்து பார்' எனவும் சில பாடல்களில் பொருள்படுகிறது; மற்றும் சில பாட்டுகளில் அவ்வாறு பொருள் கொள்ள முடியவில்லை. அங்கு இவற்றைப் பொருள் தராது நிற்கும் அசைச் சொற்களாகவே கொள்ள வேண்டுவதாகிறது.
திருப்பாவையில் 'பாவை' என்ற சொல் இரண்டு இடங்களில் வருகின்றது; 'வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்கு' என்று இரண்டாவது பாட்டிலும், 'நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்' என மூன்றாவது பாட்டிலும் காணப்படுகிறது.
இந்த இரண்டு இடங்களிலும் 'பாவை' என்ற சொல்லுக்கு 'நோன்பு' என்றே, உரை கண்ட அறிஞர் பலரும் பொருள் கூறினர். பாவை நோன்பு அல்ல; பாவை என்றாலே நோன்பு என்பது பொருள்.
திருப்பாவை மற்றோர் இடத்தில் 'பாவைக்களம்' என்று வந்திருக்கிறது. 'பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம்புக்கார்' என்பதே அது.
அது திருப்பாவை, பதின்மூன்றாவது பாசுரத்தின் மூன்றாவது அடி. 'பாவைக் களம்' என்பதற்கு 'நோன்பு நோற்பதற்குக் குறிப்பிடப் பெற்ற இடம்' என்றே முன்னையோர் பொருள் கொண்டனர். எனவே, பாவை என்ற சொல்லுக்கு மூன்று இடங்களிலும் நோன்புப் பொருளே கொள்ளப்பட்டிருக்கிறது.
திருப்பாவையில் பாடல்களின் கடைசியில் வந்த 'எம்பாவாய்' தவிர, இடையில் 'பாவை' என்ற சொல்பயின்று வரவே இல்லை. திருவெம்பாவை நோன்பைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை.
'பறை' என்ற சொல் திருப்பாவை, 1, 8, 10, 16, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய பதினொரு பாசுரங்களில் கையாளப்பட்டிருக்கிறது. திருப்பாவை இவ்வளவு சிறப்பித்துப் பலமுறை சொல்லிய 'பறை' என்ற சொல், திருவெம்பாவையில் இடம் பெறவே இல்லை.
'பறை' என்பதற்கு 'விரும்பிய பொருள்' என்று சில இடத்தும், 'பறை வாத்தியம்' என வேறு சில இடத்தும் பொருள் கொள்ள வேண்டுவதாகிறது. திருப்பாவையில், நோன்பிற்கு வேண்டும் ஒரு பொருளாக 'பறை' கருதப்பட்டிருக்கிறது. 'பறை' மட்டுமல்ல; நோன்பிற்கு வேண்டும் வேறுபலவும் திருப்பாவையிற் கூறப்பட்டுள்ளன.
'மாலே மணிவண்ணா' என்ற திருப்பாவை 26-ஆம் பாசுரம் நோன்புக்கு வேண்டும் பொருள்கள் பலவற்றை விரித்துக் கேட்கிறது. இரண்டாவது திருப்பாவை, நோன்புக்குச் செய்ய வேண்டிய காரியங்களைக் கூறுகிறது. 27-ஆவது திருப்பாவை ஆடை, அணி, உணவு முதலியவற்றைச் சிறப்பித்துக் கூறுகிறது.
பாவைக்கு சங்கு, பறை, பல்லாண்டு பாடுவார். விளக்கு, கொடி, விதானம் இவைகள் எல்லாம் வேண்டும் எனக் கேட்கின்றது திருப்பாவை. பாவை நோற்பார் நெய் உண்ணாலாகாது. பால் குடித்தல் கூடாது. மைத் தீட்டல் தகாது மலர் முடித்தல் சாலாது எனக் கூறுகிறது திருப்பாவை.
கைவளையும், தோள் வளையும் காதுத் தோடும் நூபுரமும் பிறவும் அணிய வேண்டும்; ஆடை உடுக்க வேண்டும்; நெய்யில் முழுக்காட்டிய பாற்சோற்றை முழங்கை வழியாக நெய் கொட்டும்படி சாப்பிட வேண்டும் எனக் கேட்கின்றது திருப்பாவை.
இன்ன பொருள்கள் எல்லாம் திருவெம்பாவையில் சொல்லப் படவே இல்லை.
மார்கழி நீரைப் பற்றி திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் இயம்புகின்றன. 'மார்கழி நீர் ஆடேல் ஓர் எம்பாவாய்' என்று திருவெம்பாவை கடைசிப் பாட்டுச் சொல்லுகிறது.
'மார்கழிநீர் ஆட மகிழ்ந்தேல் ஓர் எம்பாவாய்' என்று திருப்பாவை நான்காம் பாட்டும், 'மார்கழி நீர் ஆடுவான்' எனத் திருப்பாவை 26-ஆம் பாடலும் செப்புகின்றன. மேலும், 'மார்கழித் திங்கள்' என்று திருப்பாவை முதற் பாட்டுத் தொடங்குகிறது. எனவே, மார்கழி மாதத்து நீராடும் முறைமையைப் பற்றி திருப்பாவை, திருவெம்பாவை இரண்டும் ஒருங்கு உரைக்கின்றன.
பனியின் தொடக்கக் காலம் மார்கழி மாதம் ஆதாலாலேயே மார்கழி நீர் ஆடல் சிறப்பித்துச் சொல்லப் பெற்றது.
துயில் எழுப்பல் பற்றி இரு பாவைகளும் பரக்கப் பகர்கின்றன. இவற்றில் திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் நிறைந்த ஒற்றுமை இருக்கின்றது. திருவெம்பாவைத் தொடக்கமே துயில் எழுப்பல்தான். 'ஆதியும் அந்தமும்' எனத் தொடங்கும் முதற்பாட்டிலிருந்து 'கோழி சிலம்ப' என்ற எட்டாவது பாடல் முடிய உறங்குபவரை எழுப்பும்பாசுரங்களே.
திருப்பாவையில், 'புள்ளும் சிலம்பினகாண்' என்ற ஆறாவது பாசுரத்திலிருந்து 'எல்லே இளம்கிளியே' என்ற பதினைந்தாவது பாடல் முடியப் பத்துப் பாக்கள் உறங்குபவரை எழுப்பலே. மேலே சொன்ன திருவெம்பாவை எட்டுப் பாடல்களும், திருப்பாவை பத்தும், பெண்கள் வீடுதோறும் சென்று உறங்கும் நங்கையரைத் துயில் உணர்த்தி எழுப்பும் முறையில் பாடப்பட்டன.
திருப்பாவை, பல பாடல்களில் கண்ணபிரானையும் அவன் உறவினரையும் துயில் எழுப்புவதோடு விருப்பத்தை விண்ணப்பித்துக் கொள்கிறது; திருவெம்பாவை, பல பாசுரங்களில் நீராட்டத்தை விரித்துக் கூறிக் கொண்டு இறைக்குத் தனது வேண்டுகோளை உரைக்கின்றது.
திருவெம்பாவையில் கடைசிப் பாட்டு, போற்றிப் பாட்டு. திருப்பாவையில் இருபத்து நான்காவது பாடல் போற்றிப் பாடல். திருவெம்பாவையில் பதினாறாவது பாட்டு மழைப் பாட்டு; திருப்பாவையில் நான்காவது பாடல் மழைப் பாடல். மழைப் பாசுரம் இரண்டும் மிகப் பெரிதும் ஒற்றுமை உடையன.
திருவெம்பாவை, திருப்பாவை இரண்டும் யாப்பு வகையில், வெண்தளையால் வந்த எட்டு அடிக்கொச்சகக் கலிப்பா. இதனை எண்சீர் கொண்ட நான்கு அடி விருத்தமாகக் கொள்வது பொருந்தாது. யாப்பு வகையை ஈண்டு விரித்துப் படிப் போரை இடர்ப்படுத்த வேண்டாம்.
திருவெம்பாவை பாடியவர் மாணிக்கவாசக சுவாமிகள். மணிவாசகரின் புலமையும் பெருமையும் அப்பாலுக்கும் அப்பாற்பட்டன. அப்பெரியாரைப் போலப் பக்தி வலையில் பட்டோர் யாரும் இலர். அவர் பாடியருளிய திருவாசகத்துக்கு இணையான 'ஊனினை உருக்கி உள்ஒளி பெருக்கும்' ஒரு நூல், அதுதவிர எதுவும் இல்லை. அத்தகைச் சிறப்பு வாய்ந்த திருவாசகத்தின் பகுதி திருவெம்பாவை.
திருப்பாவை பாடியவர் ஆண்டாள் நாச்சியார். அப் பெரியார்க்கு 'கோதை' என்று ஒரு பெயர் உண்டு. அவர் பாடிய பாசுரங்கள் திவ்யப் பிரபந்தத்தை அலங்கரிக்கின்றன. நாலாயிரத்துள்
திருப்பாவை தவிர, 143 பாடல்கள் ஆண்டாள் பாடியிருக்கின்றார். அருமையான பாடல்கள்; பெண்ணைக் குறைத்துப் பேசுவாரைத் தலையில் அடிப்பது போன்ற அற்புதம் வாய்ந்தவை இப் பெண் தெய்வத்தின் பாடல்கள்.
சூடிக் கொடுத்த சுடர்கொடியின் திருப்பாவை முப்பதையும் படித்து அறியாதவர்களை இவ்வுலகம் தாங்குவது வீண்.
(நன்றி: முல்லை பதிப்பகம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.