உழவர்களின் வானிலை முன்னறிவு

சென்னை வானிலை ஆய்வு மையம், தென்னிலங்கைக் கடற்பகுதியில் வளி மண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழையால் பாதிப்படைந்துள்ளன.

அண்மையில் சென்னை வானிலை ஆய்வு மையம் "தென்னிலங்கைக் கடற்பகுதியில் வளி மண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வெளியிட்ட முன்னறிவிப்பின்படியே தென்மாவட்டங்கள் பெரும் வெள்ளப் பாதிப்படைந்துள்ளன.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னமேயே தென்மாவட்ட உழவர்கள் தம் "அனுபவ அறிவியலால்' வானிலையை முன் கூட்டியே அறிந்து கூறினர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.
17-ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூலான, "முக்கூடற்பள்ளு' என்ற சிற்றிலக்கியம் இதனை வெளிப்படுத்தியுள்ளது. தென்பாண்டி நாட்டில் சித்ரா நதி, கோதண்டராம நதி என்ற  இருநதிகளும் 
தாமிரபரணியாற்றில் கலக்குமிடம் தான் "முக்கூடல்'. திருநெல்வேலிக்கு வடகிழக்கேயுள்ள இந்த முக்கூடலில் கோயில் கொண்டுள்ள திருமாலாகிய
 "அழகர்' மீது பாடப்பட்டது "முக்கூடற்பள்ளு'.
பாண்டியன் மாறவர்மன் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் கட்டிய ஏரி "ஸ்ரீவல்லபன் பேரேரி' என்று பெயர்பெற்றது. இதனால் இவ்வூர், "சீவலப்
பேரி' என்று வழங்கப்படுகிறது. மழை வருவதற்கான அறிகுறியை அறிந்த இப்பகுதிப் பள்ளர்களாகிய உழவர்கள் கடவுளை வணங்குகின்றனர்.
எல்லாத் திசைகளிலிருந்தும் வரும் மேகங்கள் அப்பகுதியில் சூழ்கின்றன. அப்பொழுது அவர்கள் பின்வருமாறு கூறுகின்றனர் : "நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர அறிகுறிகள் தோன்றுகின்றன. தென்மேற்குத் திசையில், "மலையாள மின்னலும்', தென்கிழக்குத் திசையில், "ஈழத்து மின்னலும்' மின்னத் தொடங்குகின்றன.  
நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் (கிளைகளை) சுற்றியவாறு காற்று வேகமாக அடிக்கிறது.
கிணற்றிலே உள்ள தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழைநீர் புகுந்துவிடாதவாறு சேற்றினால் அடைக்கின்றன. ஏராளமான வானம்பாடிகள் மழைநீரைத் தேடி அங்குமிங்குமாகப் பறக்கின்றன. 
அக்கூற்றினை விளக்கும் அவ்விலக்கியப் பாடல் இதுதான் :
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி 
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே
கேணி நீர்ப்படு சொறித்தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே
மழைதேடி ஒரு கோடி வானம் பாடி ஆடுதே
போற்று திருமாலழகர்க் கேற்ற மாம்பண்ணைச்
சேரிப் பள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித் துள்ளிக் கொள்வோமே.               
(முக்கூடற்பள்ளு, பா.35)

மலையாள மின்னலும், ஈழமின்னலும் ஒரு சேர வானில் தோன்றும்பொழுது, அவை, தென்தமிழகப் பகுதிக்குக் கனமழையைத் தரும் என்ற மழை வானிலையைச் சக மாந்தர்க்கு முன்னறிவிப்புச் செய்ய அறிந்திருந்தனர் அப்பகுதி உழவர்கள் என்பதை வியந்து கூறமுடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com