இந்த வாரம் கலாரசிகன் - (24-12-2023)

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ருச்சி ப்ரீதம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய "கிராண்ட்யுர் ஆஃப் தி சோழாஸ்' என்கிற புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார்.
இந்த வாரம் கலாரசிகன் - (24-12-2023)

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ருச்சி ப்ரீதம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய "கிராண்ட்யுர் ஆஃப் தி சோழாஸ்' என்கிற புத்தகத்தை எனக்கு அனுப்பித் தந்திருக்கிறார். "எதற்காக நமக்கு இந்த ஆங்கிலப் புத்தகத்தை அனுப்பித் தந்திருக்கிறார் அவர்' என்கிற எனது கேள்விக்கான பதில், அந்தப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியவுடன் தெரிந்துவிட்டது.

தி.வை. சதாசிவப் பண்டாரத்தாரின் "சோழர்கால வரலாறு', நீலகண்ட சாஸ்திரியாரின் "சோழாஸ்' உள்ளிட்ட வரலாற்றுப் பதிவுகளிலிருந்து வேறுபடுகிறது இந்தப் புத்தகம். சோழர்களின் வரலாறு குறித்த பதிவாக மட்டுமே இல்லாமல், சோழப் பேரரசின் பிரமாண்டத்தை, அதன் கட்டடக்கலை மேன்மையின் அடிப்படையில் நிறுவ முயற்சித்திருக்கிறது ருச்சி ப்ரீதம் ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம்.

சோழர்காலத் தாமிரப் பட்டயங்கள், சோழர்தம் கோயில்கள், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலிலுள்ள சுவரோவியங்கள், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில், கும்பகோணம் பகுதியில் உள்ள சோழர்கால ஆலயங்கள், விழுப்புரம் அருகிலுள்ள ராஜராஜ சதுர்வேதிமங்கலம் கோயில்கள், தொண்டை மண்டலத்தில் உள்ள சோழர் கோயில்கள், தென்தமிழகத்தில் சோழர்கள் கட்டிய ஆலயங்கள், சோழர்கால பஞ்சலோகச் சிலைகள் என்று ஒன்றுவிடாமல் நேரில் சென்றும், ஆராய்ந்தும் பதிவு செய்யப்பட்டிருப்பது இந்தப் புத்தகத்தின் தனிச் சிறப்பு.

இன்றும் நமக்குக் காணக் கிடைக்கும் சோழர்கள் தொடர்பான எல்லா பங்களிப்புகளையும் அவற்றின் பின்னணியுடன், புகைப்படங்களையும் இணைத்து எழுத்தில் வடித்திருக்கிறார். ஆழமான ஆராய்ச்சி நூலாக இல்லாமல், சோழர்கள் உருவாக்கி வருங்காலத்திற்கு விட்டுச் சென்றிருக்கும் பிரமிப்புகள் குறித்த சுவாரஸ்யமான பதிவாக இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடிகிறது. 

சோழர்கள் பற்றிய குறிப்பு மகாபாரதத்திலேயே காணப்படுகிறது. குருúக்ஷத்ர யுத்தத்தில் அவர்கள் பாண்டவர்களின் அணியில் இருந்ததாகப் பதிவு இருக்கிறது. அசோகரின் 13-ஆவது கல்வெட்டில் காணப்படும் சோழர்கள் குறித்த செய்திதான், நமக்குக் கிடைத்திருக்கும் மிகவும் பழைமையான பதிவு. கி.மு. 268 - 232-இல் வாழ்ந்த மெளரிய அரசர் அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இருந்ததற்கு இன்னொரு சாட்சியாக சங்க காலத்தைச் சேர்ந்த "மகாவம்சம்' திகழ்கிறது. 

சுமார் ஆறு ஆண்டுகள் தேடிப் பிடித்துச் சென்று ருச்சி ப்ரீதம் நடத்திய பயணங்களின் விளைவுதான் இந்தப் புத்தகம். சோழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்திய கே.வி. சுப்பிரமண்ய ஐயர், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, ஆர். நாகசாமி ஆகியோருக்குத் தனது நன்றியைத் தெரிவித்திருக்கும் ருச்சி ப்ரீதம், வரலாற்றுச் சிறப்புமிக்க பிகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்தவர் என்பது நம்மை மேலும் வியக்க வைக்கிறது.

புரட்டிப் பார்த்தபோது, வண்ணப் புகைப்படங்கள் கவர்ந்து இழுத்தன. படிக்கத் தொடங்கியபோது, தரப்பட்டிருக்கும் புதிய பல தகவல்கள் ஈர்த்தன. இதே தரத்தில் இந்தப் புத்தகத்தை யாராவது தமிழாக்கம் செய்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

------------------------------------------------------------


சோழர்கள் பற்றிக் குறிப்பிட்ட கையோடு, நடனக்கலையில் உச்சத்தைத் தொட்ட பாலசரஸ்வதி குறித்த புத்தகம் குறித்தும் எழுதச் சொல்லி எனது  விரல்கள் அடம்பிடிக்கின்றன. பள்ளிச் சிறுவனாக பாலசரஸ்வதியின் நாட்டிய நிகழ்ச்சிக்கு எனது தந்தையார் அழைத்துச் சென்றது நினைவுக்கு வருகிறது.

நான் பார்க்கும்போது அவருக்கு 50 வயது நிச்சயமாக கடந்திருக்கும். ஆனால், அவரது நடனத்தைப் பார்ப்பதற்கு அரங்கம் நிறைய ரசிகர்கள் குவிந்திருந்தனர். எனது தந்தையாரும், அருகில் இருந்தவர்களும் பாலாவின் நடன பாவங்களை ரசித்தும் சிலாகித்தும் பேசியது ஞாபகத்தில் இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட பின்னணியுடன்தான் சின்னமனூர் முனைவர் அ. சித்ரா எழுதிய "தஞ்சை பாலசரஸ்வதியின் கலைப் பாரம்பரியம்' என்கிற புத்தகத்தை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். பாலசரஸ்வதியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் சங்கீத வித்வத் சபையின் செயலராக இருந்த ஈ. கிருஷ்ண ஐயரும், பிரபல இசைக் கலைஞர் அரியக்குடி ராமாநுஜ ஐயங்காரும் என்பது புதிய தகவல். ரவீந்திரநாத் தாகூர், ஆரம்பகால பாலசரஸ்வதியை ஆசிர்வதித்து ஊக்கப்படுத்தியிருக்கிறார் என்பது ஆச்சரியப்பட வைக்கும் இன்னொரு செய்தி. 

பரதநாட்டியக் கலையில் தோற்றப்பொலிவும், சுறுசுறுப்பான நடன அசைவுகளும் முக்கியம் என்பார்கள். அவை இரண்டுமே பாலசரஸ்வதியின் நடனத்தில் முன்னிலை வகிப்பதில்லை. நவரசங்களை வெளிப்படுத்தும் முக பாவங்களும், கை அசைவுகளால் வெளிப்படுத்தும் அபிநயங்களும்தான் அவரது நடனத்தின் சிறப்பு. அதனால்தான் அவர் "அபிநய சரஸ்வதி' என்று அழைக்கப்பட்டார்.

பாலசரஸ்வதியின் வம்சாவளியில் தொடங்கி, அவரது கலைப்பயணம் குறித்த அத்தனை தகவல்களையும் ஒன்றுவிடாமல் எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் சின்னமனூர் முனைவர் அ. சித்ரா. அதுமட்டுமல்ல, பாலசரஸ்வதி அதிகமாகக் கையாண்ட நடன உருப்படிகள் (பதவர்ணம், ஜாவளி, தில்லானா உள்ளிட்டவை) பட்டியலையும் இணைத்திருக்கிறார், 35 ஆண்டு காலமாக நடனக் கலைஞராகவும், நாட்டிய ஆசிரியராகவும் திகழும் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை உதவிப் பேராசிரியர் சின்னமனூர் சித்ரா!

------------------------------------------------------------

சிங்கப்பூரில் வாழும் கவிஞர் நெப்போலியனின் வழிகாட்டி நண்பர், கவிஞர் "விழிகள்' தி. நடராசன் என்பதை அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் இருந்து தெரிந்து கொண்டேன். நல்ல கவிஞர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் அவரது ரசனைப் பண்புக்கு எனது வாழ்த்துகள்.

"இரைக்கு அலையும் நிகழ்', கவிஞர் நெப்போலியனின் சமீபத்திய வெளியீடு. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருப்பதாக முன்னுரை தெரிவிக்கிறது. அதில் "நதி' என்கிற கவிதையின் இறுதி வரிகள் இவை. தத்துவார்த்தமான பல கவிதைகளை அந்தத் தொகுப்பில் படித்து ரசிக்க முடிந்தது.


 
நதி மூலம் யாதெனில்
நகர்தல்...
கடல் மூலம் யாதெனில்
கவர்தல்...
கடல்நதி கலப்பு
சாசுவதம்.
சங்கமித்தலே
உலகச் சக்கரம்.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com