
வைணவ ஆசார்ய மணிமாலையில் நடுநாயக ரத்தினமாக ஒளிர்பவர் ஸ்ரீஇராமாநுசர். "இளையாழ்வார்' எனப் பொருள்படும் இப்பெயரே அன்றி "உடையவர்', "எம்பெருமானார்', "யதிராஜர்', "ஸ்ரீபாஷ்யகாரர்' எனத் தமிழிலும் வட மொழியிலும் அவருக்குப் பல சிறப்புப் பெயர்களும் உண்டு.
ஆழ்வார்களின் அமுதப் பாசுரம் நாலாயிரத்திலும் அவர் நாவூறி நின்ற போதிலும் ஆண்டாளின் "சங்கத்தமிழ்மாலை'யாகிய திருப்பாவை முப்பதின்மேலும் தனிக்காதல் கொண்டவர்.
ஒரு நாள் முதலி(சீடர்)கள் அவரை அணுகித் திருப்பாவைக்கு ஒருமுறை பொருள் சொல்ல வேண்டும் என்று விண்ணப்பித்தார்களாம்.
அதற்கு அவர், திருப்பாவையைச் சொல்வதற்கும் கேட்பதற்கும் மோவாய் எழுந்த (தாடி, மீசைமுளைத்த) ஆண்கள் தகுதியுடையவரல்லர்; பெண்களே அதற்குத் தகுதியானவர்கள். அவர்களிலும் மிக்க பரிவுடையவர்களான மற்ற பிராட்டிகளுக்கும் கூடக் கேட்பதற்குத் தகுதி இல்லை. அவ்வளவு ஏன்? ஆழ்வார்கள் பதின்மருக்கும் ஒரே பிள்ளையான ஆண்டாள் சொல்லித்தானே கேட்க வேண்டும்' என்றாராம்.
இதன் பொருள், "திருப்பாவையின் பொருளை ஆண்டாளுடைய மனப்பாங்குடன் சொல்வதற்கு நானும் தகுதியுடையேன் அல்லேன், கேட்பதற்கு நீங்களும் தகுதியுடையவர் அல்லீர்' என்பதாகும்.
இது பற்றியே இவருக்கு, "திருப்பாவை சீயர்' என்னும் சிறப்புப் பெயர் உண்டாயிற்று. இதனை வலுப்படுத்துவதாக உடையவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி: உடையவர் நாளும் மாதுகரத்திற்கு (பிச்சைக்கு) எழுந்தருளுகையில் திருப்பாவைப் பாசுரங்களை மனத்திற்குள் சொல்லி (அநுசந்தித்து)க் கொண்டு செல்வது வழக்கம். ஒரு முறை திருவரங்கத்தில் அவ்வாறு பிச்சைக்காகப் பெரியநம்பி திருமாளிகை முன்நின்ற போது கதவு தாழிடப்பட்டிருந்தது.
அந்நிலையில்,
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ கடைதிறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்;
மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள்
கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார்
வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
(திருப்பாவை 18)
என்னும் பாசுரத்தை அநுசந்தித்துக் கொண்டிருந்தார் அவர்.
"செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்' என்ற அடிகளை எம்பெருமானார் சொல்லி முடித்த அதே கணத்தில் பெரிய நம்பி குமாரத்தியான அத்துழாய் தன் வளைக்கரங்களால் கதவைத் திறக்கவே, இராமாநுசர் அவளை நப்பின்னையாகவே பாவித்துக் கீழே விழுந்து வணங்கினார்.
அத்துழாய் அதனைக் கண்டு கைந்நெரித்துப் பதைத்து ஓடித்தன் தந்தையாரிடம் நடந்ததைச் சொன்னாள்.
அவர், இராமாநுசரின் இச்செயலுக்கான காரணத்தைத் தம் மதிநுட்பத்தால் ஊகித்து உணர்ந்து, எந்தப் பதற்றமுமின்றி அமைதியாக நடந்து வாசலை அடைந்து இராமாநுசரை அணுகி, "இளையாழ்வீர்! இன்று நம்வாசலைக்கிட்டிய அளவில் உந்துமதகளிற்றன் அநுசந்தானமோ' என்று கேட்கவும் அதற்கு அவர் "ஆம்' என்று விடையிறுத்தாராம்.
இதனால் "உடையவர் செய்த வணக்கம் அத்துழாய்க்கு உரியதன்று என்பதும், நப்பின்னைப் பிராட்டிக்கே உரித்தாம்' என்பதும் இனிது விளங்கும்.
எனவே தான், "இது உடையவர் உகந்த பாசுரம்' என்று திருப்பாவை மூவாயிரப்படி (பெரியவாச்சான்பிள்ளை) ஆறாயிரப்படி (அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்) ஆகிய உரைகளில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பெருமானார் விசேஷித்து உகந்திருக்கும் பாட்டு "உந்து மதகளிற்றன்' என்பது அவர்கள் கூற்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.