ஆண்டாளின் ஆன்மிக அறிவியல்! 

ஆன்மிக உணர்வும், அறிவியல் கருத்துகளும் கலந்து உறவாடுவதை ஆண்டாள் பாசுரங்கள் நன்கு உணர்த்தும்.
ஆண்டாளின் ஆன்மிக அறிவியல்! 

ஆன்மிக உணர்வும், அறிவியல் கருத்துகளும் கலந்து உறவாடுவதை ஆண்டாள் பாசுரங்கள் நன்கு உணர்த்தும்.
"ஆழிமழைக் கண்ணா' என்று மழைக்கடவுளை முன்னிறுத்தி, வேண்டுதலாகப் பாடும் பாசுரத்தில் "வானியல்' உட்பொதிந்த அறிவியல் கருத்தைத் தெற்றெனப் புலப்படுத்துகிறார்.
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் 
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ, உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிந்தேலோர் எம்பாவாய்
இப்பாசுரத்தில் "கடலில் சென்று, கடல் நீரை முகந்துகொண்டு, கரிய மேகங்களாய் (இராமன், கண்ணன் திருவுருவையொத்து) விண்ணில் எங்கும் பரந்து, பத்மநாபன் கையில் இருக்கும் சக்கரம் போல் மின்னல் அடித்து, வலம்புரிச் சங்கின் பேரொலிபோல் இடித்து முழங்கி, சார்ங்கபாணியின் அம்பு மழைபோல், மக்களை வாழ வைக்க, மழையே பொழிவாயாக! நாங்களும் மார்கழி நோன்பிற்கு நீராடி மகிழ்வோம்' என்று கன்னிப் பெண்கள் சார்பாக ஆண்டாள் பாடுகிறார்.
இப்பாசுரம் மூலம் கடல்நீர் (உப்புநீர்) ஆவியாகி, விண்ணில் கருமேகங்களாய் (நன்னீரைச் சுமந்த வண்ணம்), மண்ணில் உள்ளோரை வாழ வைக்கும் மழையாகப் பெய்யும் எனும் அறிவியல் உண்மையை நயமாக எடுத்துரைப்பது படிப்போருக்குப் பெரும் வியப்பை அளிக்கிறது.
ஒரு பாசுரத்தில் (திருப்பாவை) "வெள்ளி யெழுந்து வியாழம் உறங்கிற்று என்று பாடுகிறார்.  அதிகாலையில் கீழ்வானத்தில் "வெள்ளி' உதித்துவிட்டது. அதே நேரத்தில் விண்ணில் மேற்றிசையில் வியாழன் (கிரகம் / கோள்) சிறிது சிறிதாக மறையத் தொடங்கிவிட்டது. 
இந்த வானியல் செய்தி, ஆண்டாள், பெரியாழ்வார் வாழ்ந்த காலத்தை உறுதி செய்யப் பெரிதும் உதவுகிறது.
பேராசிரியர் மு. இராகவய்யங்கார், வெள்ளி (சுக்கிரன்), வியாழன் கோள்களின் நிலைப்பாடுகள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வு செய்தார். பெருமுயற்சிக்குப் பின்னர், கி.பி. 731 டிசம்பர் 18}ஆம் நாள் அதிகாலை 3.50}க்கு நிகழ்ந்தததாகக் கணக்கிடுகிறார் (ஆழ்வார்கள் கால நிர்ணயம்). 
ஆனால், குருபரம்பரை, வைணவ மரபுவழி நம்பிக்கையுடையோர் இக்கருத்தை ஏற்க மறுப்பர். ஆயினும், நாச்சியாரின் வானியல் அறிவு பிற்கால ஆய்வாளர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று கூறல் மிகையாகாது.  
திருப்பாவை (30 பாசுரங்கள்) மட்டுமின்றி, நாச்சியார் திருமொழியும் (143 பாசுரங்கள்) ஆண்டாள் நாச்சியாரால் இயற்றப்பட்டதே.
"மழையே! மழையே! மண்புறம் பூசி 
                                                                 உள்ளாய் நின்று
மெழுகு ஊற்றினாற் போல் ஊற்றுநல் 
                                                     வேங்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மை என்னெஞ்சத்தகப்படத்
தழுவி நின்று என்னைத் ததைத்துக்கொண்டு 
                                                ஊற்றவும் வல்லையே?' 
(நாச்சியார் திருமொழி 604)

இப்பாசுரம் மூலம் உலோக வார்ப்பு உருவச் சிலைகள் வடிக்கப்படும் முறை பற்றிய செய்தியை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார். தன் உடல் நலத்தைக் கௌவிக்கொண்டு தன்னை உருக்குலையச் செய்துவிட்ட வேங்கடவன் என்று மனம் பேதுற்ற நிலையில், ஆண்டாள் நாச்சியார் வருந்திப் புலம்புகிறார்.
இப்பாசுரத்தில் வார்ப்பு உருவச் சிலைகள் வடிக்கப்பட்ட விதத்தை அருமையாகக் கூறுகிறார். 
வார்ப்பு உருவங்களை முதலில் மெழுகால் வடித்துக்கொள்வர். மெழுகின் வெளிப்புறம் 
களிமண் பூச்சு கெட்டியாகப் பூசப்படும். மெழுகுப் பூச்சுக்கும், மண் பூச்சுக்கும் இடையே உருக்கப்பட்ட உலோகக் கலவை ஊற்றப்படும். பின்பு, ஓர் ஊசித் துவாரத்தின் மூலம் உள்ளேயிருக்கும் மெழுகை வெளியேற்றுவர். களிமண் பூச்சு தானே உதிர்ந்துவிடும். 
இப்பாடலில், தன் மேனியில் (உள்ளத்தில்) புகுந்து, தன்னைத் துன்புறுத்தும் எம்பெருமானை உருக்கிய உலோகக் கலவைக்கும், தன்னை நலிவடையச் செய்தமையை வெளியேற்றப்பட்ட மெழுகிற்கும் ஒப்பிடுகிறார். களிமண் பூச்சு உதிர்ந்ததுபோல தன் மேனி மெலிந்ததாதக் கூறுகிறார்.
ஆன்மிகமும் அறியலும் "கோதைத் தமிழின்' இரண்டு கண்கள் எனலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com