கல்லாடர் பலர்

அகநானூற்றில் ஏழு பாடல்களையும் (9, 83, 113, 171, 199, 209, 333), புறநானூற்றில் ஐந்து பாடல்களையும் (23, 25, 371, 385, 391), குறுந்தொகையில் இரண்டு பாடல்களையும் (260, 269) பாடியவர்களின் பெயர் கல்லாடர் என்

சங்க இலக்கியங்களுள் எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான அகநானூற்றில் ஏழு பாடல்களையும் (9, 83, 113, 171, 199, 209, 333), புறநானூற்றில் ஐந்து பாடல்களையும் (23, 25, 371, 385, 391), குறுந்தொகையில் இரண்டு பாடல்களையும் (260, 269) பாடியவர்களின் பெயர் கல்லாடர் என்பதாகும். திருவள்ளுவமாலையில், ஒன்றே பொருளெனின் வேறு என்ப வேறு எனின்.. எனத்தொடங்கும் ஒன்பதாவது பாடல் கல்லாடர் பாடியதாகும். 
நன்னூல் பொதுவியல் பகுதியில் (நூற்பா,17) எண்ணில் உம்மைத் தொகைக்குக் கல்லாடமாமூலர் என்னும் தொகைமொழித்தொடர் எடுத்துக்காட்டாக வந்துள்ளது. இவ்வெடுத்துக்காட்டை உரையாசிரியர் மயிலைநாதர் கையாண்டுள்ளார்.
மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாரில் நூறு செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிலுள்ள கருத்துகளை அகவற்பாவால் பாடிய புலவர் பெயரும் கல்லாடர் என்பதாகும். இதன் வழியாக கல்லாடர் என்னும் இலக்கியத்தைத் தன்பெயரால் வழங்கிய செய்தியையும் அறிய முடிகின்றது.
மேலும்,  ஒருவர் செய்த இலக்கியத்திலுள்ள பாடல்களைத் தேர்ந்தெடுத்துச் சுவைக்கும் (ஆராய்ச்சி) முறை பழங்காலத்திலேயே இருந்தது என்பது கல்லாடம் என்னும் இலக்கியம் வாயிலாகப் புலனாகிறது. 
பதினோராந்திருமுறையிலும் கல்லாடதேவர் என்னும் பெயரால் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் கண்ணப்ப தேவர் திருமறம் என்னுஞ் செய்தியைப்பற்றி அகவல் ஒன்றைப் பாடியுள்ளார். 
தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர்களுள் கல்லாடர் ஒருவர் உளர் என்பது அறிஞர் கருத்தாகும். எட்டாந்திருமுறையாகக் கருதப்படும் திருவாசகம், கல்லாடம் என்னும் பெயரில் ஒரு சிவத்தலம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளதும் கருதத்தக்கதாம்.
மேற்கூறியவற்றைத் தொகுத்து உணரின் தமிழிலக்கிய உலகில் கல்லாடர் என்னும் பெயரில் காலந்தோறும் புலவர் பெருமக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் 
என்பதறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com