வேறுபடும் முகம்

உலகில் வாழும் மனிதர்கள் எல்லாநேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

உலகில் வாழும் மனிதர்கள் எல்லாநேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலநேரங்களில் மாற்றமடைகிறார்கள். அவ்வகையில் களவு காலத்தில் தலைவி மேல் காதல் கொண்டிருந்த தலைவனின் மனம் முன்பு போல் இல்லாமல் இருக்கிறது. 
தலைவன் இப்போது பொருள் தேடச் செல்லும் பொருட்டுத் தலைவியைப் பிரியக் கருதிவிட்டான். அச்சூழலில் தலைவியின் மனம் துடியாய்த் துடிக்கிறது. தலைவியின் துயரை உணர்ந்த தோழி, தலைவனின் பிரிவைத் தடுப்பதற்காகத் தலைவனிடம் பேசுகிறாள்.
உண்கடன் வழிமொழிந்து 
    இரக்குங்கால்முகனும் தாம்
கொண்டது கொடுக்குங்கால் 
    முகனும் வேறுஆகுதல்
பண்டும்இவ் வுலகத்து இயற்கை 
    அஃதுஇன்றும்
புதுவது அன்றே புலனுடை மாந்திர்
    தாய்உயிர் பெய்த பாவை 
(கலித்தொகை-22)

அறிவுடைய தலைவனே! ஒருவர் கடன் பெறும்போது நகை மிகுந்து உள்ள முகம் அதைத் திருப்பிக் கொடுக்கும்போது வேறுபடுவது புதியதில்லை. அது எப்போதும் இவ்வுலகத்தில் உள்ள இயற்கைதான். நல்ல நெறியையுடையவர் சொற்களைப் பேசும்போது, தாய் உயிர்பெய்து பெறும் குழந்தையைப் போல அதைக் கருத்துடன் பாதுகாப்பர் என்றார்.  
மேலும், அவள் தலைவனிடம், 'தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறாய். எங்கள் தீவினையால் விளையும் காலம் இது. அதனால் உன்னுடன் தலைவிக்கு உள்ள பிணைப்பு வலிமைபெற வழியில்லை. இந்நிலையில் அவளது வருத்தத்தைக் கூறி உன்னைத் தடுக்க முடியுமா? முடியாது. இதனால்யாம் கூறுவதால் என்ன பயன்' என்கிறாள்.
 களவு காலத்தில் தலைவனானவன் தலைவியின் மீது கொண்டிருந்த பாசம், கற்பு காலத்தில் வேறுபட்ட நிலையை மேற்கண்ட பாடல் உணர்த்துகிறது. குறுந்தொகைப் பாடலொன்றும் களவு கால, கற்பு காலக் காதலை வேறுபடுத்திக் காட்டுகின்றது. தோழியின் கூற்றாக அமையும் இப்பாடல்:
வேம்பின் பைங்காய்என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனீர்   
(குறுந்தொகை -196)

தலைவன் தலைவியை விரும்பிய அக்காலத்தில், தலைவி கொடுத்த வேப்பங்காய் இனித்தது என்றவன், தலைவியுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த காலத்தில் தலைவி கொடுத்த பாரி வள்ளலின் பறம்பு மலையிலிருந்து கிடைக்கப் பெற்ற இனிமையான தண்ணீரைக் குடித்து உவர்ப்புச் சுவையாய் உள்ளது என்கிறான் என்ற கருத்தும் கலித்தொகைப் பாடல் கருத்தோடு ஒப்புநோக்கத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com