ஆழ்வார் பாசுரமும் கம்பர் கவியும்

கம்பர் தரும் கவியின்பம் பேரின்பமே. எனவேதான், 'கம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே' என்று கொண்டாடினர்.
ஆழ்வார் பாசுரமும் கம்பர் கவியும்

கம்பர் தரும் கவியின்பம் பேரின்பமே. எனவேதான், 'கம்பநாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே' என்று கொண்டாடினர். ஆனால், ஆழ்வார்களின் பாசுரக்கண் கொண்டு கம்பரை நோக்கியவர்கள், கம்பர் காப்பியத்தில் தொட்ட இடந்தோறும் ஆழ்வார் பாசுரங்கள் பட்டுத் தெறிப்பதையே பார்த்தனர். 
அமலன் ஆதிபிரான்; அடியார்க்கு 
    என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன்; விரையார் 
    பொழில் வேங்கடவன்;
நிமலன் நின்மலன், நீதிவானவன்;  
    நீள்மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணின் உள்ளன 
    ஒக்கின்றதே! (927)

என்பது திருப்பாணாழ்வாரின் பாசுரம். அவர் அருளிய 'அமலனாதிபிரான்' என்னும் பிரபந்தத்தின் முதற்பாசுரம் இது. 
இனிக் கம்பருடைய பாடல் ஒன்றுக்குச் செல்லுவோம்.
துமிலப் போர்வல் அரக்கர்க்குச் சுட்டினாள்,
அமலத் தொல்பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாத நினைவில் இருந்த அக்
கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள்   (2889)

இராம இலக்குவரோடு போர்புரிவதற்காகக் கரன் அனுப்பிவைத்த பதினான்கு படைத் தலைவர்களுக்கும் - தியானத்தில் இருந்த இராமபிரானைச் சுட்டிக் காட்டுகிறாள் சூர்ப்பணகை என்பதைச் சொல்லும் பாடல் இது. ஆழ்வார்பாசுரம் போலவே கவிகூற்றாக அமைந்தது.


இவ்விரு பாடல்களையும் அடுத்தடுத்து வைத்துப் படித்தால், 'விமலன்' என்னும் ஒரு சொல்லைத் தவிர, ஆழ்வார் பாசுரத்தில் உள்ள அமல(ன்), நிமல(ன்), கமல(ம்) என்னும் அத்தனை சொற்களும் அப்படியே கம்பர் பாட்டிலும் இடம் பெறக் காணலாம். 'அமலன் ஆதிபிரான்' என்னும்ஆழ்வார் வாக்கு 'அமலத்தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்' என்று வெளிப்படக் காண்கிறோம். அவ்வாறே 'நிமலன்' முதலான சொற்களும் இடம் பெறுகின்றன. ஆழ்வார் பாசுரங்களில் கம்பர் படிந்து குடைந்தாடிப் பருகிக் களித்ததன் விளைவு இது. 
இந்த ஒரு பாடல் மட்டுமன்றி முன்னர் விடுபட்ட 'விமலன்' என்னும் சொல்லும் இடம் பெறுமாறு, 'அமனாதிபிரான்' தாக்கத்தில் கம்பர் பாடிய வேறு இரண்டு பாடல்களும் உண்டு. 
இலங்கை காண்படலத்தில் இராமன் பரிவாரங்களுடன் மலைமேல் ஏறிநின்றதனைப் பின்வருமாறு காட்சிப்படுத்துவார் கம்பர். 
துமிலத்திண் செருவின் வாளிப் 
    பெருமழை சொரியத் தோன்றும்
விமலத்திண் சிலையன், ஆண்டோர் 
    வெற்பினை மேயவீரன்
அமலத்திண் கரமும் காலும் 
    வதனமும் கண்ணும் ஆன
கமலத்திண் காடு பூத்த 
    காளமா மேகம் ஒத்தான் (6839)

மற்றொரு பாடல் இராவணன் வதைப்படலத்தில் இராம - இராவணப் போர் தொடங்கிய போது முன் போலவே கவி கூற்றாக இடம் பெறுவது.
துமில வாளி அரக்கன் துரப்பன
விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே,
கமலவான் முக நாடியர் கண்கணை
அமலன் மேனியில் தைத்த அனந்தமால் (9735) 

இவ்விரு பாடல்களும் 'அமலனாதி பிரா'னை நினைவூட்டுவதோடு முன்னர் விடுபட்ட 'விமலன்' என்பதை ஒருமுறைக்கு இருமுறை எடுத்துரைப்பனவாகவும் அமைந்துள்ளன.
இனிக்கம்பருடைய ஒரு பாடலிலேயே நம்மாழ்வாரின் பல பாசுரக்கருத்துகளும் தொடர்களும் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். பாலகாண்டம் -கடிமணப் படலத்தில்  இராமபிரான் கொண்ட திருக்கோலச்சிறப்பினை - ஒப்பனையை விவரிக்கிறது பாடல்:
முப்பரம் பொருளிற்குள் முதலை மூலத்தை
இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமுதந் தன்னையே
ஒப்பனை, ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ?

எல்லாவற்றுக்கும் முதலும் மூலமும் ஆனவன்; இவ்வுலகத்தின் தொடக்கு அறுத்த ஞானியர்க்கு இன்பமயமானவன்; அமிழ்தந்தனக்குத் - தானே ஒப்பானவன். அத்தகைய இராமபிரான் கொண்ட திருக்கோலங்கள் (ஒப்பனை) இத்தன்மையன என்று கூறமுடியுமோ என்பது இதன் கருத்து. 'ஒப்பனை ஒப்பனை' என்பதில் முன்னது ஒப்பானவனை - என்றும் பின்னது அலங்காரத்தை என்றும் பொருள்படும்.
இவ்வாறே திவ்வியப் பிரபந்தத்தின் மூல உரையாசிரியர்களான நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை போன்றோர் கம்பர் பாடலடிகளை உரைநடைப்படுத்தியும் கருத்து வாங்கியும் திருவாய்மொழிக்கு விளக்கம் எழுதிய இடங்களும் உண்டு. 
சான்றாக ஒன்று:  
நம்மாழ்வார் திருவாய்மொழியில்,
நின்றவாறும் இருந்தவாறும்
கிடந்தவாறும் நினைப்பரியன      (5-10-6)

என்று இறைவனது நிற்றல், இருத்தல், கிடத்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுகிறார். முன்னை இரண்டைக் காட்டிலும் அவன் வருணனை வழிவேண்டித் தவங்கிடந்த கிடக்கையில்தான் அவருக்கு அதிக ஈடுபாடு. எனவே இந்த இடத்தை விளக்குகிற ஈட்டுரைகாரர், வருணனை வழி வேண்டு படலத்திலிருந்து கம்பனின் பாடலடி ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்:
'கடற்கரையிலே கிடந்தகிடை. ஒரு கடலோடே ஒருகடல் சீறிக் கிடந்தாப் போலேயிருக்கையாலே; கருணையென்னுங் கடல் கருங்கடலை நோக்கிக் கிடந்ததே என்றானிறே' என்பது அவரின் உரைப்பகுதி.  என்றானிறே, என்றது கம்பரை. 
நம்பிள்ளை இங்குக் கம்பரின் பெயர் சுட்டாவிடினும், 'என்று சொன்னவன் யாவன்' என்னும் வினாவுக்கு விடையாக, 'இந்தக் கம்பன் கவிக்கு அர்த்தம்' என்று எழுதி, இது 
கம்பர் பாட்டிலிருந்து எடுத்துஅடி என்பதை உணர்த்தி விடுகிறார் ஈட்டுரைக்கான அரும்பதவுரைகாரர்.  
இனி, ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்து இருந்தும்  (6-9-3) என்னும் திருவாய்மொழிப் பாசுரத்தின் உரையிலும் மேற்கூறிய கம்பர் பாடலடியை உரைநடைப்படுத்தாது அப்படியே மேற்கோள் காட்டுகிறார். 'கருணையங்கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி என்னும் படியிறே' என்பது அவர் கூற்று.
இங்கும் அவர் கம்பர் பெயரைச் சுட்டாத நிலையில் இம்மேற்கோள், 'கம்பர் பாசுரம்' என்று பெருமதிப்புடன் குறிப்பிடுகிறது சீயர்அரும்பதம். ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கே பாசுரம் என்று பெயர் வழங்கும். பிறவற்றை இச் சொல்லால் குறிக்கும் மரபு வைணவத்தில் இல்லை. இதனை நோக்க அரும்பதவுரைகாரரின் இக்குறிப்பு, வைணவர் சார்பில் கம்பனுக்கு அளிக்கப்பட்ட உயர்ந்த அங்கீகாரமே என்று தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com