இந்த வாரம் கலாரசிகன் - 06-11-2023

பிரதமர் நரேந்திர மோடி, தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' புத்தகத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருப்பதன் மூலம், எழுத்தாளர் சிவசங்கரியின் உழைப்புக்கு தேசிய அங்கீகாரம் தந்திர
இந்த வாரம் கலாரசிகன் - 06-11-2023

தில்லிக் கம்பன் கழகத்தைத் தொடர்ந்து இந்தியத் தலைநகரில் தமிழ் வளர்க்க ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி கற்பகவிநாயகத்தின் வழிகாட்டுதலில் இன்னோர் அமைப்பு உருவாகி இருக்கிறது - 'உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம்'. இப்படியொரு முயற்சி முன்னெடுக்கப்படும்போது தலைநகரில் இருந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தொடக்க விழாவுக்குப் போயிருந்தேன். 
மேனாள் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்த அந்த இலக்கியக் கழகத்தின் நிகழ்ச்சியில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கே.வி. விஸ்வநாதன் மட்டுமல்லாமல், சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதிகள் எஸ். நாகமுத்து, எம். சத்தியநாராயணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். பாரத குடியரசின் தலைமை வழக்குரைஞர் இரா. வெங்கட்ரமணியும் பங்கு பெற்றார். 


தமிழுக்கு மிக அதிகமாகத் தொண்டாற்றியவர்களின் பட்டியலைத் தயாரித்தால், அதில் நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இருப்பார்கள். தமிழின் முதல் புதினம் எழுதிய பெருமைக்குரிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஒரு மாவட்ட நீதிபதி. தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப் பிள்ளை, கா. சுப்பிரமணிய பிள்ளை, 'ரசிகமணி' டி.கே.சி, வ.உ.சி. என்று தமிழுக்கு அரும்பங்களிப்பு நல்கிய பலர் வழக்குரைஞர்கள். ராஜாஜியும், வ.வே.சு. ஐயரும்கூட வழக்குரைஞர்கள்தான்.
இன்று உலகளாவிய அளவில் கம்பன் கழகங்கள் தொடங்கப்பட்டு, கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கப்படுகிறது. கம்பன் கழகங்களின் வளர்ச்சிக்கு உரமிட்டவர்களில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த மு.மு. இஸ்மாயிலையும், எஸ். மகராஜனையும் எப்படி மறந்துவிட முடியும்? இப்போதும் கம்பன் கழக மேடைகளில் தங்கள் தமிழால் ரசிகர்களைக் கட்டிப்போடும் பலர், வழக்குரைஞர்கள் என்பதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இவை எல்லாவற்றையும்விட, தமிழுக்குப் பல புதிய சொற்களை வழங்கி வளப்படுத்திய பெருமை நீதித்துறையைத்தான் சாரும். பல்கலைக்கழகங்களும், ஊடகங்களும் முன்னெடுக்காத அந்தப் பணியை நீதித்துறை மிக இயல்பாகவே செய்து நூற்றுக்கணக்கான புதிய சொற்களைத் தமிழுக்கு வழங்கி இருக்கிறது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இலக்கியக் கழக (விரைவில் அதை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் தமிழ் இலக்கியக் கழகம் என்று பெயர் மாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்போம்) தொடக்க விழா நிகழ்ச்சியில் நான் பார்த்து வியந்தது என்னவென்றால், அந்த அரங்கம் கருப்பு அங்கி அணிந்தவர்களால் நிரம்பி இருந்தது என்பதுதான். பல இளம் வழக்குரைஞர்கள் ஆர்வத்துடன் அங்கே குழுமி இருந்தனர்.
ஐயா கற்பகவிநாயகத்தின் வழிகாட்டுதலில், இளம் வழக்குரைஞர்கள் நெடுமாறன், செல்வகுமாரி நடராஜன், மனோஜ் தங்கராஜ் உள்ளிட்டோரால் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சி அது. தொடக்கமே உற்சாகமூட்டுவதாக இருந்தது.

==========================

பிரதமர் நரேந்திர மோடி, தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' புத்தகத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருப்பதன் மூலம், எழுத்தாளர் சிவசங்கரியின் உழைப்புக்கு தேசிய அங்கீகாரம் தந்திருக்கிறார். இப்போதுபோல போக்குவரத்து வசதிகளும், தொழில்நுட்ப உதவிகளும் இல்லாத காலத்தில் இந்தியா முழுவதும் தன்னந்தனியாகப் பயணித்து, எல்லா மாநிலங்களிலும் உள்ள எழுத்தாளர்களைச் சந்தித்து, உரையாடி, பேட்டி கண்டு, அந்தந்த மொழியில் உள்ள சிறந்த சிறுகதைகளை இணைத்து உருவாக்கிய அரிய தொகுப்புதான் சிவசங்கரியின் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு'. இது குறித்து விரிவாக ஏற்கெனவே நான் பலமுறை எழுதிவிட்டேன்.
தமிழில் எழுதப்பட்டு, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் எழுத்தாளர் சிவசங்கரியின் வாழ்நாள் சாதனை, பிரதமரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும், அவரால் பாராட்டப்பட்டிருப்பதும் சிவசங்கரிக்கு இதுவரை வழங்கப்படாத கலைமாமணி, சாகித்திய அகாதெமி விருதுகளைவிட உயர்ந்தது. அவருக்கு வாழ்த்துகள்!

======================

தில்லியில் ஜே.என்.யூ. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சாந்திஸ்ரீ பண்டிட்டை சந்திக்கச் சென்றிருந்தேன். பேராசிரியர் அறவேந்தன்தான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். சந்திப்பு முடிந்து நான் திரும்பும்போது, அவர் என்னிடம் தந்த புத்தகம் டி.கே. ஜயராமன் எழுதிய 'குஜராத்திச் சிறுகதைகள்'.
குஜராத் மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் டி.கே. ஜயராமன். தனது அரசுப் பணியுடன் தொடர்ந்து தமிழ்ப் பணியும் செய்து வந்த டி.கே. ஜயராமன், குஜராத்தி மொழியைப் படித்துப் புலமை பெற்றது மட்டுமல்லாமல், பல முன்னணி குஜராத்தி எழுத்தாளர்களின் படைப்புகளை சாகித்திய அகாதெமிக்காகத் தமிழில் மொழிபெயர்த்தவர்.


டி.கே. ஜயராமன் மொழிபெயர்த்த குஜராத்திச் சிறுகதைகளை, தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் 'மஞ்சரி' இதழில் பிரசுரித்தார் அதன் ஆசிரியராக இருந்த தி.ஜ.ர. சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து 'குஜராத்திச் சிறுகதைகள்' என்கிற தலைப்பில் தொகுப்பை வெளிக்கொணர்ந்தபோது அதற்கு அணிந்துரை வழங்கி சிறப்பித்தவரும் தி.ஜ.ர. என்றால், அதற்குமேல் அதைப்பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது...
'ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவித அமைப்பு. ஒன்றுபோல் இல்லை மற்றொரு பாத்திரம். அருமையான நடை; அருமையான கதைகள்' என்று முதற்பதிப்பிற்கான தனது அணிந்துரையை முடித்திருப்பார் தி.ஜ.ர. அன்றைய 'மஞ்சரி' ஆசிரியர் முன்மொழிந்ததை, இன்றைய 'தினமணி' ஆசிரியர் வழிமொழிகிறேன்!

========================

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்து படித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தது கவிஞர் நந்தவனம் சந்திரசேகரனின் இந்தக் கவிதை - தொகுதி மாறிமாறி போட்டியிட்டார் அமைச்சர் அதே நிலையில் மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com