மலைபடுகடாம் சுட்டும் இசைக்கருவிகள்!

பத்துப்பாட்டு நூல்களுள் பத்தாவது நூல் மலைபடுகடாம். 583அடிகளைக் கொண்ட இந்த நூல் ஆசிரியப்பாவில் அமைந்த நெடும்பாடல். இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் இந்நூலை இயற்றியுள்ளார்.
மலைபடுகடாம் சுட்டும் இசைக்கருவிகள்!


பத்துப்பாட்டு நூல்களுள் பத்தாவது நூல் மலைபடுகடாம். 583அடிகளைக் கொண்ட இந்த நூல் ஆசிரியப்பாவில் அமைந்த நெடும்பாடல். இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார் இந்நூலை இயற்றியுள்ளார்.

நவிர மலையை ஆட்சி செய்த நன்னன் சேய் நன்னன் என்னும் மன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெறுவதற்காக ஒரு  கூத்தர் கூட்டம் செல்கிறது. அவர்களைப் பார்த்து, பரிசு பெற்றுத் திரும்பிய கூத்தரில் ஒருவன் பாடுவது போல் இந்தப் பாடல் அமைந்துள்ளது. கூத்தருக்கு வழிகாட்டும் வகையில் அமைந்துள்ள  காரணத்தால் இதனைக் கூத்தராற்றுப்படை என்றும் கூறுவர்.

இந்நூலில் குழல், குறும்பரந்தூம்பு, தூம்பு, கோடு, தட்டை, பாண்டில்,  முழவு, ஆகுளி, எல்லரி, பதலை, பேரியாழ் என்னும் இசைக்கருவிகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.

குழல்: குழாய் போல் இருக்கும் காரணத்தால் இது குழல் என்னும் பெயர் பெற்றது. மூங்கில், புல்வகைத் தாவரம். எனவே மூங்கிலைப் புல் என்றும் குறிப்பிடுவர். புல் என்னும் மூங்கிலால் ஆக்கப்பட்ட குழல் என்று குறிக்கும் வகையில் புல்லாங்குழல் என்றும் கூறுகின்றனர். 

குறும்பரந்தூம்பு: தூம்பு என்பது வாயகன்ற அடிப்பாகத்தைக் கொண்ட குழல் வகை. அடிப்பகுதியின் பரந்த தன்மையைக் குறிப்பிடுவதற்கே பரந்தூம்பு என்று இதனைக் குறிப்பிட்டுள்ளனர். வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர்க் குழாயையும் தூம்பு என்று குறிப்பிடுவர். நாகசுரம் போன்ற அமைப்பில் சிறிய அளவில் அமைந்திருக்கும் இக்கருவியைக் குறும்பரந்தூம்பு என்று தெரிவித்துள்ளனர்.

தூம்பு: நீண்டு இயல்பான அளவில் அடிப்பாகம் வாயகன்று இருக்கும் ஊது கருவியைத் தூம்பு என்று குறிப்பிட்டுள்ளனர். கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பு என்று இதனை மலைபடுகடாம் பாடியுள்ளது. யானையின் பிளிறல் ஒலி போல் பேரொலியை எழுப்புவதால் இதனைக் களிற்று உயிர்த்தூம்பு என்று கூறியுள்ளார்.

கோடு: கோடு என்பது அடிப்பாகத்தில் வாயகன்றதாய் மேல்நோக்கி உயர்ந்ததாய் அமைந்திருக்கும். மின் இரும் பீலி அணித் தழைக் கோடு என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார் பெருங்கெளசிகனார். மயிற்பீலியைக் கட்டி இதில் தொங்கவிடப்பட்ட காரணத்தால் இவ்வாறு பாடியுள்ளார். குழலின் இசை மெல்லியதாய் இருக்கும். தூம்பின் இசை மத்திமமாய் இருக்கும். கோடு என்னும் கொம்பின் இசை வன்மையாய் ஒலிக்கும். 

தட்டை: தட்டை என்பது இசை வடிவத்தை உணர்த்தும் இசைக் கருவி. இதனைத் தண்ணுமை என்றும் குறிப்பிடுவர்.  தணிந்த ஒலி கொண்ட காரணத்தால் தண்ணுமை என்றும் ஒரே மாதிரியான ஒலியை வழங்குவதால் தட்டை என்றும் 
குறித்தனர்.

பாண்டில்: பாண்டில் என்பது தாளக்கருவியைக் குறிக்கும். இது வார்ப்படமாக வெண்கலத்தை உருக்கிச் செய்யப்படுவது என்பதை உணர்த்தும் வகையில் நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில் என்று பாடியுள்ளார். 

முழவு: இதன் மேல் பகுதியில் உள்ள தோலானது, உறுதியான நரம்புகளால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். எனவே திண் வார் விசித்த முழவு என்று பாடியுள்ளார். இது பேரொலி எழுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் அளவில் பெரிய கருவி. இதன் ஒலியானது முழங்கும் ஒலியாக இருக்கிற காரணத்தால் இதனை முழா என்றும் குறிப்பிடுவர். மேற்புறம் அகன்றிருப்பதை முழவு, முரசு என்றும் மேற்புறம் ஒடுங்கிக் குடம் போல் இருப்பதைக் குடமுழா என்றும் கூறுவர்.

ஆகுளி: இது முழவில் சிறிய வகையிலான காரணத்தால் இதனைச் சிறுபறை என்றும் கூறுவர். உள்ளிருந்து ஒலி எழுப்பும் காரணத்தால் இதனை ஆகு, உள் என்று அறிவிக்கும் வகையில் குறிப்பிட்ட பெருங்கெளசிகனார், முழவின் வகை சார்ந்தது என்ற காரணத்தால் இது பற்றிய தெளிவினை வழங்கவில்லை.

எல்லரி: பறையும் சலங்கையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு கைக்கருவி. கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி என்று இதனை மலைபடுகடாம் தெரிவிக்கிறது.

பதலை: மத்தளத்தைப் போல் தோலால் ஒரு பக்கத்தில் மட்டும் கட்டப்பட்டு, நடுப்பகுதியில் கண் போன்று அமைக்கப்பட்டிருக்கும் தோல் கருவி. பதமாக ஒலி எழுப்பும் தோல் கருவி என்ற காரணத்தாலும் அதிர்வினைக் கட்டுப்படுத்தி மாத்திரை அளவுக்குள் ஒலிப்பதாலும் இதனை நொடி தரு பாணிய பதலை என்று குறிப்பிட்டுள்ளார். 

பேரியாழ்: நரம்புகளை முறுக்கிக் கட்டுவதற்குத் தேவையான கட்டைகளையும் ஆணிகளையும் கொண்டு யானைத் தந்தத்தைத் தாங்கு கட்டை போல் கொண்டது என்று பதினெட்டு அடிகளில் பேரியாழின் அமைப்பினையும் அது வழங்கும் இசையையும் பாடியுள்ளார்.

திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப, பண் அமைத்து,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு,
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்  (111)

என்னும் அடிகளில் இசைக் கருவிகள் பற்றியும் அவற்றை இசைப்போர் குறித்தும் பெருங்கெளசிகனார் தெரிவித்துள்ளார். 

இசை பற்றிய தெளிவு பெற்ற அவர், மலைபடுகடாம் நூலின் தலைப்பிலேயே ஒலி என்னும் இசையைத் தந்துள்ள தன்மையும் திருமழை எனத் தொடங்கி நிறைவுப் பகுதியில் மழையை உவமையாக்கி நிறைவு செய்துள்ள தன்மையும் பெருவியப்பிற்கு உரியவையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com