நாடுஞ் சொல்லான்; பேருஞ் சொல்லான்! 

நள்ளி என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலைநாட்டிற்கும் தலைவன்.
நாடுஞ் சொல்லான்; பேருஞ் சொல்லான்! 
Updated on
2 min read

நள்ளி என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  தோட்டி என்னும் மலைக்கும் அதனைச் சார்ந்த மலைநாட்டிற்கும் தலைவன். சிறுபாணாற்றுப் படையில் வள்ளல் எழுவரின் கொடைச் செயல்கள் கூறுமிடத்து,
... கரவாது
நட்டோர் உவப்ப,  நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும்  
(104 - 107)  
என்று அவ்வெழுவருள் ஒருவனாக இவனைக் குறித்து இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியிருக்கிறார். 
இவ்வாறே குமணனைப் பாடிய பெருஞ்சித்திரனார் பாட்டிலும் வள்ளல் எழுவரைப் பற்றிப் பேசுகையில்,
... ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
கொள்ளார் ஓட்டிய நள்ளியும்    
(புறநா. 158: 13-16)
என்று இவனது ஈகையும் வீரமும் ஒருசேரக் கூறப்பட்டுள்ளன.

இவன் பெயர் கண்டீரக் கோப்பெரு நற்கிள்ளி எனவும் வழங்கும். சில பிரதிகளில் இப்பெயர் கண்டிற்கோப்பெருநற்கிள்ளி என்று காணப்படுவதாகவும் கூறுவார் டாக்டர் உ.வே.சாமிநாதையர். இவனைக் குறித்து வன்பரணரும் பெருந்தலைச்சாத்தனாரும் பாடியவை புறநானூற்றில் இடம்  பெற்றுள்ளன.
அவற்றுள் வண்பரணர் பாடிய  பாடல்கள் இரண்டும் (148, 149) அவனை நேரிற்கண்டு பழகி அவனது விருந்தோம்பற்சிறப்பையும் கொடைத்திறத்தையும் புகழ்ந்து அவனை முன்னிலைப்படுத்திப்பாடுவனவாக அமைந்துள்ளன.
"கறங்குமிசை அருவி' எனத் தொடங்கும் 148-ஆம் பாடலில், "நீ இரவலர்க்கு ஒரு குறையுமின்றிப் பரிசளித்தலால் பீடில்லாத வேந்தரை, அவர் செய்யாதவற்றைச் செய்ததாகப் புகழ்ந்து பாடுதலை எம் நாக்கு அறியாததாயிற்று' என்கிறார்.
... பரிசில்முற் றளிப்பப்
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று;எம் சிறுசெந் நாவே!
என்பது பாடல்.  

இதனையடுத்த பாடலில்,  நள்ளியே! நீ எம்மவர்க்குப் பசிதீர உணவளித்துப் பரிசில் நல்கிப் பாதுகாத்தலால் அவர்கள் ஆடல் பாடல்களை அடியோடு மறந்தனர். மேலும் காலையில் இசைத்தற்குரிய மருதப் பண்ணை மாலையிலும் மாலைக்குரிய செவ்வழிப் பண்ணைக் காலையிலுமாக முறைமாற்றி இசைக்கலாயினர் என்று அவன் "புரவுக்கடன் பூண்ட வண்மை'யைப் போற்றிக் கூறுகிறார்.

நள்ளி! வாழியோ! நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி,
வரவுஎமர் மறந்தனர், அது நீ
புரவுக் கடன்பூண்ட வண்மையானே!   
(புறநா.149)
என்பது அப்பொருளமைத்துப் பாடிய அரிய பாடலாகும்.

இங்ஙனம் தாமான தன்மையில் நள்ளியைப் புகழ்ந்து பாடிய வன்பரணர் 150-ஆம் பாடலில் நள்ளியை இன்னான் என்று அறியாத ஓர் இரவலன் கூற்றில் வைத்துப் பிறரான தன்மையில் வேறொரு கோணத்தில் புகழ்ந்து பாடியிருக்கிறார். 

பாடற்கருத்து இதுதான்: கூதிர்காலத்துப் பருந்தினது சிறகைப் போன்ற சிதைந்த ஆடையுடன் நாடெங்கும் சுற்றியும் தீராத வருத்தமும் உலைவும் உடையவனாக என்னை மறந்து ஒரு பலா மரத்தடியில் அமர்ந்து இருந்தேன். அப்போது மான் கூட்டத்தை வேட்டையாடித் தொலைத்த, செல்வத் தோன்றலாகிய வல்வில் வேட்டுவன் ஒருவன் அங்கே வர, அவனைக் கண்டு தொழுது நான் எழமுயன்றபோது, கைகவித்து என்னை இருக்கச் செய்தான். 

தன்கையிலிருந்த தீக்கடை கோலால் தீமூட்டிக் காட்டிடைக் கொன்ற மானின் கொழுவிய தசையைச் சுட்டு "தின்பீராக' என்று எனக்கும் என் சுற்றத்தார்க்கும் கொடுத்தான். அதனால் எங்கள் பசித்தீத் தணியவும் அவனிடம் விடை பெறத் தொடங்கினோம். 

அவனோ "என்னிடம் தருவதற்கு வீறுசால் அணிகலன்கள் வேறு எதுவுமில்லை' என்று சொல்லித் தன் மார்பிற் பூண்டிருந்த முத்தாரத்தையும் முன் கையிலிருந்த கடகத்தையும் தந்தான். "நும் நாடுயாது?' என்று கேட்க, அவன் எதுவும் கூறவில்லை; "நீ யாரோ' என்ற கேள்விக்கும் அவன் விடை கூறவில்லை.

"மிக்க புகழையுடைய தோட்டி என்னும் பெரிய மலைநாட்டுக்குரிய தலைவன்' என்றும்  "பெயர் நள்ளி' என்றும் அவன் ஊரும் பேரும் பிறர் சொல்லக் கேட்டே நாங்கள் தெரிந்து கொண்டோம் என்கிறான் அந்த இரவலன். இத்துடன் பாடல் முடிகிறது.

நாடறிந்த கொடையாளியாய் வாழ்ந்தவன் நள்ளி. அதனால் கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், நத்தத்தனார் போன்ற பெரும்புலவர்களாலும் தம் பாடல்களில் பெயர் குறிக்கப் பெற்ற பெருமைமிக்கவன். எனினும் தன்பெருமையைத் தானே சொல்ல நாணி - இரவலர் கேட்டும் சொல்லாதவனாய்ச் சென்றான் அவன்.

எந்நா டோஎன நாடுஞ் சொல்லான்;
யாரீ ரோஎனப் பேருஞ் சொல்லான்
என்பன இப்பாடலின் உயிர்நிலையான 
அடிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com