சமரசமற்று வாழ்ந்த பெருந்தகை!

தமிழுலகில் "நாமக்கல் கவிஞர்' என்று அறியப்படும் இராமலிங்கம் பிள்ளை தமிழில் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடிய புகழ்பெற்ற கவிஞர்; விடுதலைப் போராட்ட வீரர்; நாவலாசிரியர்; நாடக ஆசிரியர்; சிறந்த ஓவியர்;
சமரசமற்று வாழ்ந்த பெருந்தகை!
Published on
Updated on
2 min read

தமிழுலகில் "நாமக்கல் கவிஞர்' என்று அறியப்படும் இராமலிங்கம் பிள்ளை தமிழில் தேசிய இயக்கப் பாடல்களைப் பாடிய புகழ்பெற்ற கவிஞர்; விடுதலைப் போராட்ட வீரர்; நாவலாசிரியர்; நாடக ஆசிரியர்; சிறந்த ஓவியர்; தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர். இப்படிப் பற்பல பெருமைகளை உடையவர்.
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது', "தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா', "ஆடுராட்டே சுழன்றாடு ராட்டே' என்றெல்லாம் அவர் எழுதிய கவிதை வரிகள் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
நாமக்கல் கவிஞர் காங்கிரஸ் ஆதரவாளர். ராஜாஜியின் கொள்கைகளைப் பின்பற்றியவர். 1931}இல் ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் பங்கெடுத்து ஓராண்டு சிறை சென்றார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார். 1956, 1962 ஆண்டுகளில் தமிழக மேல்சபை உறுப்பினராகச் செயல்பட்டார்.
நாமக்கல் கவிஞர் மிகச் சிறந்த ஓவியரும் கூட. ஸ்ரீஅரவிந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் உருவங்களை ஓவியங்களாகத் தீட்டினார். அன்னிபெசன்ட் அம்மையாரைச் சந்தித்து தன் ஓவியங்கள் சிலவற்றைக் கொடுத்து ஆசி பெற்றார். ஓவியராகவே வாழ்க்கையைத் தொடங்கியவர் நாமக்கல் கவிஞர். "நாட்டு விடுதலையில் நான் கொண்ட தீராத ஆர்வமே என்னை ஓவியத்திலிருந்து காவியத்தற்கு இழுத்தது' என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமது சொற்பொழிவுகள் மூலம் நாட்டு மக்களிடம் சுதந்திர வேட்கையைத் தோற்றுவித்தார். முதலில் திலகரால் ஈர்க்கப்பட்டுத் தீவிரவாதியாக இருந்தாலும், பின்னர் காந்தியின் சொற்பொழிவுகளைக் கேட்டு மனம் மாறினார். காந்தி பக்தராகவே மாறிவிட்டார். காந்தியைத் தன் மாமனார் வாழ்ந்த கரூருக்கு அழைத்துவந்து அங்கு அவ்வூர் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்டச் செலவுக்கு உதவும் வகையில் பணமுடிப்புத் தர எண்ணினார். அதற்கு காந்தியும் ஒப்புக்கொண்டார்.
ஆனால் ராஜாஜி காந்தியின் உடல் நலம் கருதி கரூர்ப் பயணத்தை ரத்து செய்தார். கொதித்துப் போன கவிஞர் காந்தியை நேரில் சந்தித்து "வாக்குறுதியை மீறலாமா' எனக் கேட்டார். ராஜாஜி தன் உடல்நலன் கருதிச் செய்த செயலைப் பின்னர்தான் காந்தி அறிந்தார். "வாக்குறுதி வாக்குறுதிதான்' என்று சொன்ன காந்தி குறிப்பிட்ட நாளில் கரூர் சென்று பணமுடிப்பைப் பெற்றுக்கொண்டார்.
கதர் விற்பனையில் கவிஞர் ஈடுபட்டதுண்டு. கவிஞரும் அவர் மனைவி சுந்தரத்தம்மாளும் இணைந்தே கதரைக் கூவி விற்றார்கள். சாகித்திய அகாதெமி உறுப்பினராக இருந்தார் கவிஞர்.
அகாதெமியின் முதல் கூட்டத்தில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் நேருவிடம் நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தியபோது, "சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு பாடல்கள் புனைந்த இவருக்கு இணையாக காந்தியத்தைப் பற்றியும் காந்தியடிகளைப் பற்றியும் எந்த மொழிக்காரரும் பாடல்கள் இயற்றவில்லை' என்று சொன்னார். அதைக் கேட்டு வியந்தார் நேரு.
நாமக்கல் கவிஞரின் கவிதைகளில் பெரிதும் ஈடுபட்டார் ராஜாஜி. "திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது. காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராகத் தோன்றியது' என ராஜாஜி குறிப்பிட்டிருக்கிறார்.
பாரதியாரைச் சந்தித்து அவர்முன் தன் கவிதையைப் பாடிக் காட்டினார் நாமக்கல் கவிஞர். "பலே பாண்டியா! நீர் ஒரு புலவன், ஐயமில்லை' என பாரதியார் அவரை மனமாரப் பாராட்டினார்.
"ஆடுராட்டே சுழன்றாடு ராட்டே' என்ற கவிஞரின் பாடலை நாடக மேடையில் ஒலிக்கச் செய்த டி.கே. சண்முகம், "மேடைகளில் மட்டுமா அந்தப் பாடல் சுழன்றாடியது? தமிழர் இதயமெல்லாம் சுழன்று சுழன்று ஆடியது' என்று பாராட்டினார். "நாமக்கல் கவிஞர் ஆடுராட்டே சுழன்றாடு ராட்டே என்ற பாட்டின் மயக்கத்தில் தமிழ்நாட்டையே சுழன்று ஆடச் செய்தவர்' எனப் பாராட்டினார் எழுத்தாளர் கல்கி.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் நடந்தபோது, வழிநடைப் பாடலாக கவிஞரின் "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்ற பாடல் பாடப்பட்டது.
அந்தப் பாடலைக் கேட்டு, "பாரதியார் இல்லாத குறையை நீங்கள் தீர்த்தீர்கள்' என்றார் ராஜாஜி. "சுதந்திரச் சங்கு' பத்திரிகை ஆசிரியர் "சங்கு' கணேசன், அந்தப் பாடலை லட்சக்கணக்கில் அச்சிட்டு இலவசமாக வினியோகித்தார்.
நாமக்கல் கவிஞர் எழுதிய "மலைக்கள்ளன்' என்ற புதினம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் அதே பெயரில் திரைப்படம் ஆகியது.
"தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வின் "என் சரித்திரம்' போல், நாமக்கல் கவிஞரின் "என் கதை'யும் தமிழின் மிக முக்கியமான தன்வரலாற்று நூல்.
திருக்குறள் ஆய்வு நூல்கள், நாடகங்கள், செய்யுளாலேயே அமைந்த ஒரு நாவல் என அவர் எழுதியவை இன்னும் பல.
தமிழக அரசு 1998}இல் இராமலிங்கம் பிள்ளையின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது. அவருக்கு 'அரசவைக் கவிஞர்' பதவி வழங்கியது.
1956}ஆம் ஆண்டிலும் 1962}ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் கவிஞர்.
மத்திய அரசு 'பத்ம பூஷன்' விருது கொடுத்து இவரைப் பாராட்டியது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகக் கட்டடத்திற்கு நாமக்கல் கவிஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காந்தி அன்பரான நாமக்கல்லார், சமரசம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த பெருந்தகை. அவரது கொள்கைகளைப் பின்பற்றுவதால் பாரதம் மேன்மையுறும்.
அக். 19 நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com