கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு

மணிவாசகர் "கண்ணப்பர் அன்புடையவரும் அல்லர்; எனவே அன்பரும் அல்லர்' என்று புதிர் போட்டார்.  அந்தப் புதிரினை அவரே பின்வருமாறு விடுவித்தார்:
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு


மணிவாசகர் "கண்ணப்பர் அன்புடையவரும் அல்லர்; எனவே அன்பரும் அல்லர்' என்று புதிர் போட்டார்.  அந்தப் புதிரினை அவரே பின்வருமாறு விடுவித்தார்:

"எனக்கு ஒப்பார் யாருமே இல்லை' என்று ஒருவகையான இறும்பூது எய்தினார் மணிவாசகர். அது இறும்பூதுதானா? கண்ணப்பராகிய அன்பின் பெருமையை  சிறப்பைப் புலப்படுத்தவே இத்தகைய இறும்பூது அவருக்கு ஏற்பட்டது. எனவே, "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு' என்று பாடுகிறார்.

ஆதிசங்கரர், தனது "சிவானந்தலஹரி'யில் கண்ணப்பரை "பக்தாவதம் சாயதே' என்று போன்றுகின்றார். அதாவது "அன்புடையாரில் ஒப்பற்றவர்'. இத்தகைய பேறு யாருக்குக் கிட்டும்?

கண்ணப்பர் தவம் செய்யவில்லை; ஆனால், அவர் செய்தனவெல்லாம் தவம் ஆயின. அப்படித் தவமே செய்யாமல், செய்தனவெல்லாம் தவமாக வேண்டுமாயின் சித்தம் சிவமாக இருக்க வேண்டும். கண்ணப்பரின் சித்தம் சிவமாயிற்று; அதனால் அவர் செய்தனவெல்லாம் தவமாயிற்று.

"சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்' என்று திருவாசகத்தில் (திருத்தோணாக்கம்  6) மணிவாசகர் குறிப்பிடுகிறார். எனவே, கண்ணப்பர் தமது திருவாயால் ஏந்திவந்து திருக்காளத்தியப்பராகிய சிவலிங்கப்பெருமான் மீது உமிழ்ந்த பொன்முகலியாற்றின் நீர், அப்பெருமானுக்கே உரிய அபிடேக நீராயிற்று என்றால் கண்ணப்பராகிய அன்பின் சிறப்பை என்னென்பது!

"பொருவில் அன்புருவம் ஆயினார்' (ஒப்பில்லாத அன்பின் திருவுருவமே ஆனார்) என்று சேக்கிழார் பெருமான் கண்ணப்பரைப் போற்றுகிறார். அன்பே கண்ணப்பர்; அன்பின்மைக்கு நானே எடுத்துக்காட்டு. "அன்பின்மையே யான்' என்று கூறி கண்ணப்பரின் பேரன்பைப் புலப்படுத்தினார் மணிவாசகர். 

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பு தமக்கு இல்லாததால், வேறு வழியின்றிச் சிவபெருமான் தம்மை ஆட்கொண்டருளியதாக மணிவாசகர் பாடுகின்றார். இதனால் "அன்பு' என்ற சொல்லின் பொருளே "கண்ணப்பர்' என்றும், "கண்ணப்பர்' எனும் சொல்லின் பொருளே "அன்பு' என்றும் பின்வருமாறு அருளியுள்ளார் மணிவாசகர்:

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை 
                                                                                 கண்டபின்
என்அப்பன் என்ஒப்பில் என்னையும் 
                                                            ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்து என்னை வா என்ற 
                                                                   வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் 
                                                                              கோத்தும்பீ.
                          (திருவாசகம், திருக்கோத்தும்பி  4)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com