போரில் வெற்றியும்  ஊர்ப்பெயர் மாற்றமும்

தமிழ்மொழியில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன என்பர். அவற்றுள் ஒன்று பரணி.
போரில் வெற்றியும்  ஊர்ப்பெயர் மாற்றமும்

தமிழ்மொழியில் 96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளன என்பர். அவற்றுள் ஒன்று பரணி. பெரும்பாலும் தோற்றுவிட்ட அரசன் அல்லது தோற்றுப்போன நாட்டை முன்னிலைப்படுத்தி பரணி இலக்கியத்தின் பெயர் அமைவது மரபு. 
பரணிவகை இலக்கியங்களில் முதன்மையான இடத்தைப் பெறுவது "கலிங்கத்துப் 
பரணி'. இந்நூலை இயற்றியவர் ஜெயங்கொண்டார். "பரணிக்கோர் ஜெயங்கொண்டார்' என்று அவரைப் புகழ்வது உண்டு. கி.பி.11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் குலோத்துங்க சோழன், கலிங்க நாட்டின் மீது படையெடுத்து, வெற்றி வாகையும் சூடினான். 
கலிங்கத்துப் பரணி, சோழனின் வெற்றியைப் பலபடப் பேசுகிறது. படை நடத்திச் சென்றது, போர்க்களக் காட்சி, வெற்றி பெறுதல் ஆகியன கலிங்கத்துப்பரணியில் விரிவாக இடம்பெற்றுள்ளன. ஆனால் கலிங்கத்துப் பரணியில் இடம் பெறாத ஒரு முக்கியச் செய்தியை வெளிப்படுத்துகின்ற ஒரு கல்வெட்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் (அன்றைய கலிங்க தேசத்தின் ஒரு பகுதி) உள்ளது. 
விசாகப்பட்டினத்தில் இராமகிருஷ்ணா கடற்கரைப் பகுதியில், விவேகானந்தர் சாலையில் உள்ள இந்திய அரசுக்குச் சொந்தமான கடற்படை அருங்காட்சியகத்தில், திறந்த வெளியில் ஒரு வேப்பமரத்தின் அடியில் உள்ளது இக்கல்வெட்டு.
கல்வெட்டுச் செய்தி :
ஸ்வஸ்திஸ்ரீ ஸகரையாண்டு ஆயிரத் 
தொரு நூற்றெழு பத்தரண்டாவதில் வீரனா  ர
சிங்க தெவற்கி யாண்டு யரு வதில்  
                                                                                பந்தலாயிதி
க்கொல்லத்து கண்டந் சந்திரைய செட்டியார் 
                                                                                           தர்ம(ம்)
வி(ஸா)கப்பட்டினமாந குலொத்துங்கசொழ
                                                         பட்டணத்தில் க(ருமா)
ணி(க்)க ஆழ்வாற்கு சநிவாரமண்டபம் 
                                 கட்டிவி(ச்) சார் சந்திரசெட்டியார்.
இக்கல்வெட்டு ஆறு வரிகளை உடையது. ஒவ்வொரு வரியிலும் அடிக்கோடு உள்ளது. ஆறாவது வரி சிமென்ட் பூச்சில் சற்று மறைந்துள்ளது. விசாகப்பட்டினத்தின் பெயரை 11ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழபட்டணம் என்று குலோத்துங்க சோழனின் படைத்தளபதி மாற்றினான் என்று ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் எழுதப்பட்ட குறிப்பு அட்டைகள் கல்வெட்டின் இருபுறத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு கூறுவது யாது?
ஸ்வஸ்தி ஸ்ரீ 22 ஆண்டு ஆயிரத்தொரு நூற்று எழுபத்திரண்டாவதில் வீரநரசிங்க தேவர்க்கு (வீரநரசிம்மதேவா) ஆண்டு 15ஆவதில் பந்தலாயினி கொல்லத்து கண்டந் சந்திரைய செட்டியார் தர்மம் விசாகப்பட்டினமான குலோத்துங்க சோழபட்டணத்தில் கருமாணிக்க ஆழ்வாருக்கு சனிவார மண்டபம் கட்டுவித்தார் சந்திரன் செட்டியார்.
கேரளப் பகுதியில் முற்காலத்தில் வாழ்ந்து வந்த வணிகப் பெருமக்கள் (தமிழர்) கலிங்கநாடு வரை சென்று வாணிகம் செய்து வந்தனர் என்பதை இக்கல்வெட்டு புலப்படுத்துகிறது.
கொச்சி மாவட்டத்தில் பந்தளாயினி அருகே உள்ள "கொல்லம்' எனும் ஊரைச் சேர்ந்த சந்திரன் செட்டியார் எனும் வணிகப்பெருமகனார், விசாகப்பட்டினத்தில் இருந்த "கருமாணிக்கம் ஆழ்வார்' எனும் பெருமாள் கோயிலுக்கு 13ஆம் நூற்றாண்டில் அளித்த நிவந்தம் (கொடை) பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. 
பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் செய்ய ஏதுவாக ஒரு மண்டபத்தை (சனிவார மண்டபம்) கட்டிக்கொடுத்துள்ளார். அவர் ஒரு வைணவராக இருத்தல் கூடும். இந்தக் கல்வெட்டில் உள்ள ஐந்தாவது வரிதான் குலோத்துங்கனின் வெற்றியைக் கோடிட்டுக் காட்டுகிறது. 
"விசாகப்பட்டினமான குலோத்துங்க சோழ பட்டணத்தில்' எனும் வரியின் மூலம் ஊர்ப்பெயர் மாற்றம் உறுதிப்படுகிறது. குலோத்துங்கனுக்காக, படை நடத்திச் சென்ற கருணாகரத் தொண்டைமான், குலோத்துங்க சோழனின் கலிங்க வெற்றிக்குப் பின்னர் அவ்வூரின் (விசாகப்பட்டினம்) பெயரை "குலோத்துங்க சோழபட்டணம்' என்று மாற்றியதை இவ்வரி உறுதிப்படுத்துகிறது.
கல்வெட்டின் சிறப்பம்சங்கள்: 1. தமிழர்கள், கலிங்க நாடுவரை (இன்றைய ஒடிஸா மாநிலப் பரப்பு),  வாணிகத் தொடர்பில் இருந்திருக்க வேண்டும். 2. சந்திரன் செட்டியாரின் இன, மொழிப்பற்று தெற்றெனப் புலப்படுகிறது. கி.பி. 11ஆம் நூற்றாண்டு நிகழ்வை, ஏறத்தாழ 200 ஆண்டுகள் கழிந்த பின்பும் தம்நினைவில் நிறுத்தி ஊர்ப்பெயர் மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

3. ஐந்தாவது வரியில் உள்ள சிறப்புச்செய்தி, இதுநாள் வரை தமிழகம் அறியாத ஒன்று என்று கூறலாம். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையிலும் இச்செய்தி ஆவணப்படுத்தப்படவில்லை. 
ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழக வரலாற்றை எழுதிய, குறிப்பாக பிற்காலச் சோழர்களைப் பற்றி எழுதிய பெரும் பேராசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார், பி.டி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார், தி.வை. சதாசிவ பண்டாரத்தார், எல்.டி. சுவாமிக் கண்ணுப் பிள்ளை, டாக்டர் சி. மீனாட்சி, டாக்டர் கே.கே. பிள்ளை, டாக்டர் கே.வி. இராமன் போன்றோரில் எவரும் "விசாகப்பட்டினமான குலோத்துங்க சோழ பட்டணம்' பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
4."கலிங்கத்துப் பரணி' தமிழ் இலக்கிய வகுப்பில் அணி இலக்கணத்திற்கும், இயற்கை இறந்த நிகழ்வுகளுக்கும் மட்டுமே சான்றாக எடுத்தாளப்படுகிறது. ஆனால், இக்கல்வெட்டு கலிங்க நாட்டில் போர் நடந்ததையும், அதில் குலோத்துங்க சோழன் வெற்றி வாகை சூடியதையும் உறுதிப்படுத்துகிறது. 
எப்படியெனில், வென்றதன் நினைவாகத்தான் ஊர்ப்பெயர் மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். அந்த வகையில்தான் விசாகப்பட்டினத்தின் 
பெயரைக் "குலோத்துங்க சோழபட்டணம்' என்று கருணாகரத் தொண்டைமான் மாற்றியிருக்க வேண்டும்.
இந்தக் கல்வெட்டின் மூலம் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்பை, தமிழ்கூறு நல்லுலகம் ஒரு புதிய வரவாக ஏற்றுக்கொள்ளும் என்று நம்புவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com