குறளும் குமரேச வெண்பாவும்

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பினை விரித்துரைத்த புலவர்கள் பலர். 1330 குறட்பாக்களுக்கும் உரைதந்தவர்  பதின்மர்.
குறளும் குமரேச வெண்பாவும்

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சிறப்பினை விரித்துரைத்த புலவர்கள் பலர். 1330 குறட்பாக்களுக்கும் உரைதந்தவர்  பதின்மர். இவற்றுள் பரிமேலழகரின் உரை முதன்மையதாய்க் கொள்ளப்படுகிறது. இது கற்றவர்களேயன்றி மற்றவருக்கு விளங்காமையால் பல விளக்க உரைகளும் தற்காலத்தே எழுந்துள்ளன.

காவியங்களின் கொள்கை, நீதியை நமக்குப் போதிப்பதே. இவை கதைகளாக உள்ளதனால் இவற்றையே அடிப்படையாகக் கொண்டு திருக்குறளின் கருத்துக்களை விரித்துரைத்தால் கற்பவர்க்கு எளிதாமெனக் கருதி மாதவ சிவஞான சுவாமிகள் "சோமேசர் முதுமொழி வெண்பா' எனவொரு நூலை இயற்றினார். இதில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து அதன் கருத்திற்கேற்ற கதைகளைப் புகுத்தி வெண்பாக்களாக யாத்துள்ளார்.

இவ்வழியைப் பின்பற்றி, ஜெகவீர பாண்டியன் எனும் புலவர் 1330 குறட்பாக்களுக்கும் பொருத்தமான கதைகளை இராமாயணம், மகாபாரதம் முதலிய இதிகாசங்கள், கிரந்தம், பாகவதம் முதலிய புராணங்கள், சிந்தாமணி, சிலப்பதிகாரம் ஆகிய காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்கநூல்கள், இன்னும் வேறு பல நூல்கள் ஆகியவற்றினின்றும் தேர்ந்தெடுத்து குறட்பாக்கள் கூறும் கருத்துக்கிணங்க அக்குறட்பாக்களையும் இணைத்து, ஒரு தனிச்சீருடன் நேரிசை வெண்பாக்களாக "திருக்குறட் குமரேச வெண்பா' எனும் பெயரில்  இயற்றியளித்துள்ளார்.

இந்நூலில், கருத்துகளை வெண்பாக்களின் முதலிரண்டடிகளால் தமது குலதெய்வமான குமரேசன் முன்னிலையில் விண்ணப்பித்தும் அவற்றிற்கு விடை கூறுமுகமாக ஈற்றிரண்டடிகளாக குறட்பாக்களை இணைத்தும் எடுத்துக்காட்டியுள்ளார். 

ஆசிரியரே இப்பாக்களுக்குரிய கதைகளையும் உரையாக விளக்கியருளியுள்ளார். திருக்குறளை நயக்கும் அனைவரும் இந்நூலைப் படித்து இன்புறவேண்டும். இந்நூல் நூறு ஆண்டுகளின் முன்பு (1924-இல்) வெளியிடப்பட்டுள்ளது. 

நூலின் நயத்தைக் கீழ்க்காணும் இரு வெண்பாக்களால் அறிந்து கொள்ளலாம்.
கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் மூன்றாவது குறளைச் சேர்த்தமைத்த வெண்பாவின் பொருள்:

"குமரேசா! மார்க்கண்டர் நீடிய வாழ்வினையும் பேரின்பத்தையும் இந்நிலமிசை ஏன் விரும்பினார் என்றால், அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிக்ளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் என்பதனால்தான்'.    

நீடியவாழ் வெய்தி நிலமிசையேன் மார்க்கண்டர்
கூடினர்பே ரின்பம் குமரேசா - நாடி
மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 

மார்க்கண்டேயரின் விரிவான கதை கந்தபுராணத்திலுள்ளது. ஆயுள் சிறிதே உடையவனாயினும் அறிவில் பெரியவனாகிய மகனை வேண்டிப் பெற்றனர் மார்க்கண்டேயரது பெற்றோர். மார்க்கண்டேயர் தன் பெற்றோர் கவலையைக் குறிப்பாலுணர்ந்து சிவபெருமானை நினைத்துத் தவமிருந்தார். காலன் அருகே வந்துற்றகாலை, பரமன் தோன்றி அப்பாலகனைக் காத்துக் காலனைக் காலால் உதைத்து வீழ்த்தினார். ஆதலால் இறைவனடி சேர்ந்தவர் நீண்டகாலம் இன்புற்று வாழ்வர் எனும் கருத்து பெறப்பட்டது.

இறைமாட்சி எனும் அதிகாரத்துக் குறட்பா ஒன்று:

"குமரேசா! புரூரவன் ஏன் தேவர்களையும் விஞ்சிய துணிவு கொண்டு விளங்கினான்? ஏனென்றால்,  சோர்வற்ற தன்மை, உயர்ந்த கல்வி, பெரும் துணிவு ஆகிய இம்மூன்றும் உலகை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை'.  

திண்டோட் புரூரவனேன் தேவரினும் முந்துணிவு
கொண்டுவென்று மீண்டான் குமரேசா- மண்டியே
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.  

புரூரவன் எனும் அரசன் சந்திரகுல மன்னன். தேவர்களின் அரசனான இந்திரனின் நண்பன். மகாவீரன்; மிக்க கல்வியறிவுடையவன். இவன் புகழ் எங்கும் பரந்திருந்தது. அரக்கனிடமிருந்து தேவமங்கை ஊர்வசியை விடுவித்துக் காத்தவன். இவனைப் பற்றிய செய்திகளை மகாபாரதம் மற்றும் வேறு பல புராணங்களில் காணலாம். தேவர்களே வியக்கும் துணிவும் பரந்த கல்வியறிவும் வீரமும் உடையவன். 

பழமை வாய்ந்த திருக்குறளுடன், புராண, இதிகாசக் கதைகளை இணைத்து விளக்கும் இந்நூல் அனைவரும் படித்து இன்புறத்தக்கது.

இவ்வாறு  திருக்குறள் கூறும் பல நீதிகளையும் கதைகளாக இணைத்துப் பாடிய வெண்பாக்களைக் கொண்டதே திருக்குறட் குமரேச வெண்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com