தமிழர் வரலாறு கூறும் அகநானூறு!

அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்றும் ஒரு பெயர் உண்டு. 
தமிழர் வரலாறு கூறும் அகநானூறு!


அகநானூற்றுக்கு நெடுந்தொகை என்றும் ஒரு பெயர் உண்டு. 

உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி
அருள்புரி நெஞ்சமொடு எஃகுதுணை யாக
வந்தோன் கொடியனும் அல்லன்; தந்த
நீ தவறு உடையையும் அல்லை; நின்வயின்
ஆனா அரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே!

22 அடிகள் கொண்ட அகநானூற்றுப் பாடலொன்றின் (72) இறுதி ஆறு அடிகள் இவை. முழுப்பாடலும் தலைவி கூற்று; திணை குறிஞ்சி; பாடியவர் எருமை வெளியனார் மகனார் கடலனார். 

சரி, ஏனைய 16 அடிகளில் என்ன தான் சொல்கிறாள் தலைவி? தலைவன் இரவுப் பொழுதில் - குறியிடம் நோக்கி வருகையில் வழியில் உள்ள இடர்ப்பாடுகளை எண்ணி வருந்துகிறாள் அவள். "பெருமழை பொழியும் நள்ளிரவு நேரத்தில் வானம் இருட்டைக் கிழிப்பது போல் மின்னும். மின்மினியின் வெளிச்சத்தில் புற்றாஞ் சோற்றைத் தோண்டி உண்ணும் கரடி, இரும்பினையடிக்கும் கொல்லனைப் போலத் தோன்றும். 

ஆற்று வெள்ளம் கற்களில் மோதி ஒலிக்க, அதில் வாழும் முதலைகள் நினைப்போரையும் நடுங்கச் செய்யும். கருவுற்றிருக்கும் பெண்புலியின் பசியைப் போக்க ஆண் புலியானது ஆண்பன்றியைக் கொன்று இழுத்துச் செல்லும். அக்குறுகிய வழியில் தலைவன் நம்மீது அன்புடையவனாய் வேலையே துணையாகக் கொண்டு நம்மை நாடி வருகிறான். 

அப்படி வந்தவன் கொடியனும் அல்லன்; எங்கள் காதலுக்கு வழியமைத்துத் தந்த நீயும் தவறுடையை அல்லை; இத்துன்பங்களுக்குக் காரணமான யானே தவறுடையேன்'  என்று தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் தலைவி. 

புறநானூற்றில் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் கரிகால் வளவனுக்கும் வெண்ணிக்குயம் என்னுமிடத்தில் நடந்தபோரில் சோழன் செலுத்திய நெடுவேல், சேரமான் மார்பிற்பட்டு முதுகுப்புறத்தே உருவிச் சென்றது. இதனால் உண்டான புறப்புண்ணுக்கு நாணிச் சேரன் வாளொடு வடக்கிருந்து உயிர் நீத்தான். இதனைக் கண்ட கழாத் தலையார் என்னும் புலவர்,

தன்போல் வேந்தன் முன்புகுறித்து எறிந்த
புறப்புண் நாணி; மறத்தகை மன்னன்
வாள்வடக் கிருந்தனன்; ஈங்கு
நாள் போல கழியல ஞாயிற்றுப் பகலே!     (புறநா. 65:9-12)

என மனம் வருந்திப் பாடுகிறார். கரிகாலனைப் பற்றி வெண்ணிக் குயத்தியார் பாடிய புறப்பாட்டிலும் (66) இக்குறிப்பு இடம் பெற்றுள்ளது.

இதே செய்தியை மாமூலனார் எனும் புலவர் அகநானூற்றில் (55) பதிவு செய்துள்ளார். உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிட்ட மகளுக்கு இரங்கித் தாய் பேசுவதாக அமைந்த பாலைத்திணைப் பாடல் அது. "புறப்புண் நாணி வடக்கிருந்த சேரலாதனோடு சேர்ந்து அரும்பெறல் உலகம் சென்ற சான்றோர் போல நானும் என் உயிரை நீத்தேன் இல்லையே. உயிர்மீது கொண்ட ஆசையால் இன்னும்  வாழ்கின்றேனே' 

என்று நொந்து கொள்கிறாள்.
பொருதுபுண் நாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென,
இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெறல் உலகத்து அவனொடு செலீஇயர்
பெரும்பிறிது ஆகியாங்கு, பிரிந்து இவண்
காதல் வேண்டி, என்துறந்து
போதல் செல்லாஎன் உயிரொடு புலந்தே.
(அகநா.55:11-17)
என்பன பாடலடிகள்.


இது முன்னர்க் குறித்த புறநானூற்றுப் பாடலுக்கு அரணாவதுடன் கூடுதலாக ஒரு தகவலையும் தருகிறது. வடக்கிருந்து உயிர்நீத்த சேரனோடு, சான்றோரும் உயிர் நீத்தமை பற்றிய செய்தி கழாத் தலையார் பாட்டில் இல்லை. ஆனால் மாமூலனார் பாட்டில் அரிய வரலாற்றுக் குறிப்பாக அது இடம் பெற்றுள்ளது.

இவ்வாறே தலையாலங்கானத்தில் நெடுஞ்செழியனுக்கும் அவன் பகைவர்க்கும் நடைபெற்ற போரைக் குறித்த பாடல்கள் (19;23;25;72;76;77;78;79) புறநானூற்றில் உள்ளன;

குடபுலவியனார் கல்லாடனார், மாங்குடிகிழார், இடைக்குன்றூர் கிழார் ஆகியோர் பாடியுள்ளனர். "நகுதக்கனரே நாடு மீக்கூறுநர்' என்னும் பாடல் நெடுஞ்செழியனே பாடியதாகும். இங்கெல்லாம் பாண்டியனொடு பொருத பகைவரை - இருபெருவேந்தர், ஐம்பெருவேளிர், வம்ப மள்ளர், புனைகழல் எழுவர் எனப்  பொதுப்படக் குறிப்பதல்லால் அவர் தம் ஊர் பேர் பற்றிய குறிப்பில்லை.

ஆனால் மதுரை நக்கீரர் அகநானூற்றில்- மருதத்திணை அமையப் பாடிய 36-ஆம் பாடலில் -அவ்வெழுவர் யார், எவர் என்பதற்கான விடை கிடைக்கிறது.

"வையைக் கரையின் விரிமலர்ச் சோலையில் நீ பரத்தையை மணந்த போது உண்டான அலர், ஆலங்கானத்து நடந்த போரில் பகைவர் எழுவரைப் பாண்டியன் வென்ற போது பிறந்த ஆரவாரத்தினும் பெரிதாக இருந்தது' என்கிறாள். பரத்தையிற் பிரிந்து தன்னிடம் வந்த தலைவனைக் குறித்துத் தலைவி ஊடல் கொண்டு பேசியது இது.

ஆலங் கானத்து அகன்தலை சிவப்ப
சேரல்1 செம்பியன்2 சினங்கெழு திதியன்3
போர்வல் யானைப் பொலம்பூண் எழினி4
நார்அரி நறவின் எருமையூரன் 5 ...
இருங்கோ வேண்மான் 6 
இயல்தேர்ப் பொருநன்7 என்று ...
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் 
கொன்றுகளம் வேட்ட ஞான்றை
வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

என்பது பாடற்பகுதி. இங்குச் சேரலும் செம்பியனும் இருபெருவேந்தர்; ஏனையோர் ஐம்பெருவேளிர் ஆவர்.

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்' எனத் தொடங்கும் இடைக்குன்றூர் கிழாரின் புறநானூற்றுப் பாடலில்,  "புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க' (76:12) என்று மட்டுமே சொல்லியிருக்க அந்த எழுவர் - இருபெரு வேந்தரும் ஐம்பெருவேளிரும் என்பதைச் சொல்லித் தெளிவுண்டாக்குகிறது நக்கீரர் பாடல். 

எனவே தமிழர் வரலாறு பேசும் நூலாகவும் அகநானூறு திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com